மூதூர் பிரதேச செயலகத்துக்குட்பட்ட திருகோணமலை – மட்டக்களப்பு வீதியில் அமைந்துள்ள 64ஆம் கட்டை மலையில் அமைக்கப்படவுள்ள பௌத்த விகாரைக்காக, பொதுமக்களின் விவசாயக் காணிகளை அபகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து, பிரதேச செயலகத்துக்கு முன்னால் இன்று (14) காலை கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டது.
பாதிக்கப்பட்ட மலையைச் சூழவுள்ள கிராம மக்கள் மற்றும் அவர்களது பிரதிநிதிகள் அடங்கலாக தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் ஒன்றிணைந்து இந்த கவனயீர்ப்புப் போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர்.
இதில் பொதுமக்கள் உட்பட முஸ்லிம், இந்து மற்றும் கிறிஸ்தவ மதத் தலைவர்கள் மற்றும் அரசியல் பிரதிநிதிகள் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.
இந்தக் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், “எங்கள் நிலம் எமக்கு வேண்டும், மாற்று காணி வேண்டாம்”, “அப்பாவிப் பொதுமக்களின் காணிகளை அபகரிக்கும் அநீதிக்கு பொலிஸ் துணை போகாது”, “அதிகாரங்களையும் அதிகாரிகளை வைத்து மக்களை விரட்டாதே”, “எங்கள் காணிகளில் விவசாயம் செய்வதற்கு எங்களிடம் வாடகை கேட்காதே” மற்றும் “மூதூர் முஸ்லிம், தமிழ் மக்களின் காணிகளை அபகரிப்பதை உடன் நிறுத்து” போன்ற கோஷங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியிருந்தனர்.
இறுதியாக, மூதூர் பிரதேச செயலாளரிடம் போராட்டத்தில் ஈடுபட்டவர்களால் மகஜரும் கையளிக்கப்பட்டது.