இலங்கைக் கடற்படைக்கு பயிற்சிகளை வழங்க திருகோணமலைக்கு வந்தது இந்திய ‘நிரீக்ஷக்’ கப்பல்

இலங்கைக் கடற்படையினருக்கு ‘கலப்பு வாயு’ பயிற்சிகளை வழங்குவதற்காக இந்தியக்கடற்படைக்குச் சொந்தமான ‘நிரீக்ஷக்’ கப்பல் நேற்று திங்கட்கிழமை திருகோணமலைத் துறைமுகத்தை வந்தடைந்தது.

டைவிங் பயிற்சி வழங்கலுக்கு ஏதுவான இந்தக் கப்பல், கடற்படையின் பாரம்பரியத்திற்கு அமைவாக இலங்கைக் கடற்படையினரால் வரவேற்கப்பட்டது.

இலங்கையை வந்தடைந்ததைத் தொடர்ந்து இந்தியக்கப்பலின் கட்டளை அதிகாரி, இலங்கையின் கிழக்குக் கடற்பிராந்தியத் தளபதி ரியர் அட்மிரல் பி.டி.எஸ்.டயஸை சந்தித்துக் கலந்துரையாடினார்.

இந்தியக்கப்பல் இலங்கையில் தரித்துநிற்கவுள்ள எதிர்வரும் 10 நாட்களில் வழங்கத்தக்க டைவிங் பயிற்சிகள் தொடர்பில் இச்சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்டது.

இந்தியக்கடற்படைக்குச் சொந்தமான மேற்படி ‘நிரீக்ஷக்’ கப்பல், ஆறுபேருக்கு ஏதுவான கப்பல் தளங்கள் இரண்டையும் மூவருக்கான டைவிங் வசதி ஒன்றையும் கொண்டமைந்திருக்கின்றது. அதுமாத்திரமன்றி வசதியான மீட்பு வசதிகளையும் இக்கப்பல் உள்ளடக்கியிருக்கின்றது.

இலங்கைக் கடற்படையினருக்கு இதனைப்போன்ற பயிற்சிகளை வழங்குவதற்காக இக்கப்பல் ஏற்கனவே கடந்த 2019 ஆம் அண்டு திருகோணமலைத் துறைமுகத்திற்கு வருகைதந்திருந்தது.

இவ்வாறு இலங்கைக் கடற்படையுடனான தொடர்புகளைத் தொடர்ந்து பேணுவது இந்தியாவின் ‘அயல்நாட்டிற்கு முதலிடம்’ கொள்கையின் ஓரங்கமாகும் என்று இலங்கையிலுள்ள இந்தியத்தூதரகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.