இந்திய உயர்ஸ்தானிகர்களுடன் கூட்டமைப்பினர் கலந்துரையாடல்

“ஒரே நாடு ஒரே சட்டம்” கொள்கையை முன்வைத்து உருவாக்கப்படும் புதிய அரசியல் அமைப்பினூடாக தமிழ் மக்களின் உரிமைகள், அரசியல் நெருக்கடிகளுக்கு தீர்வுகள் பெற்றுக்கொள்ள முடியும் என்ற எண்ணம் இல்லையென்பதையும், சர்வதேச அழுத்தங்களை பிரயோகித்து மாற்று வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்ற தமது நிலைப்பாட்டையும், இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லேயுடனான சந்திப்பில் ஆர்.சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசிய கூட்டமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.

புதிய அரசியல் அமைப்பு உருவாக்க விடயத்தில் தமிழ் அரசியல் தரப்பினர் ஒரு அணியாக ஒன்றிணைந்து தமது நிலைப்பாடுகளை முன்வைக்க வேண்டும் எனவும், மாகாணசபை தேர்தலில் தமிழர் தரப்பு பலமான கட்டமைப்பொன்றை உருவாக்கி, வடக்கு கிழக்கின் பலத்தை நிரூபிக்கும் பட்சத்தில், அதனூடாக அரசாங்கத்தை வலியுறுத்தும் முயற்சிகளை இந்தியாவினால் முன்னெடுக்க முடியும் எனவும் இந்திய உயர்ஸ்தானிகர் கூட்டமைப்பிடம் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் தலைமையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு நேற்று பிற்பகல் இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லேவை, தூதுவர் இல்லத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர்.

கூட்டமைப்பின் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன் கொவிட் 19 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ள நிலையில் அவரும், அமெரிக்காவிற்கான தனிப்பட்ட விஜயத்தை மேற்கொண்டுள்ள காரணத்தினால் கோவிந்தன் கருணாகரன் எம்.பியும், தனிப்பட்ட காரணங்களுக்காக வினோ நோகனாதலிங்கம் எம்.பியும் நேற்றைய கூட்டத்தில் கலந்துகொண்டிருக்கவில்லை.

இந்நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏனைய ஏழு பாராளுமன்ற உறுப்பினர்களும், தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவும் நேற்றைய சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர். நேற்று பிற்பகல் 5 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட இந்த பேச்சுவார்த்தை சுமார் இரண்டு மணிநேரம் இடம்பெற்றது.

இந்திய – இலங்கை பாராளுமன்ற நட்புறவு சங்கம் நேற்று பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. இரு நாடுகளுக்கு இடையிலான பாராளுமன்ற தொடர்புகள் மற்றும் பரிமாற்றங்கள் உள்ளிட்ட துறைகளூடாக இரு நாடுகளுக்கு இடையில் ஏற்படுத்தப்பட்டுள்ள நட்புறவு குறித்தும், வழமைக்கு மாறாக இந்த நிகழ்வில் ஆளும் எதிர் தரப்பு சார்ந்து நூற்றுக்கும் அதிமாக பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டிருந்தமை குறித்தும் இந்திய தூதுவர் கூட்டமைப்பிடம் தனிப்பட்ட சில காரணிகளை எடுத்துக்கூறியுள்ளார்.

குறிப்பாக இதற்கு முன்னர் இந்த நிகழ்வுகளில் மிகக் குறைவான உறுப்பினர்கள் கலந்துகொண்ட நிலையில் இம்முறை அந்த நிலைப்பாடு முழுமையாக மாறியுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது.

சீன சார்பு பயணமாக இலங்கையின் செயற்பாடுகளை விமர்சித்த நிலையில் இந்திய எதிர்ப்பு அற்ற அல்லது இந்தியாவின் முக்கியத்துவம் அரசாங்கத்திற்கும் பாராளுமன்றத்திற்கும் விளங்கியுள்ளமை வெளிப்பட்டுள்ளதாக இந்தியத்தூதுவர் சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும்,வடக்கு கிழக்கு அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது. அபிவிருத்தி வேலைத்திட்டங்களில் வடக்கு கிழக்கிற்கு அவசியமான முன்மொழிவுகள் குறித்தும், மாவட்ட ரீதியிலான தனித்தனியான துரித அபிவிருத்தி செயற்பாடுகள் மற்றும் நீண்டகால அபிவிருத்தி நலத்திட்டங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும், இந்திய வீட்டுத்திட்டம் உள்ளிட்ட முக்கிய காரணிகள் கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும், இந்திய – இலங்கை மக்களுக்கு இடையிலான தொடர்பாடல், ராமேஸ்வரம் படகு சேவை, விமான நிலைய அபிவிருத்தி, காங்கேசன்துறை அபிவிருத்தி குறித்தும் முக்கியத்துவம் கொடுத்து பேசப்பட்டதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்தார்.

அரசியல் தீர்வு விடயத்தில், நீண்டகால அரசியல் முரண்பாடுகள் தீர்க்கப்பட்டு அரசியல் தீர்வு ஒன்றினை நோக்கிய பயணத்தில் இந்தியாவின் முழுமையான ஒத்துழைப்புகளை தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்பார்ப்பதாக வலியுறுத்தியிருந்த நிலையில், அரசியல் தீர்வு விடயங்களில், அதிகார பகிர்வு உள்ளிட்ட முக்கிய விடயங்களில் இந்தியாவின் பங்களிப்பும் ஒத்துழைப்பும் எப்போதும் வழங்கப்படும் என இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் தெரிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

சந்திப்பில் கலந்துகொண்ட இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா கூறுகையில்,

புதிய அரசியல் அமைப்பு உருவாக்க விடயத்தில் எமது நிலைப்பாடுகள் மற்றும் அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் எமது சந்தேக கருத்துக்களை முன்வைத்தோம்.

குறிப்பாக “ஒரே நாடு -ஒரே சட்டம்” கொள்கையின் கீழ் அரசாங்கம் முன்னெடுக்கும் செயற்பாடுகள் குறித்த தெளிவு அவர்களிடத்தில் இருக்கவில்லை, எனவே அதனை நாம் தெளிவுபடுத்தினோம்.

புதிய அரசியல் அமைப்பினூடாக தமிழ் மக்களின் உரிமைகள், அரசியல் நெருக்கடிகளுக்கு தீர்வுகள் பெற்றுக்கொள்ள முடியும் என்ற எண்ணம் எம்மத்தியில் இல்லை,எனவே சர்வதேச அழுத்தங்களை பிரயோகித்து மாற்று வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் எனவும் நாம் தெரிவித்தோம்.

இந்த விடயத்தில் வடக்கு கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் சகல தமிழ் அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து ஒரு யோசனையை முன்வைத்து அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதை அவரும் எம்மிடத்தில் தெரிவித்தார்.

அதேபோல் மாகாணசபை தேர்தலை துரிதப்படுத்தும் செயற்பாடுகள் குறித்தும் அதில் தமிழர் தரப்பின் நகர்வுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

இதன்போதும் மாகாணசபை தேர்தலில் தமிழர் தரப்பு பலமான கட்டமைப்பொன்றை உருவாக்கி, வடக்கு கிழக்கின் பலத்தை நிருபிக்கும் பட்சத்தில், அதனூடாக அரசாங்கத்தை வலியுறுத்தும் முயற்சிகளை இந்தியாவினால் முன்னெடுக்க முடியும் என்ற கருத்துக்களை அவர் எம்மிடத்தில் தெரிவித்தார். இந்த விடயங்களில் தமிழர் அரசியல் தலைமைகள் ஒரு அணியாக செயற்படுவது கட்டாயமென்பதை அவரும் வலியுறுத்தினார்,

அரசியல் தீர்வு விடயத்திலும் இந்தியாவின் பங்களிப்பு தொடர்ச்சியாக இருக்கும், அதில் தமிழர் தரப்பு அதிர்ப்தியடைய வேண்டிய அவசியம் இல்லை என்ற வாக்குறுதியையும் அவர் எம்மிடத்தில் முன்வைத்தார் என்ற காரணிகளை கேசரிக்கு குறிப்பிட்டார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் பிற்பகல் சுவிஸ் தூதுவரை சந்தித்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள், அரசியல் தீர்வு விடயங்கள் குறித்து கலந்துரையாடியுள்ளனர்.

பல்லின சமூக கட்டமைப்பை கொண்ட சுவிஸ்லாந்து நாட்டின் அரசியல் நகர்வுகள் மற்றும் அங்கீகாரம் போன்றவை இலங்கைக்கும் அமைய வேண்டும் என்ற விடயங்களை தமிழ் தேசிய கூட்டமைப்பினர் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.