இலங்கையில் தமிழ் மொழி புறக்கணிப்பு தொடர்பிலான பிரச்னை முடிவின்றி, இன்றும் தொடர்ந்து வருகிறது.
அண்மைக் காலமாக அரச நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், வீதி சமிக்ஞைகள், பெயர் பலகைகள் என அனைத்து இடங்களிலும் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்ட பல சம்பவங்கள் பதிவாகியிருந்தன.
அத்துடன், இலங்கையிலுள்ள சீன தூதரகத்தினால் முன்னெடுக்கப்படும் திட்டங்களில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டு, சீன மொழி உள்வாங்கப்பட்ட சம்பவங்களும் கடந்த காலங்களில் அவ்வப்போது பதிவாகியிருந்தன.
சீனாவினால் நிர்மாணிக்கப்படும் கொழும்பு துறைமுக நகர் மற்றும் சட்ட மாஅதிபர் திணைக்களத்தில் நிர்மாணிக்கப்பட்ட கட்டடத்தின் பெயர் பலகை ஆகியவற்றில் தமிழ் மொழி முழுமையாக புறக்கணிக்கப்பட்டு, சீன மொழி உள்வாங்கப்பட்டிருந்தன.
தமிழ் மொழி புறக்கணிப்பு தொடர்பில் சமூக வலைத்தளங்களில் எழுந்த எதிர்ப்புக்களை அடுத்தே, தமிழ் மொழி மீண்டும் உள்வாங்கப்பட்டது.
இவ்வாறான நிலையில், தற்போது மீண்டும் அதே பிரச்னை பேசு பொருளாக மாறியுள்ளது.
இலங்கையின் முதல் பிரஜையான ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அநுராதபுரம் – சாலியபுர கஜபா படையணியில் கிரிக்கெட் மைதானமொன்று திறந்து வைக்கப்பட்டது.
கோட்டாபய ராஜபக்ஷ கிரிக்கெட் மைதானம் என பெயரிடப்பட்டுள்ள இந்த மைதானத்தின் திறப்பு பலகையை, ஜனாதிபதி நேற்று திறந்து வைத்தார்.
திறப்பு பலகையில், சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகளில் மாத்திரம் காணப்படுகின்றமை, தமிழ் சமூகம் மத்தியில் பாரிய கவலையை ஏற்படுத்தியுள்ளது.
சிங்களம், தமிழ் – ஆட்சி மொழி
நாட்டின் முதல் பிரஜை, அரசியலமைப்பின் மொழி கொள்கையை பின்பற்ற வேண்டும் என முன்னாள் அரச கரும மொழிகள் அமைச்சரும், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.
அரசியலமைப்பை ஒவ்வொரு பிரஜையும் மதிக்க வேண்டும் என்பதே, ஜனநாயக நாடொன்றின் அடிப்படையான விடயம் என அவர் கூறுகின்றார்.
நாட்டின் அரச கரும மொழிகள் சட்டத்தையும், அரசியலமைப்பையும் ஜனாதிபதி மீறியுள்ளதாகவும், இது முதல் தடவை கிடையாது எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.
சிங்கள் மற்றும் தமிழ் ஆகிய ஆட்சி மொழிகளையும், இணைப்பு மொழியாகவுள்ள ஆங்கில மொழியையும் கொண்ட நாட்டின் மும்மொழி கொள்கையை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முதலில் கடைபிடிக்க வேண்டும் என தான் பிரார்த்திப்பதாகவும் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கத்தின் கீழ் மொழி தொடர்பிலான அமைச்சு இல்லாமை குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, முன்னாள் மொழி அமைச்சரான மனோ கணேசன் பதிலளித்தார்.
தனது அரச கரும மொழிகள் அமைச்சின் கீழ், அரச கரும மொழிகள் ஆணைக்குழு, அரச கரும மொழிகள் திணைக்களம், தேசிய மொழி கல்வி பயிற்சி நிறுவனம் ஆகியவை செயற்பட்டதாகவும் அவர் கூறுகின்றார்.
தனது அமைச்சின் கீழ் செயற்பட்ட நிறுவனங்கள் தற்போது வெவ்வேறு அமைச்சுக்களின் கீழ் பிளவுப்படுத்தப்பட்டு, செயற்படுத்தப்படாத வகையில் காணப்படுவதாகவும் அவர் கவலை வெளியிடுகின்றார்.
மொழி தொடர்பிலான அமைச்சு இல்லாமையானது, இந்த அரசாங்கத்தின் உதாசீனத்தை எடுத்து காட்டுவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவிக்கின்றார்.
இலங்கை அரசின் பதிலென்ன?
இந்த மைதானம் அமைந்துள்ள வளாகம் பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ளமையினால், அதற்கான பொறுப்பு பாதுகாப்பு அமைச்சு வசமானது என ஜனாதிபதி ஊடகப் பேச்சாளர் கிங்ஸிலி ரத்நாயக்க தெரிவிக்கின்றார்.ராணுவத்தினால் இந்த ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார். இந்த மைதானத்தை திறந்தது மாத்திரமே ஜனாதிபதி என அவர் குறிப்பிட்டார்.
ராணுவத்தின் பதிலை அறிய பிபிசி தமிழ் தொடர்புகொண்டது. ஆனால் அலுவல்பூர்வமான பதில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இலங்கை ராணுவம் பிபிசி தமிழிடம் இதற்கு பதில் அளித்தால், அது இந்தப் பக்கத்தில் சேர்க்கப்படும்.