பண்டோரா பேப்பர்ஸ் விவகாரம் – சுயாதீன விசாரணை கோரி ஜனாதிபதிக்கு நடேசன் கடிதம்!

பண்டோரா பேப்பர்ஸில் தனக்கும் தனது மனைவிக்கும் எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக சுயாதீன விசாரணையொன்றை மேற்கொள்ளுமாறு திருக்குமார் நடேசன் ஜனாதிபதியிடம் கோரியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக உலகின் பெரும்புள்ளிகள் பலரின் மறைமுக சொத்துக்கள் தொடர்பான தகவல்களை வெளிப்படுத்திய பண்டோரா பேப்பர்ஸில் பெயர் குறிப்பிடப்பட்டிருந்த இலங்கையின் பிரபல தொழிலதிபரான திருக்குமார் நடேசன், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.

தனக்கும் தனது மனைவியான முன்னாள் அமைச்சர் நிருபமா ராஜபக்ஷவுக்கும் சொந்தமான மறைமுக வங்கிக் கணக்குகள் மற்றும் சொத்துக்கள் வெளிநாடுகளில் உள்ளதாகக் குறித்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அந்தக் கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளார்.

அவ்வாறே, குறித்த ஆவணத்தில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள அனைவரும் குற்றவாளிகள் என்ற பொதுவான கருத்து தற்போது சமூகத்தின் மத்தியில் வியாபித்துள்ளது என்றும் குறித்த ஆவணத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் உள்ளிட்ட உலக தலைவர்கள் பெரும்பாலானோர் உத்தரவிட்டுள்ளனர் என்றம் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தம்மீதான குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்றும் தாம் எந்தவொரு குற்றச் செயற்பாடுகளையும் மேற்கொள்ளவில்லை எனவும் திருக்குமார் நடேசன் தனது கடிதத்தினூடாக ஜனாதிபதிக்கு சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில், ஓய்வுபெற்ற நீதிபதியொருவரின் தலைமையிலான விசாரணைக் குழாமொன்றினூடாக இது தொடர்பாக உடனடியாக விசாரணைகளை மேற்கொண்டு தனது மனைவியின் நற்பெயருக்கு ஏற்பட்டுள்ள கலங்கத்தை துடைப்பதற்கான பின்னணியை உருவாக்கித் தருமாறு அவர் மேலும் கோரியுள்ளார்.