பாரபட்சம் நீடித்தால் தனியான நகரசபைக்காக போராட வேண்டிய நிலையேற்படும் : மாநகர சபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன்.

முஸ்லிங்களும், தமிழர்களும் ஒற்றுமையாக வாழும் கல்முனை மாநகரில் மாநகர முதல்வரின் செயற்பாடுகள் திருப்திகரமாக இல்லை. மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கேள்வியெழுப்பினால் ஒலி வாங்கியையும் உடைத்தெறிந்துவிட்டு சபையிலிருந்து வெளியேறி சென்றுவிடுகிறார். இந்த நிலை நீடித்தால் கல்முனை பிரதேச செயலக தரமுயர்த்தல் போராட்டத்திற்கு மேலதிகமாக நாங்களும் நகரசபைக்கான கோரிக்கையை முன்னிறுத்தி போராடவேண்டிய நிலையேற்படும் என கல்முனை மாநகர சபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் தெரிவித்தார்.

புதன்கிழமை (17) மாலை கல்முனை தனியார் விடுதியில் இடம்பெற்ற ஊடகசந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், கல்முனை மாநகரசபையினால் தடுத்து நிறுத்தப்படும் அபிவிருத்திகள் தொடர்பிலான விடயங்களை இங்கு சுட்டிக்காட்ட வேண்டிய தேவை எழுந்துள்ளது. தனிப்பட்டவர்களுடன் கொண்ட கோபத்தின் காரணமாக கல்முனைக்கு வரும் அபிவிருத்திகளை தடுத்துக்கொண்டிருக்கிறார். கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்காக கிழக்கு மாகாண கிராம அபிவிருத்தி பணிப்பாளரினால் கல்முனை 12ஆம் வட்டாரத்தில் உள்ள பொதுமயான சுற்றுமதில் அமைக்க 13 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டு பிரதேச செயலகத்தினால் அதற்கான முன்னெடுப்புக்கள் செய்யப்பட்டுவரும் சூழ்நிலையில் ஏழு மாதங்கள் கடந்துள்ள நிலையில் கல்முனை முதல்வர் மற்றும் ஆணையாளர் அதற்கான அனுமதிகளை வழங்காமல் தமக்கு சாதகமானவர்களின் அரசியல் இருப்புக்காக இழுத்தடிப்பு செய்து கொண்டிருக்கிறார்கள். அரச அதிகாரியான ஆணையாளர் அரசியல்வாதியை போன்று செயற்படுவதை காணக்கூடியதாக உள்ளது. கல்முனை தமிழ் பிரதேசங்களின் அபிவிருத்தியை விரும்பாதவர்களுக்கு கல்முனை முதல்வர் சாதகமாக செயற்படுகிறார்.

அது மட்டுமின்றி மழைகாலம் ஆரம்பிக்கவுள்ளதால் பாண்டிருப்பு பிரதேசத்தில் இந்த வார ஆரம்பத்தில் வடிகான்களை துப்பரவு செய்யும் பணியில் கல்முனை மாநகர சுகாதார ஊழியர்களும், இயந்திரமும் வேலை செய்து கொண்டிருந்த போது கல்முனை பொலிஸில் கடமையாற்றும் ஒரு உப பொலிஸ் பரிசோதகரும், அவருடன் வந்த இன்னும் சில பொலிஸாரும் மதுபோதையில் தடுமாறியவர்களாக வாக்குவாதப்பட்டு அந்த ஊழியர்களை பொய்யான வழக்கை பதிவுசெய்து கைதுசெய்வேன் என்று மிரட்டி தாக்க முற்பட்டார்கள். அப்போது அந்த வழியால் வந்த நான் இது தொடர்பில் தலையிட்டு நியாயம் கேட்டேன். இன்றுவரை இதுதொடர்பில் கல்முனை முதல்வரோ அல்லது அவருடன் இணைந்திருப்பவர்களோ, மாநகர நிர்வாகிகளோ அந்த சுகாதார ஊழியர்களுக்கு ஆதரவாக குரல்கொடுக்க முன்வராமல் மௌனியாக இருக்கிறார்கள். மட்டுமின்றி அந்த அப்பாவி சுகாதார ஊழியர்களையும் சிலர் அதிகாரத்தொனியில் மிரட்டுகிறார்கள். இது தொடர்பில் நாங்கள் மிகவும் கவலையுற்றுள்ளோம்.

பொதுமயான சுற்றுமதில் அமைக்கும் பணிகளை கிராம அபிவிருத்தி சங்கம் ஒப்பந்தங்களை கைச்சாத்திட்டு ஆரம்பித்துள்ள போது மாநகர சபையினால் தடுத்து நிறுத்தப்பட்ட விடயம் தொடர்பில் கடந்த சபை அமர்வில் நான் கேள்வியெழுப்பினேன். அப்போது முதல்வர் அவரது ஒலிவாங்கியையும் உடைத்தெறிந்துவிட்டு சபையிலிருந்து வெளியேறி சென்றுவிட்டார். இந்த நிலை நீடித்தால் பிரதேச செயலக போராட்டத்திற்கு மேலதிகமாக நாங்களும் எதிர்காலத்தில் எங்களுக்கான தனியான நகரசபைக்கான கோரிக்கையை முன்னிறுத்தி போராடவேண்டிய நிலையேற்படும் என்றார்.