ஜனநாயக மாநாட்டில் கலந்துகொள்ள தாய்வானுக்கு விடுக்கப்பட்ட அழைப்பு, அந்நாட்டுக்கு வழங்கப்படும் மறைமுக சர்வதேச அங்கீகாரம் என அமெரிக்காவை சீனா கடுமையாக விமர்சித்துள்ளது. அமெரிக்கா தலைமையில் அடுத்த மாதம் 9 முதல் 10ஆம் திகதி வரை ‘ஜனநாயகத்துக்கான மாநாடு’ நடைபெறவுள்ளது.
காணொளி மூலம் நடைபெறவிருக்கும் இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக, 110 நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் சீனா, ரஷ்யா, போஸ்னியா, ஹங்கேரி ஆகிய இரு ஐரோப்பிய நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. அத்துடன், ஆசிய-பசிபிக் பிராந்தியத்தைச் சேர்ந்த பாகிஸ்தான், ஜப்பான், அவுஸ்ரேலியா, தென்கொரியா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில், ஜனநாயக மாநாட்டில் கலந்துகொள்ள தாய்வானுக்கு அழைப்பு விடுக்கப்பட்டமை குறித்து சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஷாவ் லிஜியாங் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில்,
‘ஜனநாயகத்துக்கான மாநாட்டில் பங்கேற்பதற்கு அமெரிக்க அதிகாரிகள் தாய்வானை அழைத்துள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறோம். சீனா என்பது ஒற்றை தேசமாகும். அந்த தேசத்துக்கு சீன மக்கள் குடியரசு (பிஆர்சி) அரசாங்கம்தான் ஒரே பிரதிநிதியாகும். சீனாவின் ஓர் அங்கம் என்பதைத் தவிர தாய்வானுக்கு வேறு எந்த சர்வதேச அங்கீகாரமும் கிடையாது. இந்தக் கொள்கையை அமெரிக்கா பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
இதுபோல் சர்வதேச மாநாடுகளில் அந்தப் பிராந்தியத்துக்கு அழைப்பு விடுப்பது, தைவான் பிரிவினைவாதத்தை ஊக்குவிக்கும். பிரிவினைவாதத்துக்கு களம் அமைத்துக் கொடுப்பது அமெரிக்காவைத்தான் திருப்பித் தாக்கும். பிரிவினைவாத சக்திகள் நெருப்புடன் விளையாடுவது, அந்த சக்திகளைத்தான் சுட்டுப் பொசுக்கும். ஜனநாயக மாநாட்டை அமெரிக்கா நடத்துவதன் நோக்கம் உலக நாடுகளிடையே பிளவை ஏற்படுத்துவதுதான்.
ஜனநாயகம் என்பது மனிதகுலத்திடம் காணப்படும் இயல்பான கட்டமைப்பாகும். அதற்கு எந்த நாடும் உரிமை கொண்டாடக் கூடாது. தற்போது ஜனநாயகத்தை மேம்படுத்துவதாகக் கூறி அமெரிக்கா நடத்துவது, சர்வதேச அரசியலில் தனது இலக்குகளை அடையும் உள்நோக்கத்தைக் கொண்ட மாநாடாகும்’ என கூறினார்.