நாட்டில் இடம்பெற்ற வலிந்து காணாமலாக்கப்படல் சம்பவங்களால் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கான நீதியை நிலைநாட்டுவதில் காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் செயற்திறனான முறையில் இயங்கிவருவதாக சர்வதேச சமூகத்திற்குக் காண்பிக்கவேண்டும் என்பதில் அரசாங்கம் தெளிவாக இருக்கின்றது என்று சுட்டிக்காட்டியுள்ள சர்வதேச மன்னிப்புச்சபை, பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பில் அரசாங்கத்தின் பிரதிபலிப்பு உள்ளிட்ட உண்மை நிலைவரங்களுடன் ஒப்பிடுகையில் சர்வதேச சமூகத்திற்குக் கூறப்படும் விடயங்கள் பொய்யானவை என்பதைப் புரிந்துகொள்ளமுடிவதாகவும் தெரிவித்துள்ளது.
நாட்டில் கடந்த காலங்களில் இடம்பெற்ற வலிந்து காணாமலாக்கப்படல் சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்னமும் நீதி வழங்கப்படாத நிலையில், ‘இன்னமும் பதில் வழங்கப்படவில்லை’ என்ற தலைப்பில் ஆவணப்படுத்தல் வடிவிலான அறிக்கையொன்றை சர்வதேச மன்னிப்புச்சபை வெளியிட்டுள்ளது.
வலிந்து காணாமலாக்கப்படல் சம்பவங்களால் பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களிடம் நடாத்தப்பட்ட நேர்காணல்கள் மற்றும் முதலாம், இரண்டாம்கட்ட ஆய்வுகளின் மூலம் திரட்டப்பட்ட தகவல்களை அடிப்படையாகக்கொண்டு மன்னிப்புச்சபை இவ்வறிக்கையைத் தயாரித்துள்ளது.
பாதிக்கப்பட்ட குடும்பங்களில் உறுப்பினர்களிடம் கடந்த 2021 ஆம் ஆண்டு ஜுலை மாதம் தொடக்கம் இவ்வாண்டு பெப்ரவரி மாதம் வரையான காலப்பகுதியில் 28 நேர்காணல்கள் மேற்கொள்ளப்பட்டதாக மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது. அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள முக்கிய விடயங்களின் சுருக்கம் வருமாறு:
வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் செயற்பாட்டுக்குழுவின் தரவுகளின்படி, இலங்கையில் 6,259 வலிந்து காணாமலாக்கப்படல் சம்பவங்கள் பதிவாகியிருப்பதுடன் ஈராக்கிற்கு அடுத்ததாக உலகிலேயே அதிகளவான வலிந்து காணாமலாக்கப்படல் சம்பவங்கள் பதிவான இரண்டாவது நாடாக இலங்கை இருக்கின்றது.
எனினும் இலங்கையில் கடந்த 1980 ஆம் ஆண்டிலிருந்து குறைந்தபட்சம் 60,000 அல்லது 100,000 வரையிலான வலிந்து காணாமலாக்கப்படல்கள் இடம்பெற்றிருக்கக்கூடும் என்று நாம் மதிப்பிட்டுள்ளோம்.
இலங்கையின் வடமாகாணத்தில் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் உண்மையையும் நீதியையும்கோரி ஆரம்பித்த தொடர் போராட்டம் கடந்த பெப்ரவரி மாதத்துடன் 5 வருடங்களைப் பூர்த்திசெய்துள்ளது.
பலவருடகாலமாக பல்வேறு உள்ளகப்பொறிமுறைகள் நிறுவப்பட்டபோதிலும், சர்வதேச சட்டங்களின் பிரகாரம் மிகமோசமான மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான பதில்களை வழங்குவதற்கும் அதற்கான நீதியை நிலைநாட்டுவதற்கும் இலங்கை அரசாங்கம் தவறியிருக்கின்றது.
பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு உண்மையை வெளிப்படுத்தல், நீதியை நிலைநாட்டல், இழப்பீடு வழங்கல் ஆகிய கடப்பாடுகளை நிறைவேற்றுவதற்கு ஏற்புடைய வகையில் காணாமல்போனோர் அலுவலகம் மிகவும் செயற்திறனான முறையில் இயங்கிவருவதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கும் ஏனைய உறுப்புநாடுகளுக்கும் காண்பிக்கவேண்டும் என்பதில் இலங்கை அரசாங்கம் தெளிவாக இருக்கின்றது.
இருப்பினும் வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கு அரசாங்கம் காண்பிக்கின்ற பிரதிபலிப்பு உள்ளிட்ட உண்மை நிலைவரத்துடன் ஒப்பிடுகையில் அரசாங்கம் கூறுகின்ற விடயங்கள் உண்மைக்குப் புறம்பானவை என்பதை நாம் முன்னெடுத்த ஆய்வின் மூலம் புரிந்துகொள்ளமுடிகின்றது.
போரின்போதும் அதன் பின்னரும் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்கள், தமது கேள்விகளுக்கான பதில்களைக்கோரி துணிச்சலுடன் தொடர்ந்து போராடுகின்றார்கள்.
அதேவேளை வலிந்து காணாமலாக்கப்படல் சம்பவங்கள் தொடர்பில் நீதியைப் பெற்றுக்கொள்வதை முன்னிறுத்தி இயங்கிவரும் அமைப்புக்கள் தற்போது புதியதொரு பரிமாணத்திலான மனித உரிமை மீறல்களுக்கு முகங்கொடுத்துள்ளன.
அமைதியாகப் போராட்டங்களை மேற்கொள்வதற்கான சுதந்திரம், கருத்துவெளிப்பாட்டுச்சுதந்திரம், சுதந்திரமாகச் செயற்படுவதற்கான உரிமை மற்றும் தன்னிச்சையாகத் தடுத்துவைக்கப்படல் போன்றவற்றிலிருந்து பாதுகாப்புப்பெறுவதற்கான உரிமை உள்ளடங்கலாக பாதிக்கப்பட்ட தரப்பினரின் சுதந்திரம் மற்றும் உரிமைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் நடவடிக்கைகள் தற்போது அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பத்தினரை அரசாங்கம் அணுகும் முறை மற்றும் அதன் பிரதிபலிப்பு உள்ளடங்கலாக இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் மிகவும் மோசமடைந்துள்ளன என்று மன்னிப்புச்சபை அதன் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.