இளைஞர்கள் மீது தாக்குதல் பொலிஸ் அதிகாரி பணி நீக்கம்

போக்குவரத்து பொலிஸ் அதிகாரி ஒருவரினால் இளைஞர்கள் இருவர் தாக்கப்படும் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர், ரியர் அட்மிரல் கலாநிதி சரத் வீரசேகர தெரிவித்தார்.

குறித்த சம்பவம் தொடர்ப்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரி பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்த சம்பவத்திற்கு இனவெறி பிம்பத்தை கொடுக்க எந்த முயற்சியும் எடுக்கக்கூடாது என்று அமைச்சர் மேலும் கூறினார்.

மட்டக்களப்பு ஏறாவூர் பகுதியில் போக்குவரத்து பொலிஸ் அதிகாரி ஒருவர் இளைஞர்கள் இருவரை தாக்கும் காணொளி வௌியாகி இருந்தது.

மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் ஒரவரையும் பின்னால் அமர்ந்து சென்ற ஒருவரையும் போக்குவரத்து பொலிஸ் கடமையில் இருந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தாக்கும் காட்சி கைப்பேசியால் பதிவு செய்யப்பட்டிருந்தது.

மட்டக்களப்பு ஏறாவூர் களப்பு வீதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றுக்கு முன்னால் இந்த சம்பவம் இடம்பெற்றிருந்தது.

வாகன விபத்து ஒன்று இடம்பெற்ற இடத்தில் கடமையில் இருந்த பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் அதிக வேகத்தில் இந்த மோட்டார் சைக்கிள் செலுத்தப்பட்டுள்ளது.

இதன்போது அளவீட்டு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்ட நாடாவையும் இழுத்துக் கொண்டு குறித்த மோட்டார் சைக்கிள் சென்றுள்ளது.

இதன்போது, மோட்டார் சைக்கிளை நிறுத்துமாறு பொலிஸார் கட்டளையிட்ட போதும் நிறுத்தாமல் மோட்டார் சைக்கிளை ஓட்டுனர் செலுத்தியுள்ளார்.

பின்னர் பொலிஸ் அதிகாரி குறித்த மோட்டார் சைக்கிளை பின் தொடர்ந்து வந்த போது உணவகம் ஒன்றுக்கு அருகில் வைத்து குறித்த மோட்டார் சைக்கிளை கண்டு பிடித்துள்ளார்.

பின்னர் அங்கிருந்த குறித்த இருவரையும் பொலிஸ் அதிகாரி தாக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.