புதிய அரசியலமைப்பில் ‘13’ காணாமல் போகுமா? காப்பாற்ற முனையும் தமிழ்க் கட்சிகள் – அகிலன்

ரெலோவின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கூட்டம்தான் கடந்த வாரம் தமிழ் அரசியல் வட்டாரங்களில் முக்கிய பேசுபொருளாக இருந்தது. காரசாரமான விமர்சனங்கள் – அச்சுறுத்தல்களுக்கு மத்தியில்தான் இந்தக் கூட்டம் நடத்தப்பட்டது. கூட்டம் சுமுகமாக நடத்தப்பட்டதாகவும், தமிழரசுக் கட்சியையும் இணைத்து அடுத்த சந்திப்பு விரைவில் நடைபெறும் எனவும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்திருக்கின்றார்கள். இதன் மூலம் இவர்கள் சாதிக்க நினைப்பது என்ன?

அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் எனவும், அதற்கான அழுத்தத்தை இந்தியா கொடுக்க வேண்டும் எனவும் கோரும் தீர்மானத்தை ஏழு கட்சிகள் இணைந்து நடத்திய இந்த சந்திப்பின் பின்னர் நிறைவேற்றிய தீர்மானத்தில் தெரிவித்துள்ளன. இந்தக் கோரிக்கை ஏற்கனவே முன்வைக்கப்பட்ட ஒன்றாக இருந்தாலும் கூட, ஏழு கட்சிகள் இணைந்து இந்தக் கோரிக்கையை முன்வைத்திருப்பது தமிழ் அரசியலைப் பொறுத்தவரையில் முக்கியமான திருப்பம்!

கோட்டாபய ராஜபக்‌ச அரசாங்கத்தினால் தயாரிக்கப்படும் புதிய அரசியலமைப்பில், 13 ஆவது திருத்தத்தில் உள்ள அம்சங்கள் காணாமல்போகலாம் என எதிர்பார்க்கப்படும் ஒரு சந்தர்ப்பத்தில்தான் 7 சிறுபான்மையினக் கட்சிகள் இணைந்து இந்தக் கோரிக்கையை முன்வைத்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. “இவ்விடயத்தில் இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமாக இருந்தால், தமிழ்க் கட்சிகள் அனைத்தும் இணைந்து ஒருமித்த குரலில் இது தொடர்பில் கோரிக்கை வைக்க வேண்டும்” என இந்தியா கேட்டுக் கொண்டிருந்தது. அதன் தொடர்ச்சியாகவே தமிழ்க் கட்சிகள் இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளன.

இந்தியத் தலைவர்கள், அதிகாரிகளைச் சந்திக்கும் சந்தர்ப்பங்களில், தமிழ்க் கட்சிகள் முன்வைக்கும் கோரிக்கைகளில் ஒன்றாக இது இருந்திருக்கின்றது. “இலங்கை அரசுக்கு நாம் அழுத்தம் கொடுப்பது என்பது ஒருபுறம் இருக்கட்டும். முதலில் நீங்கள் (தமிழ்க் கட்சிகள்) ஒன்றிணைந்து இதற்கான கோரிக்கையை தெளிவாக முன்வையுங்கள்” என்பதை புதுடில்லி தமிழர் தரப்புக்குச் சொன்னதையடுத்தே, தமிழ்க் கட்சிகளை இவ்விடயத்திலாவது இணைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டது.

ரெலோ அமைப்பினால் முன்னெடுக்கப்பட்ட இந்த முயற்சியில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு கூட்டணி உட்பட ஏழு கட்சிகள் பங்குகொண்டமை முக்கிய அம்சமாகும். சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன், தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் என்.சிறிகாந்தா, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரன் சார்பில் பேராசிரியர் சிவநாதன், ரெலோ தேசிய அமைப்பாளரும் ஊடகப் பேச்சாளருமான குருசுவாமி சுரேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

ஆனாலும்கூட, பிரதான தமிழ்த் தேசியக் கட்சிகள் அனைத்தையும் இவ்விடயத்தில் இணைக்க முடியாமல் போய்விட்டது. குறிப்பாக, இலங்கை தமிழரசுக் கட்சி இதில் கலந்துகொள்ளவில்லை. கொள்கை ரீதியான முரண்பாடுகள் எதுவும் அதற்கு காரணமல்ல. முயற்சியை ரெலோ முன்னெடுத்தமையால், தமது முக்கியத்துவம் குறைந்துவிடும் என தமிழரசுக் கட்சி கருதியிருக்கலாம். கட்சியின் தலைவர் மாவை. சேனாதிராஜா இதில் கலந்துகொள்வதாகக் கூறியிருந்தார். ஆனால், கட்சிக்குள் உருவாகிய அழுத்தங்களையடுத்து அவர் கலந்துகொள்ளவில்லை. கட்சியின் அரசியல் குழுவைக்கூட்டித்தான் இது குறித்து தீர்மானிக்க வேண்டும் என மாவை தரப்பில் பின்னர் தெரிவிக்கப்பட்டதாம்.

இதனைவிட, இதில் பங்குகொள்ளாத இரண்டாவது பிரதான கட்சி கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி. அவர்கள் இதில் கலந்துகொள்ள மாட்டார்கள் என்பது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான். காரணம்: 13 ஆவது திருத்தத்தை முற்றுமுழுதாக நிராகரிக்கும் ஒரு கட்சியாக அது உள்ளது. 13 ஆவது திருத்தத்தை ஏற்றுக்கொள்வதென்பது, தமிழ் மக்களுடைய போராட்டத்தை இந்தியாவிடம் அடகுவைப்பதாகிவிடும் என்பதுதான் அவர்கள் பகிரங்கமாக வெளிப்படுத்தி வரும் நிலைப்பாடு. அதனால், 13 ஐ வலியுறுத்தும் இந்தச் சந்திப்பில் அவர்கள் கலந்துகொள்ளாமலிருந்தமை ஆச்சரியமான ஒன்றல்ல.

காப்பாற்ற முனையும் தமிழ்க் கட்சிகள்1987 ஆம் ஆண்டின் இலங்கை – இந்திய உடன்படிக்கையின் விளைவாக உருவாக்கப்பட்ட ஒன்றுதான் இந்த 13 ஆவது திருத்தம். அந்த வேளையில் வடக்கு, கிழக்கில் பெரும் பகுதியைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த விடுதலைப் புலிகள் அதனை நிராகரித்தார்கள். ஏனைய தமிழ்க் கட்சிகள் அதனை ஒரு இறுதித் தீர்வாக ஏற்கமுடியாது என்ற போதிலும், அதனை ஒரு ஆரம்பமாக ஏற்பதாகக் கூறினார்கள். அப்போதைய இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி தமிழ்த் தலைவர்களுக்குக் கொடுத்த சில வாக்குறுதிகளும் இதனை ஏற்பதென்ற தமிழ்க் கட்சிகளின் முடிவுக்குக் காரணமாக இருந்தது.

ஆனால், 13 ஆவது திருத்தம் அது கொண்டு வரப்பட்டதிலிருந்து பல மாற்றங்களைக் கண்டிருக்கின்றது. இணைந்திருந்த வடக்கு, கிழக்கு பிரிக்கப்பட்டது. மாகாண சபைகளுக்கு இருந்த காணி, பொலிஸ் அதிகாரங்கள் பிடுங்கப்பட்டு விட்டன. இப்போது கல்வி, மற்றும் மருத்துவத் துறையில் மாகாண சபைகளுக்குள்ள அதிகாரங்களில் கைவைக்கப்படுகின்றது. மாகாண சபைகள் செயற்படாதிருப்பதால், ஆளுநர்கள் மூலமாக இவ்வாறு பல்வேறு விடயங்களையும் சாதிப்பதற்கு அரசு முற்படுகின்றது. அதனால்தான், மாகாண சபைகளுக்கான தேர்தல் உடனடியாக நடத்தப்பட வேண்டும் என்பதும் 13 முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதும் தமிழ்க் கட்சிகளால் முன்வைக்கப்படும் கோரிக்கையாகவுள்ளது.

அதேவேளையில், இது இந்தியாவைத் திருப்திப்படுத்துவதற்கான ஒரு முயற்சி என்ற கருத்தும் முன்வைக்கப்படுகின்றது. 1987 இல் அப்போதிருந்த பூகோள – பிராந்திய நலன்களின் அடிப்படையில்தான் இலங்கையை உடன்படிக்கைக்குள் இந்தியா கொண்டுவந்தது. உடன்படிக்கையின் பின்னிணைப்பாக இருந்த கடிதங்கள் இதனை உறுதிப்படுத்தும். தமது நலன்கள் அடையப்பட்ட நிலையில்தான், 13 ஆவது திருத்தம் தொடர்பில் இந்தியா நீண்டகாலமாக மௌனமாக இருந்தது. வடக்கு, கிழக்கு பிரிக்கப்பட்ட போதிலும், மாகாண அதிகாரங்கள் பறிக்கப்பட்ட போதும் இந்தியா எதுவும் செய்யவில்லை.

இப்போது, சீனாவின் ஆதிக்கம் அதிகரித்துவரும் நிலையில், இலங்கை மீதான தமது பிடியை இறுக்குவதற்கு 13 மட்டும்தான் தமது கைகளில் உள்ள துரும்புச் சீட்டு என்பதை இந்தியா அடையாளம் கண்டுகொண்டுள்ளது. அதனால்தான், தமிழ்க் கட்சிகளை நோக்கி அதற்கான நகர்வை புதுடில்லி மேற்கொண்டது. 13 ஐ அடிப்படையாகக் கொண்டு தமிழ்க் கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சி இந்தியாவைத் திருப்திப்படுத்தும் செயற்பாடு என குற்றஞ்சாட்டப்படுவதற்கு அதுதான் காரணம்.

13 ஐ வலியுறுத்துவதன் பின்னணியில் இந்திய நலன்கள் உள்ளது என்பது உண்மையாக இருந்தாலும், தமிழ் மக்களைப் பொறுத்த வரையில், தற்போதைய நிலையில் அதனைப் பயன்படுத்திக் கொள்வதுதான் புத்திசாலித்தனமானது என இதனை முன்னெடுக்கும் கட்சிகள் கருதுகின்றன. 1987 இல் விடுதலைப் புலிகள் பலமான ஒரு அமைப்பாக இருந்தது. அதனால், பேரம் பேசக்கூடிய சக்தி அதற்கு இருந்தது. தற்போதைய நிலையில் உருவாகிவரும் சந்தர்ப்பங்களைப் பயன்படுத்திக் கொள்வதுதான் இராஜதந்திரமாக இருக்க முடியும். இந்த சந்தர்ப்பத்தையும் தவறவிட்டால், கோட்டாபய கொண்டுவரப்போகும் புதிய அரசியலமைப்பில் இருப்பதும் இல்லாமல் போய்விடக்கூடிய ஆபத்தும் இருக்கின்றது!

புதிய அரசியலமைப்பில் 13 ஆவது திருத்தத்தில் இருக்கக்கூடிய அம்சங்கள் தொடர்வதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என்பதை கோட்டாபய அரசின் நிகழ்ச்சி நிரலைப் புரிந்துகொண்ட எவருக்கும் சொல்லத் தேவையில்லை. ஆதனால், தமது பிடி தளரலாம் என்ற அச்சம் இந்தியாவுக்கு இருக்கலாம். இந்தியா தற்போது இவ்விடயத்தில் தீவிரமாக இருப்பதற்கு அதுவும் ஒரு காரணமாகவும் இருக்கலாம். இந்த நிலைமையை எமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதுதானே இராஜதந்திரம் என்ற கூட்ட ஏற்பாட்டாளர்களின் கருத்தையும் புறக்கணித்துவிட முடியவில்லை.

Source:இலக்கு