கடுமையான நடவடிக்கை என சரத் வீரசேகர எச்சரிக்கை – ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளிடம் காட்டுமாறு ஆசிரியர் சங்கம் சவால் !

தொழிற்சங்க போராட்டங்களுக்கு எதிரான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்ற பொது பாதுகாப்பு அமைச்சரின் எச்சரிக்கைக்கு மத்தியில் ஆசிரியர் மற்றும் அதிபர்கள் நாடளாவிய ரீதியில் போராட்டங்களை நடத்த தீர்மானித்துள்ளனர்.

கொரோனா பரவலுக்கு மத்தியில் நாடு திறப்பட்டுள்ள நிலையில் போராட்டம் நடத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என நேற்று முன்தினம் அமைச்சர் சரத் வீரசேகர எச்சரித்திருந்தார்.

ஒன்றுகூடல்களால் மற்றுமொரு கொரோனா அலை ஏற்பட்டால் நாடு கடுமையான சிக்கலை எதிர்கொள்ளும் என்பதனால் மக்களின் நலனுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக கூறியிருந்தார்.

இருப்பினும் சர்வதேச ஆசிரியர் தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் 312 போராட்டங்கள் நடத்த திட்டமிட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுசெயலாளர் அறிவித்துள்ளார்.

இதேவேளை இலங்கைக்கு வருகைதந்துள்ள ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் முன்னிலையில் இந்த கடுமையான நடவடிக்கைகளை முன்வைக்குமாறு இலங்கை ஆசிரியர் சங்க செயலாளர் ஜோசப் ஸ்டாலின் அரசாங்கத்திற்கு சவால் விடுத்துள்ளார்.

தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுத்து 84 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் அதற்கான தீர்வினை வழங்க தவறியுள்ள அரசாங்கம் போராட்டத்தை பல்வேறு வழிகளில் ஒடுக்க முயற்சிக்கிறது என ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுசெயலாளர் குற்றம் சாட்டியுள்ளார்.

கடந்த ஜூலை மாதம் 12 ஆம் திகதி முதல் சம்பள முரண்பாடு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி ஒன்லைன் கற்பித்தல் நடவடிக்கைகள் மற்றும் பரீட்சை நடவடிக்கைகளில் இருந்தும் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் விலகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.