இரண்டு நாட்கள் தாமதித்ததால் டீசல் கப்பலுக்கு 38,000 டொலர்கள் தாமதக் கட்டணம்

டீசல் பற்றாக்குறை காரணமாக பொது போக்குவரத்து சேவையும் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகிறது.

டீசல் இன்மையால் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று இடைநடுவே நின்ற சம்பவமொன்று களுத்துறையில் இன்று பதிவானது.

கொழும்பிலிருந்து மாத்தறை நோக்கி பயணித்த, மாத்தறை டிப்போவிற்கு சொந்தமான பஸ் ஒன்று டீசல் தீர்ந்தமையால் களுத்துறை நகர் மத்தியில் நின்றது.

இதனிடையே, தனியார் பஸ் சேவைக்கு இரண்டு நாட்களுக்கு போதுமான அளவு டீசலே கையிருப்பிலுள்ளதாக அகில இலங்கை பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்தது.

டீசல் பற்றாக்குறையால் கொள்கலன் போக்குவரத்திற்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் எரிபொருட்களை பெற்றுக்கொள்வதில் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர்.

எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்காக நுவரெலியாவில் எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் அமைதியின்மை ஏற்பட்டது.

முல்லைத்தீவின் பல பகுதிகளிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இன்று எரிபொருள் காணப்படவில்லையென நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.

இதேவேளை, நாட்டில் டீசலுக்கு தட்டுப்பாடு நிலவுவதை எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில இன்று பாராளுமன்றத்தில் ஏற்றுக்கொண்டார்.

நேற்று (22) நடைபெற்ற அவசர அமைச்சரவைக் கூட்டத்தின்போது திறைசேரி செயலாளர் இலங்கை வங்கிக்கு வழங்கிய ஆலோசனைக்கு அமைய, டீசல் கப்பல் ஒன்றுக்கான கட்டணம் செலுத்தப்பட்டதாகவும் அந்த கப்பலிலுள்ள டீசலை இறக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் எரிசக்தி அமைச்சர் குறிப்பிட்டார்.

மற்றுமொரு பெட்ரோல் கப்பல் கடலில் உள்ளதாகக் கூறிய அவர், அதற்குத் தேவையான டொலரை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

இந்நிலையில், 37,500 மெட்ரிக் தொன் டீசலை ஏற்றிய கப்பலுக்காக இரண்டு நாட்கள் தாமதத்தின் பின்னர் 35 மில்லியன் அமெரிக்க டொலரை செலுத்துவதற்கு நேற்றைய விசேட அமைச்சரவைக் கூட்டத்தின் பின்னர் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதேவேளை, டீசலை ஏற்றிய கப்பலுக்கு இரண்டு நாட்கள் தாமதக் கட்டணமாக 38,000 டொலர் கட்டணம் செலுத்த நேர்ந்துள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.