பாதீடு தோல்வி: வல்வெட்டித்துறை நகர சபை தவிசாளரின் பதவி பறிபோகும்?

வல்வெட்டித்துறை நகர சபையின் வரவு-செலவுத் திட்டம், இரண்டாம் முறையும் இன்றைய தினமும் (30) ஒரு வாக்கால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

வல்வெட்டித்துறை நகர சபை வரவு-செலவுத் திட்டம் கூட்டம், இன்றைய தினம், தவிசாளர் என். செல்வேந்திரா தலைமையில் நடைபெற்றது.

இதன்போது, கடந்த 17ஆம் திகதி, சபையில் முன்வைக்கப்பட்ட வரவு-செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்ட நிலையில், இன்றைய தினம் திருத்தங்களுடன் சபையில் முன்வைக்கப்பட்ட போது, அதுவும் தோற்கடிக்கப்பட்டு உள்ளது. வாக்களிப்பின் போது முன்னரைப் போல எதிராக ஒன்பது வாக்குகளும் ஆதரவாக எட்டு  வாக்குகளும் கிடைத்தன.

இதனால் ஒரு வாக்கினால்  வரவு – செலவுத் திட்டம்  மீண்டும்  தோல்வி அடைந்தது.

இதனையடுத்து சபைக்கு புதிய தவிசாளர், உபதவிசாளர் தெரிவு  செய்யப்பட்ட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

வல்வெட்டித்துறை நகர சபையின் முன்னாள் தவிசாளார் கே. கருணாந்தராசா (வயது 76) கொரோனா தொற்றுக்கு உள்ளாகி, கடந்த ஓகஸ்ட் மாதம் 11ஆம் திகதியன்று உயிரிழந்தார்.

அதனை அடுத்து, புதிய தவிசாளராக என். செல்வேந்திரா, கடந்த செப்டெம்பர் மாதம் 22ஆம் திகதியன்று, ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார்.

இந்நிலையில் அவரால் முன்வைக்கப்பட்ட இரு வரவு-செலவுத் திட்டமும் தோல்வியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.