இலங்கை தொடர்பில் இந்தியாவின் நிலைப்பாட்டை வெளியிட்டாரா – ரவூப் ஹக்கீம்

இலங்கையில் மாகாண சபைகளுக்கான தேர்தல்களை விரைவில் நடத்தி ஆளுனர்களின் அதிகாரத்தில் உள்ள மாகாணங்களுக்கு மக்கள் பிரதிநிதிகளை தெரிவுசெய்ய நடவடிக்கை எடுக்க அரசாங்கம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

மாகாணசபை தேர்தலை நடத்தி 13 ஆம் திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தும் செயற்பாடுகளை துரிதப்படுத்த வேண்டும் என்பதே இந்தியாவின் நிலைப்பாடு எனவும் அந்த கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம்(Rauf Hakeem) தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை, தேருநர்களைப் பதிவுசெய்தல் திருத்தச் சட்டமூலம், ஊழியர் சகாய நிதிய திருத்தச் சட்டமூலம் மற்றும் ஊழியர் சேமலாப நிதியச் சட்டத்தின் கீழ் கட்டளைகள் மீதான விவாதம் இடம்பெற்றது. இந்த விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம், மாகாணசபைகள் தேர்தல் காலம் தாழ்த்தப்படுவதற்கு நாம் அங்கம் வகித்த கடந்த அரசாங்கமும் பொறுப்புக்கூறியாக வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.

அப்போது எல்லை நிர்ணயங்கள் என்ற காரணிகளை கையில் எடுத்துக்கொண்டு காலத்தை கடத்தியது மாத்திரமல்லாமல் இறுதியாக இவற்றை கையாண்ட அமைச்சரே எல்லை நிர்ணய அறிக்கைக்கு எதிராக வாக்களித்த மிகப்பெரிய நகைச்சுவையும் அப்போது இடம்பெற்றதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மாகாண சபைகளுக்கான தேர்தல்களை விரைவில் நடத்தி ஆளுனர்களின் அதிகாரத்தில் உள்ள மாகாணங்களுக்கு மக்கள் பிரதிநிதிகளை தெரிவுசெய்ய நடவடிக்கை எடுக்க அரசாங்கம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டுமென ரவூப் ஹக்கீம் வலியுறுத்தியுள்ளார்.