இறுதிக்கட்டப் போரை வழிநடத்திய தளபதியின் மகளா ஜொகானி? வெளிவந்த பின்னணி

இறுதிக்கட்டப் போரில் மனித உரிமைகளை மீறிய கேர்ணல் பிரசன்ன டி சில்வாவின்  மகளே சிறிலங்காவின் பிரபல பாடகி ஜொகானி என்பது முன்னாள் இராணுவத் தளபதியும், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின்  அறிவிப்பின் மூலம் தெரியவந்துள்ளது.

சிறிலங்காவின் பிரபல பாடகிக்கு கிடைத்திருக்கும் அங்கீகாரத்திற்கு (“மனிகே மகே கித்தே” எனும் பாடல் மூலம் சர்வதேச இசை அரங்கில் தனது பெயரைப் பொறித்துள்ள நிலையில்) வாழ்த்து தெரிவித்துள்ள அவர், அவரது தந்தையாருடன் தான் பணியாற்றிய தருணங்கள், போர்க்கள அனுபவங்களை தனது முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ளார்.

இது குறித்த அவரது பதிவில், “சிறப்புப் படைகளின் தளபதியாக, 2006 இல் உங்கள் தந்தை கேர்ணல் பிரசன்ன டி சில்வா மாவிலாறை விடுவிக்க என்னை வவுனியாவிலிருந்து கல்லாறுக்கு வரவழைத்தார்.

அங்கு சென்ற நான், 2006ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10ஆம் திகதி அன்று, ஒரு வாரத்திற்குள், காலாட்படை, பீரங்கி, கொமாண்டோ படைப்பிரிவு மற்றும் விமானப்படை உதவியுடன், மாவிலாற்றை கைப்பற்றுமாறு சிறப்புப் படைகளுக்கு (1SF / 2SF / 3SF) உத்தரவிட்டேன். இந்த சிறப்பு தாக்குதலில் விடுதலைப் புலிகள் பயன்படுத்திய மாவிலாற்றின் முக்கிய மதகுகளை இராணுவம் மீட்டது.

இதனால், “மனிதாபிமான காரணிகளை” போரின் கருவிகளாக பயன்படுத்தக்கூடாது என்று விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு கற்பிக்கப்பட்டது.

மாவிலாக்குப் பின், கேர்ணல் பிரசன்ன டி சில்வா, சம்பூர், வாகரை, கதிரவெளி மற்றும் வெருகல் உட்பட கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை முதல் மட்டக்களப்பு வரையிலான அனைத்துப் பிரதேசங்களிலும் சிறப்புப் படைகளின் நடவடிக்கைகளுக்கு கட்டளையிட என்னை அழைத்தார்.

அவர் இறுதிப் போரில் 55 ஆவது மற்றும் 59 ஆவது பிரிவுகளின் தளபதியாக இருந்ததுடன், போர்க்களத்தில் சாதுர்யமாக இருந்தார். உங்கள் தந்தையின் திறமையான மற்றும் கூட்டு அபிலாஷைகளின் மூலமும், வீரம் மற்றும் தலைமைத்துவத்தின் மூலமும் கடந்த காலத்தில் இராணுவத்திற்கு கிடைத்த வெற்றிகள் போல, இன்று சர்வதேச அரங்கில் நீங்கள் எங்கள் தாய்நாட்டிற்கு பெரும் புகழை தேடி தந்துள்ளீர்கள்” எனப் பதிவிட்டுள்ளார்.

இதன் மூலம் இறுதிப் போரில் – போர்க்களத்தில் இடம்பெற்ற போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்களில் கேர்ணல் பிரசன்ன டி சில்வாவிற்கும் நெருங்கிய தொடர்பு உண்டென்பதை சரத் பொன்சேகாவின் இந்தப் பதிவு வெளிக்காட்டியுள்ளது.