அரசாங்கத்தைப் பாதுகாப்பது மிகவும் கடினம் – வெளிவிவகார அமைச்சர் ஜி. எல். பீரிஸ்

அரசாங்கத்தைப் பாதுகாப்பது மிகவும் கடினம் என வெளிவிவகார அமைச்சர் ஜி. எல். பீரிஸ்  தெரிவித்துள்ளார்.

கண்டி அஸ்கிரிய பீடத்திற்குச் சென்ற அவரிடம் ஊடகவியலாளர்கள் தொடுத்த கேள்விக்குப் பதிலளிக்கும் போதே இதனை அவர் குறிப்பிட்டிருந்தார். இதன்போது மேலும் பதில் வழங்கிய அவர்,

“கூட்டணி அமைத்துள்ள அரசாங்கத்திற்குள் பல்வேறு கருத்துக்கள் இருக்கும். இது இயல்பான ஒன்று. ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு கொள்கை இருக்கின்றது. என்ன தான் இருந்தாலும் இறுதியில் அரசாங்கமே நிலைபெறுகின்றது.

ஏற்படுகின்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு எமது நாட்டில் சக்தியுள்ளது. மக்கள் எமது அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைத்து, அதிகாரத்தை வழங்கியுள்ளார்கள். அந்த விசுவாசத்தையும் அரசாங்கத்தையும் பாதுகாக்க வேண்டும்.

பல்வேறு தரப்பினரின் தியாகம், அர்ப்பணிப்பில் உருவாக்கப்பட்ட அரசாங்கத்தைப் பாதுகாக்க வேண்டும். சில நேரங்களில் அரசாங்கத்தை அமைப்பதைவிட அமைத்த அரசாங்கத்தைப் பாதுகாப்பது கடினமானது.

ஆகவே பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது இலகுவானது. அரசாங்கத்திற்குள் பிரச்சினை இருப்பது இயல்பானது. அதனை தீர்த்துக் கொள்ள முடியும். பிரச்சினையில்லாத அரசாங்கம் இந்த நாட்டில் இருந்துள்ளதா? எனவே இதனைக் குறித்து அலட்டிக் கொள்ளத் தேவையில்லை என்றார்.