மனிதாபிமான அடிப்படையில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க விடுதலை செய்யப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார்.
நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்கவை அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு சென்று எதிர்க்கட்சித் தலைவர் இன்று செவ்வாய்க்கிழமை சந்தித்தார்.
இதன் பின்னர் எதிர்கட்சித்தலைவர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தார்.
இதன்போது, ரஞ்சன் ராமநாயக்க முதுகெலும்பு மற்றும் முழங்கால் பாதிக்கப்பட்டமையால் தற்போது சிறைச்சாலை வைத்தியசாலையில் உள்ளதாகவும் இதற்கு மேலான முறையான சிகிச்சையை அவருக்கு வழங்க முடியும் எனவும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டார்.
வெலிக்கடை சிறைச்சாலைக்கு அவரை மாற்றம் செய்தால், அவருக்கு முறையான சிகிச்சை வழங்க முடியும் எனவும் உயர்கல்வி நடவடிக்கையை தொடர முடியும் எனவும் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டினார்.
அவர் அரசாங்க நிதியை பிழையாகக் கையாளவில்லை, ஊழலில் ஈடுபடவில்லை. அவரது தனிப்பட்ட சொத்துக்கள் முதற்கொண்டு மக்களுக்காக செலவிட்டுள்ளார். மனிதாபிமான அடிப்படையில் ஜனாதிபதி அவருக்கு முழுமையாக விடுதலை வழங்குவார் என எதிர்பார்க்கிறேன் என சஜித் பிரேமதாச குறிப்பிட்டார்.