அரசியல் காரணிகளை அடிப்படையாகக் கொண்டு உள்ளூராட்சிமன்றத் தேர்தல் பிற்போடப்பட்டுள்ளமை தெளிவாக உள்ளது. கோவிட்19 வைரஸ் தாக்கத்தினால் தேர்தல் பிற்போடப்படவில்லை என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள். நாட்டின் தேர்தல் முறைமை ஆட்சியாளர்களினால் தொடர்ச்சியாக மாற்றியமைப்பது ஜனநாயகத்துக்கு விரோதமான செயற்பாடு என பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சிமன்ற அமைச்சருக்கு தேர்தல் சட்டங்களுக்கு அமைய வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கு அமைய உள்ளூராட்சிமன்றத் தேர்தலை ஒரு வருட காலத்துக்கு பிற்போடும் அமைச்சரவைப் பத்திரம் அமைச்சரவைக்கு கடந்த வாரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
கோவிட்19 வைரஸ் தாக்கத்தை கருத்திற் கொண்டு உள்ளூராட்சிமன்றத் தேர்தல் பிற்போடப்பட்டுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
கோவிட் 19 வைரஸ் பரவல் தாக்கம் செலுத்தும் வேலையில் பாராளுமன்ற தேர்தலை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு சிறந்த முறையில் நடத்தியது. தற்போதைய அரசாங்கம் கடந்த வருடங்களில் எதிர்க் கட்சி பதவியில் இருக்கும் போது உரிய நேரத்தில் தேர்தலை நடாத்துவதற்கு பல போராட்டங்களை முன்னெடுத்தது. அவர்களின் போராட்டங்களுக்கும் முயற்சிகளுக்கும் பெப்ரல் அமைப்பு முழு ஒத்துழைப்பையும் வழங்கியது.
தேர்தலை நடத்துவதால் கோவிட் பரவல் தீவிரமடையுமா? தேர்தலுக்கு செலவாகும் 6000 ஆயிரம் மில்லியன் முதல் 10000 ஆயிரம் மில்லியன் வரையிலான நிதி தற்போது அரசாங்கத்திடம் உள்ளதா? தேர்தலுக்கு முன்னர் தேர்தல் முறைமை தொடர்பில் ஒரு தீர்வு கிடைக்கப் பெறுமா? பல மில்லியன் செலவழித்து தெரிவாகும் மக்கள் பிரதிநிதிகள் மீது மக்கள் முதலில் நம்பிக்கை கொண்டுள்ளார்களா ஆகிய கேள்விகள் தோற்றம் பெற்றுள்ளன.
அரசியல் காரணிகளை அடிப்படையாகக் கொண்டு உள்ளூராட்சிமன்றத் தேர்தல் பிற்போடப்பட்டுள்ளது என்பது தெளிவாக உள்ளது. நல்லாட்சி அரசாங்கமும் அதற்கு முற்பட்ட அரசாங்கமும் இவ்வாறான தன்மையில் செயற்பட்டன. நாட்டின் தேர்தல் முறைமையை ஆட்சியாளர்கள் குறுகிய தேவைக்கேற்ப செயற்படுத்திக் கொள்வது ஜனநாயகத்துக்கு முரணானது. சர்வசன வாக்குரிமை வழங்கப்பட்டு 90 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் மக்களின் வாக்குரிமை மறுக்கப்படுவது அடிப்படை உரிமைக்கு முரணானது” என்றுள்ளது.