சட்ட மறுசீரமைப்புக்களை மேற்கொள்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருக்கக்கூடிய அரசாங்கம், அதனை முன்னிறுத்திய உள்ளகப்பொறிமுறைகள் சர்வதேச நியமங்களையும் கடப்பாடுகளையும் பூர்த்திசெய்யும் வகையில் அமைந்திருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி ஹனா சிங்கர் ஹம்டி, அதிலுள்ள குறைபாடுகளை அடையாளங்காண்பதற்கு விரிவான கலந்துரையாடல்களை முன்னெடுக்கவேண்டியது அவசியமாகும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் பெப்ரவரி மாதம் ஆரம்பமாகவுள்ள நிலையில், மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துவதற்காக இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட முன்னேற்றகரமான நடவடிக்கைகள் தொடர்பில் இலங்கையில் பணியாற்றும் வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் நேற்று வியாழக்கிழமை விளக்கமளித்திருந்தார்.
இதன்போது மனித உரிமைகள் பாதுகாப்பு மற்றும் மேம்பாடு தொடர்பில் அர்ப்பணிப்புடன் செயலாற்றுவதற்கு இலங்கை தயாராக இருப்பதாகக் கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரின்போது தான் அளித்த வாக்குறுதியை மீண்டும் நினைவுகூர்ந்த அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், பொறுப்புக்கூறல், சட்ட மறுசீரமைப்பு, நல்லிணக்கம் ஆகியவற்றை உறுதிப்படுத்துவதை இலக்காகக்கொண்டு உள்நாட்டு நிறுவனங்களின் ஊடாக இலங்கை அரசாங்கம் கணிசமான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது என்றும் குறிப்பிட்டிருந்தார்.
வெளிவிவகார அமைச்சருடனான இச்சந்திப்பில் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான நிரந்தர வதிவிடப்பிரதிநிதி ஹனா சிங்கர் ஹம்டியும் பங்கேற்றிருந்த நிலையில், நிலைமாறுகால நீதியை உறுதிப்படுத்தல், நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை அடைதல் மற்றும் பயங்கரவாதத்தடைச்சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளல் ஆகிய விடயங்களில் அவற்றுடன் தொடர்புடைய உள்நாட்டுக்கட்டமைப்புக்களால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளுக்கு அவர் தனது பாராட்டை வெளிப்படுத்தினார்.
அதேவேளை சட்ட மறுசீரமைப்புக்களை மேற்கொள்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருக்கக்கூடிய அரசாங்கம், அதனை முன்னிறுத்திய உள்ளகப்பொறிமுறைகள் சர்வதேச தரநியமங்களையும் கடப்பாடுகளையும் பூர்த்திசெய்யும் வகையில் அமைந்திருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ளவேண்டியது அவசியமாகும் என்றும் ஐ.நாவின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி ஹனா சிங்கர் வலியுறுத்தியுள்ளார்.
வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸுக்கும் வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கும் இடையில் நேற்று வியாழக்கிழமை வெளிவிவகார அமைச்சில் இடம்பெற்ற சந்திப்பு தொடர்பில் அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையை மேற்கோள்காட்டி தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவிலேயே ஹனா சிங்கர் ஹம்டி மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார்.
சட்டத்தில் ஏற்படுத்தப்படும் மாற்றங்கள் சட்ட அமுலாக்கத்தினால் ஏற்படுத்தப்படும் மாற்றங்களுடன் சமாந்தரமாகப் பயணிப்பதாக அப்பதிவில் சுட்டிக்காட்டியுள்ள அவர், இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது அவற்றிலுள்ள குறைபாடுகளை அடையாளங்காண்பதற்கும் தீர்வுகளைக் கண்டறிவதற்கும் விரிவான கலந்துரையாடல்களும் ஆராய்வும் இன்றியமையாததாகும் என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.