சிறிலங்காவிற்கு மாற்றம் ஒன்று அவசியம் எனவும், தற்போதைய பாதையில் நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது எனவும் கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
ஆன்மீக கொள்கைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டியது, அரசியல்வாதிகளுக்கு மாத்திரமன்றி அனைத்து குடிமக்களினதும் கடமை எனவும் கர்தினால் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு – இராகமையில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் இடம்பெற்ற நத்தார் ஆராதனையின் போது உரையாற்றிய கர்தினால் மல்கம் ரஞ்சித், நாட்டு மக்கள் பல்வேறு சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
பல்வேறு காரணங்களுக்காக அனைத்து மதத் தலைவர்களும் மற்றவர்களைக் குறைத்து மதிப்பிடுவதன் மூலம் அவர்கள் உயர்வடைய முனைவதாகவும் கர்தினால் விமர்சனம் வெளியிட்டுள்ளார்.
கடவுள் நம்மிடையே மனித வடிவத்தை எடுத்தபோது, மக்கள் கடவுளை விட்டு அடிமைத்தனத்தை நோக்கி நகர்ந்ததாக குறிப்பிட்ட அவர் இதனை அபிவிருத்தி எனக் குறிப்பிட்டதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
பாவமும் சுயநலமும் ஒரு நபரை சிக்க வைத்து அமைதியின்மைக்கு உள்ளாக்கும் என இயேசுநாதர் போதித்ததாகவும், பேராசை ஒரு நபரை அமைதியற்றதாக மாற்றும் என கௌதம புத்தர் போதித்ததாகவும், தியாகம் இன்றி மகிழ்ச்சியை பெற முடியாது எனவும் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை மேலும் கூறியுள்ளார்.