கயேந்திர குமார் பொன்னம்பலத்தின் அகில இலங்கை தமிழ் காங்கிரசின் கட்சியின் யாப்பு ஒற்றையாட்சியை வலியுறுத்துகின்ற நிலையில் தமிழ் மக்களை திசைதிருப்ப தமிழ் மக்கள் முன்னணி என்ற குழுவை அமைத்து 13 க்கு எதிராகப் போராட்டம் நடத்துகிறார்கள் என புளொட் அமைப்பின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.
வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் 13வது திருத்தச் சட்டத்தினை எதிர்க்கும் தமிழ் தேசிய முன்னணியினர் தமிழ் மக்களின் தீர்வாக எதனை முன் வைக்கப் போகிறார்கள் அல்லது அவர்கள் தீர்வு தொடர்பில் எடுக்கும் முயற்சி என்னவென கேட்க விரும்புகின்றேன்.
மக்கள் மத்தியில் பொய் சொல்வதற்கு தகுதி வேண்டும் 13வது திருத்தச் சட்டத்தினை நாங்கள் தீர்வாக ஏற்றுக் கொண்டோம் ஏற்றுக் கொண்டுள்ளோம் என கஜேந்திரகுமார் அணியினர் பொய் பிரச்சாரம் செய்கிறார்கள்.
13 வேண்டாம் என்றால் 13பதிலாக என்ன தீர்வினை முன் வைக்கப் போகிறீர்கள்? அல்லது தீர்வு விடயத்தில் என்ன நடவடிக்கை எடுத்துள்ளீகள் எனக் கூறமுடியுமா.
கயேந்திரகுமார் அணியினர் எதிர்வரும் மாகாணசபை தேர்தலில் போட்டியிடவுள்ள நிலையில் யாரை முதலமைச்சராக முட்படுத்துவது என போட்டி நிலவுகிறது.
கஜேந்திரகுமாரின் அகில இலங்கை தமிழ் காங்கிரசின் தேர்தல் விஞ்ஞாபனத்தை 75ரூபாய் முத்திரைக் காசு வழங்கி பார்த்தேன் அவர்களின் தேர்தல் விஞ்ஞாபனம் ஒற்றையாட்சியை வலியுறுத்துகிறது.
காங்கிரஸ் என்ற பெயரில் போராட்டம் நடத்தினால் தமது கபடத்தனம் தெரிந்து விடும் என்பதற்காக முன்னணி என்ற ஒரு குழுவை ஆரம்பித்து 13ஐ தமிழ் தேசிய கட்சிகள் ஒன்றிணைந்து ஏற்றிவிட்டார்கள் அதற்கு எதிராக போராட வாருங்கள் என மக்களை குழப்பி வருகிறார்கள்.
தமிழ் தேசியத்திற்காக ஒன்றிணைந்த தலைவர்கள் நாங்கள் ஒருபோதும் 13வது திருத்தச்சட்டத்தை தமிழ் மக்களின் தீர்வாக ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறோம் .