பௌத்த தர்மம் என்பது மிகவும் உயர்ந்த தர்மம். நல்ல அறக்கருத்துகளை கொண்ட சமயம். ஆனால் இந்த நாட்டில் உள்ள பெரும்பாலான பௌத்த பிக்குகள் அதர்மத்தினையே போதித்து வருகின்றனர். அவர்கள் தர்மத்தினைப் போதிப்பவர்களாகயிருந்தால் அட்டூழியங்களை செய்ய வரமாட்டார்கள் என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சீ. யோகேஸ்வரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வேரத்தடி என்னும் தமிழர் பகுதிக்குள் தொல்பொருள் செயலணியினால் எல்லைக்கற்கல் நடுவதற்காக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட எதிர்ப்பு நடவடிக்கைகளினால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் தொல்பொருள் செயலணியினர் எல்லைக்கற்கள் நடுவதற்காக வந்துள்ள விடயத்தை அறிந்த வந்தாறுமூலை மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகிய கட்சியினர் அப்பகுதிக்கு சென்று தமது எதிர்ப்பினை தெரிவித்தனர்.
குறித்த பகுதிக்குசென்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சீனித்தம்பி யோகேஸ்வரன் மற்றும் சிறிநேசன், முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பிரசன்னா இந்திரகுமார், ஏறாவூர்ப்பற்று பிரதேசசபை தவிசாளர் சர்வானந்தன் , தமிழரசுக்கட்சி வாலிப முன்னணி வடகிழக்கு தலைவர் கி.சேயோன், ஏறாவூர்பற்று பிரதேசசபை உறுப்பினர்கள் ஆகியோர் மக்களுடன் இணைந்து தமது எதிர்ப்பினை தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து அப்பகுதியில் தொல்பொருள் செயலணியின் எல்லைக்கற்களை நடும் நடவடிக்கை தடுத்து நிறுத்தப்பட்டு அங்கிருந்து சென்றதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன்,
தமிழர்களின் பல இடங்கள் தொல்பொருள் இடங்களாக அடையாளப்படுத்தப்பட்டதாக அரசாங்கம் தெரிவித்து வருகின்றது. கோத்தபாய ராஜபக்ஸ ஆட்சிக்கு வந்ததும் நூறுவீதம் சிங்களவர்களைக் கொண்டதாகவும் இராணுவத்தினரையும் பௌத்த பிக்குகளையும் உள்ளடக்கியதாக ஒரு செயலணியை அமைத்து தொல்லியல் அடையாளங்களை கண்டுபிடித்து அதனை பௌத்த மக்களுக்கு உரியதென அடையாளப்படுத்துமாறு அறிவுறுத்தல்கள் வழங்கியுள்ளார்.
அதன் பிரகாரம் தொல்லியல் துறையினர் வடகிழக்கில் தமிழர்கள் வாழும் பல இடங்களில் தங்களது பௌத்த இடங்களாக அடையாளப்படுத்தி வருகின்றனர். மட்டக்களப்பு மாவட்டத்தின் வந்தாறுமூலை, வேரம் என்னும் பகுதியில் தமிழர்களின் பூர்வீக வாழ்விடங்களுக்கு வந்து இது தங்களின் பகுதி இங்கு தொல்பொருள் அடையாளங்கள் இருக்கின்றது என காட்டுகின்றனர்.
பழங்கால செங்கல் இருந்த இடமெல்லாம் பௌத்தர்கள் வாழ்ந்தார்கள் என்று கூறுகின்றார்கள். இலங்கையில் பூர்வீகமாக தமிழர்கள் வாழ்ந்து வருகின்றார்கள். இந்த நாடு பூர்வீக தமிழர்களின் வாழ்விடமாகும். தமிழ் மக்கள் இந்த நாட்டின் அனைத்து பகுதிகளிலும் வாழ்ந்தார்கள். பழங்காலத்தில் பௌத்தர்களுக்கு ஒருவிதமாகவும் தமிழர்களுக்கு ஒருவிதமாகவும் செங்கல் உற்பத்திசெய்யப்படவில்லை.
அக்காலத்தில் அனைவருக்கும் பொதுவானதாகவே செங்கற்கல் இருந்தன. ஆனால் தற்போது அந்த செங்கற்களை மையமாககொண்டு பௌத்தர்களின் வாழ்விடங்கள் என்று கூறுகின்றனர். இலங்கையின் முதலாவது மன்னனும் தமிழன்தான். இறுதி மன்னனும் தமிழனாகவே இருந்துள்ளான். தமிழர்கள் இந்த நாட்டினை ஆட்சி செய்துள்ளார்கள். அவ்வாறானவை தமிழர்களின் தொல்பொருள் இடங்களாக இருந்தால் அதனை தமிழர்களுடன் கலந்துரையாடி அவற்றினை பாதுப்பதில் எந்த தடையும் இல்லை.
ஆனால் எங்கு பழங்கால செங்கற்கள், பழங்கால கல்தூண்கள் காணப்படுகின்றதோ அவற்றினையெல்லாம் பௌத்தர்களின், சிங்களவர்களின் வாழ்விடங்கள் என்று குறிப்பிடுகின்றார்கள். பொலநறுவையில் 18 இந்து ஆலயங்கள் குறிப்பிட்ட ஒரு பகுதிக்குள் உள்ளன. அவ்வாறானால் ஏனைய பகுதிகளில் பெருமளவான சைவ ஆலயங்கள் இருந்திருக்க வேண்டும். இன்றும் பல ஆலயங்கள் அழிவுகளுடன் அங்கு இருக்கின்றன. அவற்றினை வைத்துக்கொண்டு இன்று நாங்கள் பொலநறுவைக்கு சென்று தமிழர்கள் உரிமைகொண்டாட முடியுமா?.
இன்று அநுராதபுரத்தில் உள்ள இசுறுமுனிய விகாரை அதுவொரு சைவசிவன் ஆலயம். இன்று அவர்கள் அதனை விகாரையாக மாற்றியுள்ளனர். இன்று தென்பகுதியில் உள்ள மிகவும் பழமையான பல சைவ ஆலயங்கள் பௌத்த விகாரைகளாக மாற்றப்பட்டுள்ளன.
தமிழர்கள் இவற்றினையெல்லாம் கேட்டுச்செல்வதுமில்லை, எங்களது இடமென்று சண்டை பிடிக்கவுமில்லை. எங்களது பகுதியென்று தொல்பொருள் பிரகடனப்படுத்துங்கள் என்று கூறவுமில்லை. இவ்வாறு இருக்கும் போது ஏன் வடகிழக்கு தமிழர் பூர்வீக பகுதியில் மட்டும் ஏன் அரசாங்கம் இவ்வாறான அட்டூழியங்களை செய்ய வருகின்றது. இதற்கு துணையாக இராணுவத்தினரை பயன்படுத்துகின்றனர்.
பௌத்த தர்மம் என்பது மிகவும் உயர்ந்த தர்மம். நல்ல அறக்கருத்துகளை கொண்ட சமயம். ஆனால் இந்த நாட்டில் உள்ள பெரும்பாலான பௌத்த பிக்குகள் அதர்மத்தினையே போதித்து வருகின்றனர். அவர்கள் தர்மத்தினைப் போதிப்பவர்களாகயிருந்தால் அட்டூழியங்களை செய்யவரமாட்டார்கள்.
இன்று சிங்கள மயப்படுத்தவேண்டும், வடகிழக்கில் விகாரைகளை பரவலாக அமைக்க வேண்டும். தமிழர்களின் பூர்வீகம் என்று நிரூபிப்பதற்கு மகிந்த ராஜபக்ஸ அரசாங்கம் தீவிரமாக செயற்பட்டு வருகின்றது.
மட்டக்களப்பு மாவட்டத்திற்கு இரகசியமாகவரும் அமைச்சர்கள் இங்கு சிங்களவர்களுக்கு இரகசியமான முறையில் காணி உறுதிப்பத்திரங்களை வழங்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். அதற்கு எமது அரசியல்வாதிகளும் துணை நிற்கின்றனர். இதனை தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். அவ்வாறான நிலைநீடிக்குமானால் மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும்பாலான பகுதி சிங்களமயமாக்கப்பட்டுவிடும். அவ்வாறான நிலையேற்பட்டால் எமது சந்ததிக்கு வாழ்வதற்கு இடமில்லாத நிலையே ஏற்படும்.