இராஜாங்க அமைச்சர் கப்ரால் இராஜினாமா?

நிதி, மூலதனச் சந்தை மற்றும் அரச தொழில் முயற்சி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தன்னுடைய இராஜாங்க அமைச்சுப் பதவியையும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியையும் இராஜினாமா செய்யவுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன் பின்னர், மத்திய வங்கியின் ஆளுநராக அவர், மீண்டும் பதவியேற்க உள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இராஜாங்க அமைச்சுப் பதவியிலிருந்து விலகி, பாராளுமன்ற உறுப்பினர் பதவியையும் யோசித ராஜபக்‌ஷவுக்கு வழங்கப் போகிறீர்களாமே என்கிற எதிர்க்கட்சியின் கேள்விக்கு, நிதி, மூலதனச் சந்தை மற்றும் அரச தொழில் முயற்சி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால் பதிலளிக்க மறுத்துள்ளார்.

பாராளுமன்றத்தின் இன்றைய (07) அமர்வில் கலந்துக்கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்  சமன் பிரியந்த ஹேரத், “நிதி இராஜாங்க அமைச்சர் பதவியிலிருந்து  விலகுவதற்கு நீங்கள் தீர்மானித்துள்ளதாகவும் உங்களுக்கு வேறு ஒரு உயர்  பதவி காத்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இது உண்மையா?“ என்றார்.

எனினும், இடையீட்டு கேள்வியானது, தான் பதிலளித்த கேள்வியுடன் தொடர்புப்படாத  கேள்வியாகும் எனக் கூறிய இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால், இராஜினாமா தொடர்பான கேள்விக்கு  பதிலளிக்க மறுத்துவிட்டார்.