13ஆவது திருத்தத்தை சின்னாபின்னப்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள்- ஜனா பா.உ

அரசியலமைப்பைப் பேணிப் பாதுகாக்க உறுதிமொழியெடுத்த நீங்கள் 13ஆவது திருத்தத்தை எவ்வாறு சின்னாபின்னப்படுத்தினீர்கள். இன்னும் சின்னாபின்னப்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள் என்பதற்கு அண்மைக்கால அரசியல் சம்பவங்கள் சான்றாக அமைகிறது என்று தெரிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம் (ஜனா) பிராந்தியங்களின் ஒன்றியம் என்ற அரசியலமைப்பு வரைபை வரைந்த சட்டப் பேராசிரியர் பீரிஸ் அவர்கள் இது தொடர்பாக கள்ள மௌனம் சாதித்துக் கொண்டிருக்கிறார் எனவும் கூறினார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் ஈழ விடுதலை இயக்க (ரெலோ)த்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) வின் இன்றைய தினம் (23) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்தார்.

உரையின் முழு வடிவம்,

நாட்டில் தற்பேது நிலவும் நிலைமைகள் தொடர்பிலான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுவதன் மூலம் எமது நாட்டின் இப்போதைய நிலைமைகளை எமது நாட்டு மக்களுக்கு எடுத்துரைப்பதற்கு கிடைத்த பெரும் சந்தர்ப்பமாகவே இதனைக் கருதுகின்றேன்.

எமது நாட்டின் வரலாற்றில் ராஜபக்ச குடும்பத்தின் வரலாறு பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டுமா? இல்லை இழிவாக எடுத்துரைக்கப்பட வேண்டுமா? என்ற இரு துருவ வினாக்களுக்கான விடையினை அரசாங்கமே தேர்ந்தெடுக்க வேண்டும். இன்னமும் காலம் முடியவில்லை. திருந்த இடமுண்டு. ஆனால், நீங்கள் திருந்த மாட்டீர்கள் என்ற நம்பிக்கையும் எனக்குண்டு.

69 இலட்சம் மக்களினால் அதுவும் பெரும்பான்மை மக்களின் பெரும்பான்மை வாக்குகளால் தெரிவு செய்ததாகப் பெருமைப்பட்டு அனுராதபுர மகாபோதியில் இருந்து பிரகடனம் செய்து பெருமைப்பட்ட நீங்கள் இன்று உங்களது செயல்திறனற்ற நிலைமையினை அந்த 69 இலட்சம் மக்களே உணர்ந்துள்ள நிலைமையை நாடு காண்கிறது.

அரசாங்கம் என்பது ஜனாதிபதி, அமைச்சரவை, பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளடங்கலாக சட்டவாக்கத்துறை, நிறைவேற்றுத்துறை, நீதித்துறை என்ற தூண்களில் சிறப்பாகக் கட்டியெழுப்பப்பட வேண்டும். இதற்கான அத்திவாரம் உறுதியாக இருக்க வேண்டும். ஆனால் இன்று அத்திவாரம் இல்லாத கட்டடம் போல சாட்டவாக்க, நிறைவேற்று, நீதித்துறை காணப்படுகிறது.

கூட்டுப் பொறுப்புடன் செயற்பட வேண்டிய அமைச்சர்களிடையே கூட்டுப் பொறுப்பென்பது இம்மியளவும் இல்லை. பாராளுமன்ற ஜனநாயக சம்பிரதாயம் நிலவும் நாடுகளில் அமைச்சரவைக் கூட்டுப் பொறுப்பு பாராம்பரியமாகப் பேணப்பட்டு வரும் மரபாகும். ஆனால், அமைச்சரவைத் தீர்மானங்களை அமைச்சர்களே எதிர்க்கட்சியினரைவிட மோசமாக விமர்சிக்கின்ற நிலையை இன்று நாங்கள் காண்கிறோம்.

அமைச்சரவைக் கூட்டங்களை திறந்தவெளியில் நடத்துங்கள் அதனை மக்களுக்கும் தெரிய சமூக ஊடகங்கள் மூலம் ஒளிபரப்புங்கள். அப்போது தெரியும் யார் புரூட்டஸ் என்பது. இல்லையெனில் அன்று எஸ்.டப்ளியூ.பண்டாரநாயக்கா கூறிய போன்று காலி முகத்திடலில் நடத்துங்கள். மக்கள் கண்ணாரக்கண்டு மகிழ்வார்கள்.

எமது நாடு மறுசீரமைக்க முடியாத, மீளக் கட்டியெழுப்பமுடியாத அதள பாதாளத்துக்குள் சென்று கொண்டிருக்கிறது. உலக அரசியல் வரலாற்றில் பாராளுமன்ற ஜனநாயக வரலாற்றில் என்றும் காணாதளவுக்கு அமைச்சர்களின் எண்ணிக்கை, இராஜாங்க அமைச்சர்களின் எண்ணிக்கை, செயலாளர்களின் எண்ணிக்கை, இவர்களது இணைப்புச் செயலாளர்கள், ஆலோசகர்கள், பிரேத்தியக உதவியாளர்கள் என்று அரச நிதி வீண்விரயமாகிக்கொண்டிருக்கிறது. கட்சிக் காரர்களுக்கும் அமைச்சர்களது உறவினர்களுக்கும் ஓய்வுபெற்ற இராணுவ உயரதிகாரிகளுக்கும் பதவிகளும், பவுசுகளும், வரப்பிரசாதங்களும் தந்து உல்லாசம் அனுபவிக்கத் தந்து, நாட்டு மக்களை சொல்லொணாத் துயரத்துக்குள் தள்ளிவிட்டுள்ளது இந்த அரசு.

ஆட்சியமைத்த இரு வருட காலத்துக்குள் அமைச்சரவையில் எத்தனை தடவை மாற்றங்களை செய்துள்ளீர்கள். உதை பந்தாட்டப் பந்துகூட இந்த அளவுக்கு உதைகளை பட்டிருக்காது. பசில் ராஜபக்சவினை பாராளுமன்றத்துக்குள் கொண்டுவருவதற்கும் நிதி அமைச்சராக்குவதற்கும் எத்தனை பாடு பட்டீர்கள். இதற்காக அமைச்சர் உதய கம்மம்பில எவ்வாறு பலிக்கடாவாக்கப்பட்டார். அலாவுதீனின் அற்புத விளக்கோடு அதிசய பொருளாதார மாற்றங்களினை ஏற்படுத்துவார் என்று அவரைச் சுற்றி போதி சத்துவருக்கு ஒப்பான விம்பத்தை ஏற்படுத்தினீர்கள். நடந்தது என்ன? நாட்டின் பொருளாதாரப் பிரச்சினை நிதி அமைச்சரினால் கட்டுப்படுத்த முடியாத நிலைமைக்குச் சென்றுவிட்டது.

எரிபொருள் விலை உயர்வு, எரிவாயு விலை உயர்வு, அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வு என்று நாட்டில் விலை உயராத பண்டங்களும் இல்லை. சேவைகளும் இல்லை. மகிந்த ராஜபக்ச அவர்களினால் நிதி அமைச்சை திறம்பட நிருவகிக்க முடியாது. கௌரவ பவித்திரா வன்னியாராச்சி அவர்களினால் சுகாதார அமைச்சினை திறம்பட நிருவகிக்க முடியாது. கௌரவ கெகலிய ரம்புக்கல்ல அவர்களினால் வெகுஜன ஊடகத்துறையை நிருவகிக்க முடியாது. என்று அவர்களது அமைச்சுப் பொறுப்புக்களை மாற்றினீர்கள். ஒரு அமைச்சினை ஒழுங்காக நிருவகிக்க முடியாதவர்கள் என்று கருதியவர்களுக்கே வேறு அமைச்சுப் பொறுப்புக்களை வழங்கியுள்ளீர்கள். உங்களால் நியமிக்கப்பட்ட ஜனாதிபதியின் ஆலோசகர்கள், அமைச்சுக்களின் ஆலோசகர்கள் என நியமிக்கப்பட்ட நிபுணத்துவ ஆலோசகர்களினால் பெற்றுக் கொண்;ட ஒரு நிபுணத்துவ ஆலோசனையையாவது இந்த உயரிய சபையில் எடுத்துரைக்க முடியுமா?

நாட்டின் நிதிக் கொள்கை தோல்வியடைந்துள்ளது. மத்திய வங்கி நாணாயக் கொள்கையை திறம்படக் கையாள முடியாத நிலையில் உள்ளது. நிதியமைச்சு தோல்வியடைந்துள்ளது வெளிநாட்டு அமைச்சு தோல்வியடைந்துள்ளது. நீதி அமைச்சு தோல்வியடைந்துள்ளது. விவசாயத்துறை அமைச்சு தோல்வியடைந்துள்ளது. சுகாதார அமைச்சு தோல்வியடைந்துள்ளது. கல்வி அமைச்சு தோல்வியடைந்துள்ளது. கடற்றொழில் அமைச்சு தோல்வியடைந்துள்ளது. கலாசார அமைச்சு தோல்வியடைந்துள்ளது. எரிபொருள் அமைச்சு தோல்வியடைந்துள்ளது. இவையாவும் ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் போல அன்றி பல பதங்களினை எடுத்துக் காட்டியுள்ளேன்.

அணி சேராக் கொள்கையையும், பஞ்ச சீலத்தையும், அரசியல் சித்தாந்தமாக்கி உலகத்துக்கு வெளியுறவுக் கொள்கைளினை எடுத்தியம்பிய எமது நாடு இன்று தனது பிழையான வெளிநாட்டுக் கொள்கையினால் சர்வதேச நாடுகளின் விரோதங்களைச் சம்பாதித்துக் கொண்டிருக்கிறது.

நாட்டின் வளங்கள் வெளிநாடுகளுக்கு தாரை வார்க்கப்படுகிறது. இதை எதிர்க்கட்சியினராகிய நாங்கள் கூறவில்லை. அரசாங்கக் கட்சியின் பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்களும் கூறவில்லை. கூட்டுப் பொறுப்புடன் இருந்து தீர்மானங்களை எடுக்கும் அமைச்சர்களே இதனைக் கூறுகின்றார்கள்.

நிதி அமைச்சர் கூறுகிறார். கறுப்புச் சந்தையில் டொலர் வாங்கி கறுப்புச் சந்தையில் ஆயுதம் வாங்கி, கறுப்பாகவே யுத்தத்தை முடித்தோம் என்று. இதை எதிர்க்கட்சியினர் கூறவில்லை. நிதி அமைச்சரே ஊடகவியலாளர் மகாநாட்டில் பெருமையுடன் கூறுகின்றார். இத்தகைய புத்திசாலித்தனமான நிதி அமைச்சரை எமது நாடு கொண்டிருக்கிறது. இதன் விளைவையே நாட்டு மக்கள் அனுபவிக்கிறார்கள்.

ஒரே இரவில் சேதனப் பசளைத் திட்டத்தினை கொண்டு வந்தீர்கள். இன்று நாட்டின் விவசாய உற்பத்தித்துறை எங்கு செல்கின்றது. ஒட்டு மொத்த விவசாயிகளுமே கடனாளிகளாக மாறியுள்ளார்கள்.

ஒரு பரீட்சையினை பிரச்சினை இல்லாது நடத்த முடியாத நிலைமையில் பரீட்சைத் திணைக்களம் உள்ளது. வினாத்தாள் தயாரிப்பதிலிருந்து இரு மொழிகளில் பரிமாற்றம் செய்வது, தகுதியான பரீட்சை மேர்ப்பார்வையாளர்களை நியமனம் செய்வது வரை எந்தளவு திறமையுடன், பரீட்சைத் திணைக்களமும், கல்வித் திணைக்களமும், கல்வியமைச்சும் செயற்படுகிறது என்பதற்கு நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற கல்விப் பொதுத் தாராதர உயர்தரப் பரீட்சையில் நடந்து கொண்டிருக்கும் குழறுபடிகள் தகுந்த உதாரணமாகும்.

வர்த்தக வாணிபத்துறை அமைச்சர் நாளொரு அரச வர்த்தக மானியை வெளியிட்டு விலைகளைக் கட்டுப்பாட்டுக்குள் வைப்பதாகக் கூறி வாய்ச்சவாடல் மாத்திரம் விட்டார். அவரைப் பொறுத்தவரை வாய்ச் சவாடல்தான் அவரது மூலதனம். இன்று நாட்டின் பொருள்களின் விலை உயர்வுக்கு குறிப்பாக பால்மா விலை உயர்வுக்கு தானோ தனது அமைச்சோ காரணமில்லை உற்பத்தியாளர்களும், வர்த்தகர்களுமே காரணம் என்று எந்த விதமான குற்ற உணர்வுமின்றி, அமைச்சர் என்ற பொறுப்பின்றி பத்திரிகையாளர் முன் கூறுகின்றார்.

ஒரே நாடு ஒரே சட்டம் என்கிறீர்கள். ஒரே நாட்டில் ஒரே சட்டம் நிலவுகின்றதா, தமிழர்களுக்கு ஒரு சட்டம், சிங்களவர்களுக்கு ஒரு சட்டம் முஸ்லிம்களுக்கு ஒரு சட்டம். கிறிஸ்தவர்களுக்கு ஒரு சட்டம் என நான் கூறவில்லை. நீதிமன்ற அவமதிப்பினைச் செய்து நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்பட்ட ஒரே இனத்தைச் சேர்ந்த கலகொட அத்தே ஞானசார தேரர் தொடர்பாகவும், பாராளுமன்ற உறுப்பினராக இருந்த ரஞ்சன் ராமநாயக்க தொடர்பாகவும் உங்கள் சட்டச் செயற்பாடுகளை நோக்கும் போது உங்கள் ஒரே நாடு ஒரே சட்டம் என்ற கொள்கையானது உங்களைப் பார்த்தே பரிகசிப்பதாக உணரவில்லையா?

அரசியலமைப்பு மேதகு ஜனாதிபதியவர்களுக்கு குற்றவாளிகளுக்கு மன்னிப்பளிக்கும் அதிகாரத்தினை வழங்கியுள்ளது. அதனை எவ்வாறு பிரயோகிக்கலாம் எனவும் பொருள் கோடல் செய்யப்பட்டுள்ளது. ஆனால், மரண தண்டனைக் குற்றத் தீர்ப்பளிக்கப்பட்ட முன்னாள் இராணுவ வீரர்களுக்கு நீங்கள் பொது மன்னிப்பளித்த விதம் பற்றி இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உட்பட சிவில் சமூகத்தினர் வரை அதை எவ்வாறு விமர்சித்தார்கள் என்பதை நீங்கள் உணர்ந்தீர்களா? இத்தனைக்கும் எமது நீதி அமைச்சர் இளைமையானவர், ஆளுமையானவர், திறமையானவர், ஜனாதிபதி சட்டத்தரணியும் கூட. இது தவறெனத் தெரிந்தும் எடுத்துரைக்க முடியாத கையறு நிலை அவருக்கு. இதுதான் எமது நாட்டின் சட்ட ஆட்சியின் இன்றைய நிலை.

இன்று ஜெனிவா திருவிழா ஆரம்பகாலம். இதனால், மனித உரிமைகள் பேணுவது தொடர்பாக, பயங்கரவாதத் தடைச்சட்டம் சீர்திருத்தம் தொடர்பாக, அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பாக, வடக்கு கிழக்கு அபிவிருத்தி தொடர்பாக, கரிசனை காட்டுவது போல் ஒரு விம்பத்தை உருவாக்குகின்றீர்கள். சட்டப் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் அவர்கள். உப்புச் சப்பற்ற பயங்கரவாதத் தடைச்சட்டத் திருத்தம் தொடர்பாக பெரிய வியாக்கியானம் செய்கின்றார். ஆனால், இந்தப் பயங்கரவாதத் திருத்தச் சட்டம் ஓட்டைக் குடத்தில் நீர் நிரப்புவதற்கு ஒப்பானதாகும்.

எமது நாட்டின் வரலாறு ராஜபக்ச பரம்பரையினர் காலத்தில் சகல துறைகளிலும் இருண்ட யுகமாக இருந்தது என எதிர்காலத்தில் உங்களால் எழுதப்படும் மகாவம்ச வரலாற்றில் குறிப்பிடப்பட வேண்டுமா? எமது நாட்டின் பல்லினத் தன்மை ஏற்றுக் கொள்ளப்பட வேண்டுமா? எமது நாட்டின் அரசியலமைப்பு முறையாகப் பேணப்பட வேண்டுமா?

அரசியலமைப்பின் ஒரு அங்கமான 13ஆவது திருத்தம் உங்களால் எவ்வாறு கையாளப்படுகிறது. அரசியலமைப்பைப் பேணிப் பாதுகாக்க உறுதிமொழியெடுத்த நீங்கள் 13ஆவது திருத்தத்தை எவ்வாறு சின்னாபின்னப்படுத்தினீர்கள். இன்னும் சின்னாபின்னப்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள் என்பதற்கு அண்மைக்கால அரசியல் சம்பவங்கள் சான்றாக அமைகிறது. ஒரு காலத்தில் பேரினவாத நிலைப்பாட்டில் இருந்த சம்பிக்க ரணவக்க, மக்கள் விடுதலை முன்னணியின் அனுரகுமார திசாநாயக்க போன்றோரே 13ஆவது திருத்தத்தின் உண்மையான அமுலாக்கத்துக்கும் அதிகாரப் பகிர்வுக்கும் ஆதரவான தங்களது நிலைப்பாட்டை மாற்றி வருகின்ற நிலைமையில், பிராந்தியங்களின் ஒன்றியம் என்ற அரசியலமைப்பு வரைபை வரைந்த சட்டப் பேராசிரியர் பீரிஸ் அவர்கள் இது தொடர்பாக கள்ள மௌனம் சாதித்துக் கொண்டிருக்கிறார்

எனவே இந்த நாடு சுபிட்சமான நாடாக திகழ வேண்டுமானால், நீங்கள் உங்களது நிலைப்பாட்டிலிருந்து மாறவேண்டும் என்று கூறிக் கொள்கிறேன். அத்துடன், இன்று நாட்டில் அனைத்து மக்களும் தங்களது சம்பளப்பிரச்சினைக்காக வீதிக்கு வருகின்றார்கள். ஆக குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கு முன்பள்ளி ஆசிரியர்கள் கூட தங்களை நிரந்தரமாக்குமாறு கோரி வருகின்றார்கள். அவர்களை நிரந்தரமாக்கி குழந்தைகளுக்கு நல்ல கல்வியைக் கொடுப்பதற்காவது நீங்கள் முன்வரவேண்டும்.