வடக்கு- கிழக்கு பிராந்தியத்திற்கு பைசர், அஸ்றாசெனேகா, ஸ்புட்னிக் போன்ற கொரோனா தடுப்பூசிகளை மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேனும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ் ஈழவிடுதலை இயக்கத்தின் மத்திய குழு உறுப்பினரும் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான செ.மயூரன் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
குறித்த கடிதத்தில் செ.மயூரன் மேலும் தெரிவித்துள்ளதாவது,
வடக்கு- கிழக்கு பகுதிகளில் வசிக்கும் மக்களின் நன்மை கருதி அனைத்துவகை கொரோனா தடுப்பூசிகளையும் இந்தப் பிராந்தியத்திற்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக வடக்கு- கிழக்கில் வசிக்கும் மக்கள் அல்லது இளைஞர்களில் அநேகமானவர்கள், ஐரோப்பா உள்ளிட்ட மேற்கத்தேய நாடுகளுடன் தொடர்புகளை பேணுபவர்களாக உள்ளனர்.
குறிப்பாக தொழில் நோக்கத்திற்காகவோ அல்லது பல்வேறு காரணங்களிற்காகவோ வெளிநாடுகளிற்கு செல்லும் நோக்கம் அவர்களிடம் இருக்கின்றது. எனவே, நாட்டின் தலைவர் என்றவகையில் அதனை நீங்கள் நன்கு அறிந்திருப்பீர்கள் என நம்புகின்றேன்.
மேலும் ஐரோப்பா உள்ளிட்ட மேற்கத்தேய நாடுகளிற்கு செல்லும் இலங்கையை சேர்ந்த பயணிகள் பைசர், அஸ்ராசெனேகா, மொடேர்னா போன்ற கொரோனா தடுப்பூசிகளின் இரண்டு செலுத்துகைகளையும் பெற்றிருக்கவேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் வடக்கு கிழக்கு பகுதியில் இதுவரையான காலப்பகுதியில் சீனா நாட்டினால் வழங்கப்பட்ட சினோபார்ம் தடுப்பூசிகளே அதிகம் ஏற்றப்பட்டு வருகின்றது. இதனால் வெளிநாடு செல்லும் நோக்கத்துடன் இருக்கும் அனேகமான பொதுமக்கள் சீனநாட்டு தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ளாத அபாய நிலைமை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலைமை தொடரும் பட்சத்தில் கொரோனா தொற்றுப்பரவலடைந்து, உயிரிழப்புக்களும் மென்மேலும் அதிகரிக்கும் அபாயநிலமை காணப்படுகின்றது ஆகவே, இவைகளை கருத்தில் கொண்டு நாட்டின் தலைவர் என்ற வகையில் வடக்கு- கிழக்கு பிராந்தியத்திற்கு பைசர், அஸ்றாசெனேகா, ஸ்புட்னிக் போன்ற கொரோனா தடுப்பூசிகளை மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேனும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.