ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் நௌபர் மௌலவி, ராஜித் மௌலவி உள்ளிட்ட 25 பிரதிவாதிகளுக்கு எதிராக சட்ட மா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை எதிர்வரும் ஜனவரி மாதம் 12 ஆம் திகதி வரை ஒத்திவைப்பதற்கு கொழும்பு மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் இன்று உத்தரவிட்டது.
தமித் தொடவத்த, அமில ரணராஜா மற்றும் நவரத்ன மாரசிங்க ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் முன்னிலையில் குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, பலத்த பாதுகாப்புடன் பிரதிவாதிகள் அனைவரும் நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டனர்.
தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அடங்கிய குற்றப்பத்திரத்தை தமிழ் மொழியில் வழங்குமாறு பிரதிவாதிகள் இதன்போது கோரிக்கை விடுத்ததுடன், அதனை தயார் செய்வதற்காக கால அவகாசம் அவசியம் என்பதால், வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
எனினும், இன்றைய வழக்கு விசாரணையின் போது பிரதிவாதிகள் 10 பேர் சார்பில் சட்டத்தரணிகள் ஆஜராகவில்லை.
அதற்கமைய, தமிழ் மொழி தெரிந்த சட்டத்தரணிகளை முன்வைக்குமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவருக்கு அறிவித்தல் அனுப்புமாறும் நீதிபதிகள் குழாம் உத்தரவிட்டுள்ளது.