வெளிநாட்டு அமைச்சு திடீர் தீர்மானம்!

நைஜீரியாவின் அபுஜாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம், ஜேர்மனியின் பிராங்பேர்ட்டில் உள்ள இலங்கையின் துணைத் தூதரகம் மற்றும் சைப்ரஸின் நிக்கோசியாவில் உள்ள இலங்கையின் துணைத்தூதரகம் போன்ற வெளிநாடுகளில் உள்ள மூன்று தூதரகங்கள் / பணிமனைகளை 2021 டிசம்பர் 31ஆந் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் தற்காலிகமாக மூடுவதற்கு வெளிநாட்டு அமைச்சு தீர்மானித்துள்ளது.

அறிக்கை ஒன்றை வௌியிட்டு வௌிநாட்டு அமைச்சு இதனை குறிப்பிட்டுள்ளது.

குறித்த அறிக்கையில்,

அமைச்சரவையின் அங்கீகாரத்தைப் பெற்ற இந்தத் தீர்மானமானது, வெளிநாட்டு அமைச்சினால் மேற்கொள்ளப்பட்டு வரும் வெளிநாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்கள் மற்றும் பணிமனைகளின் வலையமைப்பின் மறுசீரமைப்புச் செயன்முறையின் ஒரு பகுதியாகும். உலகளாவிய தொற்றுநோயால் முன்வைக்கப்படும் கடுமையான பொருளாதார சவால்களின் பின்னணியில் இருதரப்பு உறவுகளை திறம்பட முன்னெடுப்பதனை உறுதி செய்யும் அதே வேளையில், நாட்டிற்குத் தேவையான வெளிநாட்டு இருப்புக்களைப் பாதுகாத்தல் மற்றும் வெளிநாடுகளில் உள்ள இலங்கையின் தூதரகங்கள் / பணிமனைகளைப் பராமரித்தல் தொடர்பான செலவீனங்களைக் குறைத்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இந்த மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படுகின்றது.

தெரிவு செய்யப்பட்ட மூன்று தூதரகங்கள் / பணிமனைகள் மூடப்பட்டவுடன், இருதரப்பு அரசியல், பொருளாதாரம், கலாச்சார உறவுகள் மற்றும் தூதரக செயற்பாடுகளைப் பராமரித்தல் உள்ளிட்ட அவற்றின் செயற்பாடுகள் அங்கீகாரம் பெற்ற தூதரகங்களின் கீழ் வரும் அதே வேளையில், அபுஜா மற்றும் நிக்கோசியா ஆகியவற்றின் விடங்கள் இலங்கையின் வதிவிடமல்லாத உயர்ஸ்தானிகராலயங்கள் / தூதரகங்களால் மேற்கொள்ளப்படும். இது சம்பந்தமாக, கென்யாவின் நைரோபியில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் ஊடாக நைஜீரியாவுக்கு ஒரே நேரத்தில் அங்கீகாரம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், ஆபிரிக்காவில் உள்ள ஏனைய நாடுகள் முறையே அபுஜாவில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் ஊடாகவும், கெய்ரோவில் உள்ள இலங்கைத் தூதரகம், எகிப்து மற்றும் நைரோபியில் உள்ள உயர்ஸ்தானிகராலயத்தின் ஊடாகவும் ஒரே நேரத்தில் அங்கீகாரம் பெற்றுள்ளன. பிராங்பேர்ட்டில் உள்ள இலங்கையின் துணைத்தூதரகத்தின் செயற்பாடுகள், வர்த்தகம், முதலீடு மற்றும் சுற்றுலா ஊக்குவிப்பு, அத்துடன் பிராங்பேர்ட் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மற்றும் பணிபுரியும் இலங்கைப் பிரஜைகளின் கொன்சியூலர் விவகாரங்கள் ஆகியன ஜேர்மனியின் பேர்லினில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் கீழ் வரும்.

இத்தாலியின் ரோமில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் மூலம் சைப்ரஸிற்கு ஒரே நேரத்தில் அங்கீகாரம் வழங்கப்படுவது தற்போதைய நடைமுறையின்படி சைப்ரஸுடனான இலங்கையின் இருதரப்பு உறவுகளைக் கையாள்வதன் மூலம் தொடரும். நிக்கோசியாவில் உள்ள துணைத் தூதரகத்தால் கையாளப்படும் தூதரகப் பணிகள் ரோமில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் கீழ் கொண்டு வரப்படும். எவ்வாறாயினும், வழக்கமான அடிப்படையில் கவனிக்கப்பட வேண்டிய சைப்ரஸில் வசிக்கும் மற்றும் பணிபுரியும் சுமார் 6,000 இலங்கை ஊழியர் சமூகத்தின் குறிப்பிடத்தக்க தூதரக மற்றும் நலன்புரித் தேவைகளைக் கருத்தில் கொண்டு, நிக்கோசியாவைத் தளமாகக் கொண்ட பொருத்தமான தகுதி வாய்ந்த கௌரவ தூதுவரை உடனடியாக நியமனம் செய்வதற்கு வெளிநாட்டு அமைச்சு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. இவ்வாறு நியமிக்கப்பட்ட கௌரவ தூதுவர், ரோமில் உள்ள இலங்கைத் தூதரகம் மற்றும் வெளிநாட்டு அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ், வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு மற்றும் சந்தை பல்வகைப்படுத்தல் மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் ஆகியவற்றுடன் நெருக்கமான ஒருங்கிணைப்புடன் செயற்படுவார். வெளிநாட்டு அமைச்சு சைப்ரஸில் உள்ள மாறுதல் செயன்முறையை உன்னிப்பாகக் கண்காணித்து, ஏதேனும் சிக்கல்கள் இருப்பின், பொருத்தமானதாகவும் அவசியமானதாகவும் கருதப்படும் மேலதிக தீர்வுகளை எதிர்காலத்தில் வழங்கும்.

செலவுகளைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் இருந்தபோதிலும், வெளிநாட்டு அமைச்சு அனைத்து நாடுகளுடனும் இருதரப்பு உறவுகளை உகந்த அளவில் பராமரிக்கவும், ஏற்றுமதி, வெளிநாட்டு நேரடி முதலீடு, சுற்றுலா மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு உருவாக்கம் ஆகியவற்றை மேம்படுத்தும் பொருளாதார இராஜதந்திரத்தில் விஷேட கவனம் செலுத்துவதன் மூலம் அரசாங்கத்தின் வெளியுறவுக் கொள்கை நோக்கங்களை நிறைவேற்றவும் அதிக முன்னுரிமை அளித்து வருகின்றது. வெளிநாட்டுப் பணம் அனுப்புதல் அடிப்படையில் நாட்டின் பொருளாதாரத்திற்கான அவர்களது நேரடி மற்றும் குறிப்பிடத்தக்க பங்களிப்பைக் கருத்தில் கொண்டு, வெளிநாடுகளில் உள்ள இலங்கை ஊழியர்களின் நலன் மற்றும் வினைத்திறனான செயற்பாடுகளைப் பாதுகாப்பதற்கு அமைச்சு அதிக கவனம் செலுத்துகின்றது. இலக்குகளை அடைவதற்கான தூதரகங்கள் / பணிமனைகளின் பிந்தைய தேவைகளின் தொடர்ச்சியான மதிப்பீடனது, வெளிநாட்டு அமைச்சினால் வெளிநாட்டு அமைச்சு மற்றும் வெளிநாடுகளிலுள்ள இலங்கையின் தூதரக / பணிமனைத் தலைவர்கள், நிதி மற்றும் வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சுக்கள், பிராந்திய ஒத்துழைப்பு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு மற்றும் சந்தை பல்வகைப்படுத்தல் இராஜாங்க அமைச்சுக்களின் சிரேஷ்ட அதிகாரிகள், வர்த்தகத் திணைக்களம், இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை, இலங்கை முதலீட்டு சபை மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் உட்பட சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்களின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய உள்ளக மற்றும் வெளியக ஆலோசனை செயன்முறையின் மூலம் மேற்கொள்ளப்படுகின்றது. அடையாளம் காணப்பட்ட மூன்று தூதரகங்கள் / பணிமனைகளை தற்காலிகமாக மூடுவதற்கான தீர்மானம் தொடர்ச்சியான மீளாய்வுக்கு உட்பட்டு, தேவையானதாக கருதப்படும் சம்பந்தப்பட்ட வதிவிடத் தூதரகங்கள் / பணிமனைகளை மீண்டும் நிறுவுவது குறித்து பரிசீலணை செய்வதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.