கொழும்பு நகரிலுள்ள மேலும் பெறுமதிமிக்க 03 காணிகளை 99 வருட குத்தகை அடிப்படையில் முதலீட்டு திட்டங்களுக்கு வழங்குவதற்கான விளம்பரங்கள் பத்திரிகைகளில் வௌியிடப்பட்டிருந்தன.
நகர அபிவிருத்தி அதிகார சபையினரால் இந்த விளம்பரங்கள் பிரசுரிக்கப்பட்டுள்ளன.
கலப்பு அபிவிருத்தி திட்டத்திற்காக கொழும்பு டி.ஆர். விஜேவர்தன மாவத்தையிலுள்ள 03 காணிகளை வழங்குவதற்கு இதன்மூலம் விலைமனு கோரப்பட்டுள்ளது.
விளம்பரத்தின் படி,
கொழும்பு – 10, டி.ஆர். விஜேவர்தன மாவத்தையின் இலக்கம் 12 இலுள்ள இலங்கை கண்காட்சி மற்றும் மாநாட்டு மத்திய நிலையம்
இலக்கம் 38 இலுள்ள மக்கள் வங்கி கிளை
இலக்கம் 40 இலுள்ள சதொச கட்டடத் தொகுதி என்பன இந்த திட்டத்திற்காக முன்மொழியப்பட்டுள்ளன.
இலங்கை கண்காட்சி மற்றும் மாநாட்டு மத்திய நிலையம் அமைந்துள்ள காணியின் பெறுமதி 3.7 பில்லியன் ரூபாவாகும்.
மக்கள் வங்கியின் கிளை அமைந்துள்ள காணியின் பெறுமதி 1.3 பில்லியன் ரூபா எனவும் சதொச கட்டடத் தொகுதி அமைந்துள்ள காணியின் பெறுமதி 1.6 பில்லியன் ரூபா எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த காணிகளில் மேற்கொள்ளப்படவுள்ள திட்டங்களுக்கான யோசனைகளை முன்வைப்பதற்கு ஒரு மாதம் மாத்திரமே வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை, செலந்திவ முதலீட்டு திட்டத்தினூடாகவும் வௌிவிவகார அமைச்சு அமைந்துள்ள கட்டடத் தொகுதி, ஹில்டன் மற்றும் க்றேண்ட் ஒரியன்ட் ஹோட்டல்கள் உள்ளிட்ட கொழும்பு நகரின் பெறுமதியான பல சொத்துக்களை முதலீட்டு திட்டங்களுக்கு வழங்குவதற்கான யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.