பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள அதிபர்களிடமிருந்து பலவந்தமாக பாடசாலை திறப்புகளை பெறுவதற்கு அரசியல்வாதிகள் முயன்று வருவதாக இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.
அமைச்சர் காமினி லொக்குகே உள்ளிட்ட சில அரசியல்வாதிகள் அதிபர்களுக்கு தொலைபேசியில் அச்சுறுத்தல் விடுத்ததாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதம செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.
200-க்கும் குறைவான மாணவர்கள் உள்ள பாடசாலைகளின் அதிபர்களை பொலிஸார் தொலைபேசியூடாக தொடர்பு கொண்டுள்ளமை அபாயகரமான விடயம் என அவர் சுட்டிக்காட்டினார்.
பொலிஸாருக்கு பொறுப்பாகவுள்ள பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர, பொலிஸார் மூலம் தொலைபேசியில் அழைத்து அச்சுறுத்தல் விடுப்பதாக ஜோசப் ஸ்டாலின் குற்றச்சாட்டு முன்வைத்தார்.
காலி முகத்திடலுக்கு எம்மை அழைத்துச் சென்று ஆப்பு வைக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டிஆரச்சி கூறியுள்ளார். இந்த நாட்டின் பிள்ளைகளுக்கு இரண்டு வருடங்களாக கல்வியை வழங்குவதில் தோல்வி கண்டுள்ள அரசாங்கத்திற்கு நீங்கள் வழங்கும் தண்டனை என்னவென அவரிடம் நான் கேட்கின்றேன் என ஜோசப் ஸ்டாலின் வினவினார்.