பொரளை தேவாலயத்தில் கைக்குண்டு வைக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் அரசாங்கத்தையோ பொலிஸாரையோ நழுவிச் செல்ல விட மாட்டோம்.
இந்த விவகாரம் தொடர்பான முழுமையான உண்மைத் தன்மையை வெளியே கொண்டு வரும் வரையில் அரசாங்கத்திற்கு எதிராக நாம் போராட்டத்தை நடத்துவோம் என கொழும்பு மறை மாவட்ட பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.
பொரளை சகல புனிதர்கள் தேவாலய சங்கிரிஸ்டியனான முனி மற்றும் ஏனைய மூவருக்கும் ஏற்பட்ட அசாதாரணத்திற்கு எதிராக நீதிமன்றத்தை நாடவுள்ளோம். அவர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுப்பதற்கான செயற்பாடுகளை நாம் ஆரம்பித்துள்ளோம் என அவர் மேலும் தெரிவித்தார்.
கடந்த ஞாயிறன்று இரவு சூம் தொழில்நுட்பத்தின் ஊடாக நடைபெற்ற கலந்துரையாடலொன்றின்போதே கர்தினால் ஆண்டகை மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்த கலந்துரையாடலின்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
“சம்பவம் நடைபெற்ற தினத்தன்று காலை வேளையில் சி.சி.டி.வி. காணொளிகளை பார்வையிடும் படி நான் எமது குருவானவர்களுக்கு அறிவுருத்தியிருந்தேன்.
ஏனெனில், இந்த குண்டை வேறு யாராவது கொண்டு வந்து வைத்தார்களா என தேடிப்பார்க்க வேண்டும் என கூறினேன். இதன்படி, இந்த குண்டை யார் ஆலயத்திற்குள் வந்து வைத்தார்கள் என என்பதை எங்களால் கண்டறிய முடிந்தது.
மேலும், குண்டை வைத்தவர் ஆலய சங்கிரிஸ்டியனான முனி என்பவர்தான் என கூறி அவர் மீது பலியை சுமத்துவதற்கு பொலிஸார் முயற்சித்தனர். இதைத்தான் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் கூறியிருந்தார். இந்த சம்பவம் மட்டுமல்லாது நாரஹேன்பிட்டி வைத்தியசாலையிலும் குண்டு வைத்தமைக்கு முனி என்பவர் மீது பலியை போட முயற்சித்தனர்.
இது போன்ற விடயங்களை நடத்துவதற்கு எங்களால் இடமளிக்க முடியாது. அரசாங்கமோ அல்லது பொலிஸாரோ யாராக இருப்பினும் இந்த சம்பவத்திலிருந்து எவரையும் நழுவில் செல்ல விட முடியாது.
முனி என்பவருக்கும் ஏனைய மூவருக்கும் ஏற்பட்ட அசாதாரணத்திற்கு நீதியை வழங்க வேண்டும். இந்நாட்டில் நீதிமன்றம் உள்ளது. நீதிமன்றத்தின் மீது எமக்கு முழு நம்பிக்கை உள்ளது. ஆகவே, எமக்கு நீதியை பெற்றுக்கொள்வதற்காக நாம் நீதிமன்றத்தை நாடவுள்ளோம். அதற்குத் தேவையான சகல வேலைகளையும் நாம் முன்னின்று செயற்படுவோம்.
பொரளை சகல புனிதர்கள் தேவாலயத்திலிருந்து கண்டெடுக்கப்பட்ட கைக்குண்டு தொடர்பான விவகாரம் தொடர்பிலான முழுமையான உண்மைத் தன்மையை வெளியே கொண்டு வருவதற்காக அரசாங்கத்துக்கு எதிராக நாம் போராட்டத்தை நடத்துவோம்.
இந்த அரசாங்கமும், பொலிஸாரும் இணைந்து நாடகமொன்றை நடத்தி வருகின்றமை தெளிவாகத் தெரிகிறது. இதன் உண்மைத் தன்மையை வெளிச்சத்துக்கு கொண்டு வருவதற்கு முயற்சிப்போம் ” என்றார்.