மீனவர்கள், விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்

மீனவர்கள் மற்றும் விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக அரசாங்கமும், உரிய அமைச்சுக்களும் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளாத நிலையில் விவசாயிகளும், மீனவர்களும் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டு வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.

மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று (11) மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த ஜனாதிபதி தேர்தலின் பிற்பாடு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ இரசாயன பசளையை நிறுத்தி சேதன பசளை மூலம் இலங்கையில் உற்பத்தியை மேற்கொள்ள உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.

ஆனால் குறித்த முயற்சி முழுமையாக தோல்வியடைந்து விவசாயிகள் தற்போது வீதியில் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது சேதன பசளையும் இல்லை.

விவசாயிகள் நெல் விதைக்கும் ஆரம்ப கால பகுதியில் பசளை இல்லாமல் எவ்வாறு விதைப்பது என்று உள்ளனர். விவசாயிகளும் விவசாய அமைப்புக்களும் அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்து வருகின்றனர்.

நாட்டில் உள்ள விவசாய அமைச்சு விவசாயிகளுக்கு பசளை வழங்காத நிலையில் கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதோடு, விவசாயிகளுக்கு பசளையை கொடுத்து உள்ளூர் உற்பத்தி யை ஊக்குவித்து நாட்டு மக்களுக்கு அரிசி வழங்க முயற்சி எடுப்பதா? அல்லது பசளையை நிறுத்தி வெளிநாடுகளில் இருந்து அரிசியை இறக்குமதி செய்து மக்களுக்கு வழங்கி விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதா? என்ற சிந்தனையில் இருக்கிறார்கள்.

தற்போது அரசாங்கம் அரிசியின் விலையை குறைப்பதற்கு அல்லது அவர்கள் தங்களுடைய சொந்த இலாபத்திற்காக அரிசியை இறக்குமதி செய்ய தீர்மானித்துள்ளார்கள்.

விவசாயிகளுக்கு பசளையை வழங்கி இருந்தால் அரிசி இறக்குமதி செய்ய வேண்டிய தேவை இல்லை.

எனவே அரசாங்கம் உடனடியாக விவசாயிகளின் தேவைகளை நிறைவேற்ற வேண்டும் என தெரிவித்தார்.

மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில், இலங்கை இந்திய மீனவர்களுக்கு இடையில் தொடர்ச்சியாக பிரச்சினைகள் இடம் பெற்று வருகின்றது. யுத்தத்திற்கு பிற்பாடு இந்திய இழுவைப்படகுகள் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. குறிப்பாக இலங்கையின் வட கடல் பகுதிக்குள் அவர்களின் மீன்பிடி ஆதிக்கம் காணப்படுகின்றது.

இந்தியாவின் இலுவைப்படகுகளினால் இலங்கையில் உள்ள தமிழ் பகுதிகளில் உள்ள மீனவர்கள் பாதிக்கப்படுகின்ற காரணத்தினால் இலங்கை அரசாங்கம் காத்திரமான ஒரு செயல்பாட்டை முன்னெடுப்பது இல்லை.

கடந்த அரசாங்கத்தில் இருந்த போது எங்களுடைய தொடர்ச்சியான அழுத்தங்களால் பல இந்திய படகுகள் பிடிக்கப்பட்டுள்ளதோடு கட்டுப்பாட்டு நிலைக்கு கொண்டு வரப்பட்டது.

ஆனால் தற்போது மன்னார், முல்லைத்தீவு மீனவர்கள் பாதிக்கும் அளவிற்கு இந்திய இழுவைப்படகுகள் வந்து செல்கிறது.

கடற்றொழில் அமைச்சரும், அரசாங்கமும் இவ்விடயத்தில் மௌனம் காத்து வருகின்றனர்.

இதற்கு பிரதானமான காரணம் இந்தியாவிற்கு பயந்து அவர்கள் முடிவுகளை எடுக்க தயங்குகிறார்கள். இவ்விடயம் தொடர்பில் கடற்றொழில் அமைச்சரிடமும் நான் நேரடியாக தெரிவித்துள்ளேன்.

அரசாங்கத்திடமும் பல முறை பாராளுமன்றத்தில் கதைத்துள்ளேன். ஆனால் இவ் விடயத்தில் கடற்றொழில் அமைச்சும் அரசாங்கமும் எவ்வித ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை.

அண்மைக்காலமாக மிக மோசமாக இந்திய இழுவைப்படகுகள் வந்து வட கடலில் இருக்கின்ற எமது மீனவர்களின் வலைகளையும், படகுகளையும், மீன்பிடி உபகரணங்களையும் சேதப்படுத்தி சென்றுள்ளனர்.

இதனால் எமது மீனவர்களுக்கு பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவ்விடயத்தில் கடல் தொழில் அமைச்சு மௌனமாக இருப்பதை விட கடல் தொழில் அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்து ஒரு சிங்கள இனத்தைச் சேர்ந்த ஒருவர் கடல் தொழில் அமைச்சராக நியமிக்கப்பட வேண்டும்.

வட மாகாணத்தைச் சேர்ந்த ஒருவர் கடல் தொழில் அமைச்சராக இருந்தும் கூட வடமாகாண மீனவர்கள் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டுக் கொண்டே இருக்கும் நிலையில் அவர் மௌனமாக இருப்பதை விட சிங்களவர் ஒருவர் கடற்றொழில் அமைச்சராக இருந்தால் எமது அழுத்தத்தின் காரணமாக ஓர் அளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும்.

கடற்றொழில் அமைச்சின் தற்துணிவு இல்லாத நிலையே வட பகுதி மீனவர்கள் இந்திய இழுவைப் படகு மூலம் மிகவும் பாதிக்கப்படுகின்றனர் என அவர் தெரிவித்தார்.

மேலும் மாகாண சபை தேர்தல் மற்றும் பொருட்களின் விலை ஏற்றங்கள் குறித்தும் கருத்து தெரிவித்தார்.