சர்வதேச நாடுகளிடம் எம்.கே.சிவாஜிலிங்கம் முக்கிய கோரிக்கை

சர்வதேச நாடுகளிடம் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் 5 அம்ச கோரிக்கையை  முன்வைத்துள்ளார்.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை நடைபெற்ற தியாக தீபம் திலீபனின்  34ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வினை தொடர்ந்து இவ்வாறு 5 அம்ச கோரிக்கையை அவர் முன்வைத்துள்ளார்.

குறித்த 5 அம்ச கோரிக்கையில் எம்.கே.சிவாஜிலிங்கம் முன்வைத்துள்ளதாவது, இலங்கை அரசால் தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட படுகொலையை நிரூபித்தல்.

இனப் படுகொலைக்காக இலங்கை அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்துதல்.

இனப் படுகொலை மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதி செய்தல்.

தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட சர்வதேச குற்றங்களுக்காக ஈடுசெய் நீதி கிடைப்பதை உறுதி செய்தல்.

ஈடு செய் நீதி கிடைப்பதன் மூலம் இலங்கையின் வடக்கு கிழக்கு பிராந்தியத்தில் தமிழ் தேசிய இனத்தின் அரசியல் அபிலாசைகளைத் தெரிந்து கொள்ளக் கூடிய விதத்தில் பொதுசன வாக்கெடுப்பு  உள்ளிட்ட கோரிக்கைகளை அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், இந்த  5 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு குவாட் அமைப்பில் அங்கம் வகிக்கும் அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், அவுஸ்ரேலியா உள்ளிட்ட நாடுகளிடம் எம்.கே.சிவாஜிலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார்.