இலங்கை மக்கள் வங்கியை கறுப்பு பட்டியலுக்குள் உள்வாங்க சீன தூதரகம் நடவடிக்கை எடுத்திருந்தது. எனினும் தற்போது சீன தூதரகத்தின் பொருளாதாரம் மற்றும் வணிக பிரிவு, மக்கள் வங்கியை கருப்பு பட்டியலிலிருந்து விடுவித்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2021 ஒக்டோபர் 29 ஆம் திகதி ஒப்பந்தத்தை மீறியமையால் இலங்கை மக்கள் வங்கியை கறுப்புப் பட்டியலில் இணைத்தது.
கடன் பத்திரத்திற்கு அமைய குறித்த கொடுப்பனவு செலுத்தப்பட்டுள்ளதாக சீன தூதரகத்துக்கு மக்கள் வங்கி அறிவித்திருந்தது.அத்தோடு இன்றைய தினத்திற்குள் குறித்த கறுப்புப்பட்டியலில் இருந்து தம்மை நீக்கிக்கொள்ள எதிர்பார்ப்பதாக மக்கள் வங்கி நேற்று குறிப்பிட்டிருந்தது.
சீனாவிலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட உரத்தில், தீங்கு விளைவிக்கும் பக்றீரியா உள்ளதாக கூறி அதனை நிராகரிப்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் தீர்மானித்திருந்தது.இந்த நிலையிலேயே நிராகரிக்கப்பட்ட உரத்திற்கான இழப்பீடுத் தொகை வழங்க வேண்டும் என சீனா கோரியிருந்தது.
எனினும் அதற்கான பணத்தை செலுத்த மக்கள் வங்கி பின்வாங்கியிருந்தது.இதன் காரணமாக மக்கள் வங்கியை கருப்பு பட்டியலுக்குள் உள்வாங்க சீன தூதரகம் நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.