எமது தமிழ் அரசியற் கைதிகளை அச்சுறுத்தி, அவமானப்படுத்திய லொஹான் ரத்வத்தயின் பாதணியை நீங்கள் நக்குவதற்காகவா அவரை மட்டக்களப்பு மாவட்டத்திற்கு அழைத்து வந்தீர்கள் என்ற கேள்வியையே ஒட்டுமொத்த தமிழ் மக்களும் கேட்கின்றார்கள் என தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமாகிய கோவிந்தன் கருணாகரம் ஜனா தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் பாரளுமன்ற உறுப்பினரின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த 25ம் திகதி மட்டக்களப்பு மாவட்டத்திற்கு கரும்புள்ளி ஏற்பட்டிருக்கின்றது. அண்மையில் சில நாட்களாக இலங்கையிலே குறிப்பாகத் தமிழ் மக்கள் மத்தியில் பெயர் அடிபட்டவர் மட்டக்களப்பிற்கு வருகை தந்து பொதுஜன பெரமுன கட்சி அலுவலகத்திலே இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன், கட்சியின் மாவட்ட அமைப்பாளர் சந்திரகுமார் ஆகியோருடன் இணைந்து அவரது கட்சி அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கின்றார்.
தகவல்களின் அடிப்படையில் அநுராதபுரம் சிறைச்சாலைக்கு நிறை வெறியுடன் சென்று தமிழ் அரசியற் கைதிகளைத் தன் முன் முழந்தாழிட வைத்து தனது கைத்துப்பாக்கியை அவர்களின் தலையில் வைத்து அச்சுறுத்திய அமைச்சர் லெஹான் ரத்வத்த கைதிகளை அச்சுறுத்தியத்தற்கும் மேலாக தனது பாதணிக் கால்களை நக்கும்படி செய்து அவமானப்படுத்திவயரை இந்த மட்டக்களப்பு மண்ணிற்கு அழைத்து வந்தது, அவருடன் இணைந்து சந்திப்பை நடத்தியது ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் அவமதிக்கும் ஒரு செயலாகவே பாhர்க்கின்றேன்.
லெஹான் ரத்வத்தயின் தகப்பனாhர் அனுரத்த ரத்வத்த நான் பாராளுமன்றத்திலே இருந்த 1989ம் ஆண்டு காலகட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவர். ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவுக்கு மிகவும் நெருக்கமானவர். சந்திரிக்காவின் ஆட்சிக் காலத்திலே நான் நினைக்கின்றேன் பாதுகாப்பு அமைச்சராகவும் இருந்தவர். 1988ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலிலே பிரேமதாசாவை எதிர்த்துப் போட்டியிட்ட ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவுக்கு ஆதரவு கேட்டு தமிழீழ விடுதலைப் புலிகளை நேரடியாகச் சென்று சந்தித்தவர்.
தந்தை தேர்தலில் வெல்வதற்கு தமிழ் மக்களின் ஆதரவு வேண்டும். ஆனால் மகன் இராஜாங்க அமைச்சராக இருந்துகொண்டு தமிழ் அரசியற் கைதிகளை அவமானப்படுத்துகின்றார்.
2010ம் ஆண்டு பொதுத் தேர்தலின் போது கூட கண்டியிலே பதினொரு முஸ்லீம் இளைஞர்களைச் சுட்டுக் கொண்ட சம்பவத்தில் தகப்பன் மகன் இருவரும் சம்பந்தப்பட்டவர்களாகத் தகவல்கள் இருக்கின்றன. அந்த பரம்பரைச் செயல்களினூடாவே அரசியல் நடத்துபவர், தற்போது தமிழ் அரசியற் கைதிகளைத் தன் அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி தனது பாதணியை நக்க வைத்துள்ளார்.
நான் பொதுவாக அரசியல்வாதிகளைத் தனிப்பட்ட ரீதியில் விமர்சிப்பவன் அல்ல. ஆனாலும் நானும் ஆயுதப் போராட்டத்தில் இருந்து, அதனூடாக அரசியலுக்குள் வந்தவன் என்ற அடிப்படையில் எனது இரத்தம் கொதிக்கின்றது. அதனால்தான் எனது கருத்துக்கள் இவ்வாறு அமைகின்றது.
மேற்சொன்னவாறு எமது தமிழ் அரசியற் கைதிகளை அச்சுறுத்தி, அவமானப்படுத்திய லொஹான் ரத்வத்தயின் பாதணியை நீங்கள் நக்குவதற்காகவா அவரை மட்டக்களப்பு மாவட்டத்திற்கு அழைத்து வந்தீர்கள் என்ற கேள்வியையே ஒட்டுமொத்த தமிழ் மக்களும் கேட்கின்றார்கள். லொஹான் ரத்வத்த ஒரு கனவான் அரசியல்வாதியல்ல, கழிவு அரசியல்வாதி. அந்தக் கழிவு அரசியல்வாதியை மட்டக்களப்பிற்குக் கொண்டு வர வேண்டாம்.
அவருக்காக பாராளுமன்றத்திலும் வெளியிலும் குரல் கொடுப்பவர்கள் இருவர். ஒருவர் பொலிஸிற்குப் பொறுப்பானவர். சரத் வீரசேகர கூறுகின்றார். அவர் கையில் வைத்திருந்தது அனுமதிப்பத்திரம் உள்ள துப்பாக்கியாம், அனுமதிப்பத்திரம் வைத்துள்ள துப்பாக்கி என்றால் கொலை அச்சுறுத்தல் விடலாமா? இல்லை கொலை தான் செய்யலாமா?
அவருடன் இணைந்து லொஹானுக்கு ஆதரவு கொடுக்கும் மற்றையவர் விமல் வீரவன்ச. இலங்கையில் முதற்தர இனத்துவேசி. அவர் சிறைச்சாலை அமைச்சராக இருந்து செய்த குற்றத்திற்காகவே அவரது இராஜாங்க அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்திருக்கின்றார். அவர் வகிக்கும் ஏனைய பதவிகளை இராஜினாமா செய்ய வேண்டாம் என்கின்றார். அங்கும் ஏதாவது நடக்க வேண்டும். அதன் பின்னர் தான் அதிலிருந்தும் அவரை இராஜினாமா செய்ய வைப்பார்கள் என்று நினைக்கின்றேன்.
இலங்கையின் நீதி அமைச்சர் கடந்த பாராளுமன்றத்திலே சம்மந்தப்பட்டவர்களிடமும், சம்மந்தப்பட்டவர்களது குடும்ப உறுப்பினர்களிடமும் பகிரங்கமாக மன்னிப்புக் கோருகின்றார். ஒரு ஓய்வுபெற்ற நீதிபதி அவர்களது தலைமையில் இந்தச் சம்பவம் சம்மந்தமாக விசாரிப்பதற்கான குழுவை நியமித்து விசாரணை நடைபெற்று வருகின்றது. இந்த விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது அந்த இராஜாங்க அமைச்சரை மட்டக்களப்பிற்கு அழைத்து வந்து மாலை அணிவித்து நீங்கள் அவரை நல்லவராகக் காட்ட முற்படுகின்றீர்கள்.
இது மாபெரும் தவறு என்பதுடன், பன்றியுடன் சேரும் கன்றும் பவ்வி அருந்தும் என்ற பழமொழிக்கேற்றால் போலான வேலையையே செய்துள்ளீர்கள் என்பதை மிகவும் மனவருத்தத்துடன் கூறிக் கொள்கின்றேன். இவ்வாறான செயற்பாடுகளை இத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள். எதிர்காலத்திலும் செய்து விடாதீர்கள் என்று தெரிவித்தார்.