கொவிட் தொற்று நிலைமை விசேட காரணல்ல – மேன்முறையீட்டு நீதிமன்றம்

சந்தேகநபர்களுக்காக பிணை கோரிக்கையை சமர்ப்பிக்கும் போது கொவிட் தொற்று நிலைமையை விசேட காரணமாக ஏற்றுக் கொள்ள முடியாது என மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

போதைப்பொருள் குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர் ஒருவருக்காக சமர்ப்பிக்கப்பட்ட சீராக்கல் மனு ஒன்றை நிராகரித்த மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் குழாமினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அததெரண நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.

கடந்த வருடம் சிலாபம் பிரதேசத்தில் 67 கிலோகிராம் ஹேரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை பிணையில் விடுதலை செய்யுமாறு கோரி குறித்த சீராக்கல் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

குறித்த சீராக்கல் மனுவின் ஊடாக நாட்டில் தற்போது பரவி வரும் கொவிட் 19 தொற்றை விசேட காரணமாக கருத்திற் கொண்டு இந்த சந்தேகநபரை பிணையில் விடுவிக்குமாறு கோரப்பட்டிருந்தது.

கொரோனா தொற்று நிலைமை அனைத்து கைதிகளுக்கும் பொதுவானது என சுட்டிக்காட்டிய நீதிபதிகள் குழாம் அதனை விசேட காரணமாக கருத முடியாது என தீர்ப்பளித்துள்ளனர்.