தமிழர்களுக்கு நாட்டில் பிரச்சினையிருக்கின்றது என்பதை ஜனாதிபதி முதலில் ஏற்றுக்கொள்ள வேண்டும்: கோவிந்தன் கருணாகரம்

தமிழர்களுக்கு இந்த நாட்டில் பிரச்சினையிருக்கின்றது என்பதை ஜனாதிபதி முதலில் ஏற்றுக்கொண்டு அதன் பின்னரே அரசியல் தீர்வு விடயம் தொடர்பில் பேச வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

இதன்போது மேலும் தெரிவிக்கையில்,

எதிர்வரும் 15ஆம் திகதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான சந்திப்புக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளதாக அறிகின்றோம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் சந்திப்பதற்கு முயற்சிக்கின்றார்.

கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னரும் பேச்சுவார்த்தைக்கு அழைத்து பின்னர் அவரே அதனை இரத்து செய்து வேறு திகதியை வழங்குவதாக உறுதியளித்திருந்தார். அதன் பின்னர் எந்த அழைப்பும் விடுக்கப்படவில்லை.

இருந்தபோதிலும் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் வடக்கு, கிழக்கில் நடைபெறும் காணி அபகரிப்பு தொடர்பில் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் இயங்கும் 13 நாடாளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தபோது ஜனாதிபதிக்கு மகஜர் ஒன்றினை கையளிக்க முயற்சித்தோம்.

ஆனால் அந்த நேரத்தில் ஜனாதிபதி இல்லை, பிறிதொரு திகதியைத் தருகின்றோம் என ஜனாதிபதி செயலகத்தினால் அன்று கூறப்பட்டிருந்தது.

அந்த வகையில் காணி அபகரிப்பு தொடர்பில் பேசவேண்டுமாகயிருந்தால் அவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் மாத்திரமல்லாமல் அந்த போராட்டத்தில் கலந்துகொண்ட அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுடனும் அவர் பேசவேண்டும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இனப்பிரச்சினை தொடர்பாக அவர் பேசவேண்டுமாக இருந்தால் சில விடயங்களை அவர் மக்களுக்குக் கூறவேண்டும். இந்த ஜனாதிபதி எங்கு சென்றாலும் தான் 69இலட்சம் சிங்கள மக்களினால் தெரிவுசெய்யப்பட்ட ஜனாதிபதி, தான் சிங்கள மக்களுக்காகக் கடமையாற்றக்கூடிய ஜனாதிபதி என்று கூறிவருகின்றார்.

கடந்த 18ஆம் திகதி நாடாளுமன்ற சிம்மாசன உரையில்கூட இந்த ஜனாதிபதி, தமிழ் மக்களுக்கு ஒரு இனப்பிரச்சினையிருக்கின்றது, அதற்கு ஒரு அரசியல் தீர்வு வேண்டும் என்றுகூடக் கூறமுடியாதவர். இன்று ஐக்கிய நாடுகள் சபை உட்படப் பல இடங்களில் தமிழ் மக்களுக்கு இனப்பிரச்சினையில்லை, அவர்களுக்குப் பொருளாதார பிரச்சினையென அவரின் பிரதிநிதிகள் கூறிவருகின்றனர்.

முதலில் அரசியல் தீர்வு, இனப்பிரச்சினை தொடர்பாக ஜனாதிபதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேசவேண்டுமாக இருந்தால் தமிழினத்திற்கு ஒரு பிரச்சினையிருக்கின்றது, அவர்களுக்கு ஒரு அரசியல் தீர்வு வேண்டும் என்று என்பதை முதலில் ஏற்றுக்கொள்ளவேண்டும்.

இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு அவர்களுக்குத் தேவையில்லை, பொருளாதாரம் சார்ந்த தீர்வுதான் தேவையென்று கூறிக்கொண்டு அரசியல் தீர்வு தொடர்பாகப் பேசவேண்டிய தேவையில்லை. கடல் இல்லாத ஆப்கானிஸ்தானுக்கு கடற்றொழில் அமைச்சர் எதற்கு என்று அண்மையில் நாடாளுமன்றத்தில் பேசியிருந்தார்கள்.

நீதியில்லாத இலங்கைக்கு நீதி அமைச்சர் எதற்கு என்பதைப் போல ஜனாதிபதி இங்கு இனப்பிரச்சினையில்லை என கூறிக்கொண்டு இனப்பிரச்சினை தொடர்பான தீர்வு தொடர்பில் பேசவேண்டிய தேவையில்லை. முதலில் ஜனாதிபதி இங்குள்ள தமிழர்களுக்குப் பிரச்சினையிருக்கின்றது, அவர்களுக்கான ஒரு அரசியல் தீர்வு வேண்டும் என்பதை முதலில் அவர் ஏற்றுக்கொள்ளவேண்டும்.

அதன் பின்னர் அரசியல் தீர்வு தொடர்பாகப் பேசவேண்டும். அதற்கும் மேலாகக் கடந்த காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகளை 2019ஆம் ஆண்டுக்குப் பின்னர் பல தடவைகள் ஏமாற்றியுள்ளார்கள்.

2009ஆம் ஆண்டு காலப்பகுதியில் 13வது திருத்தச் சட்டத்திற்கு மேலாகச் சென்று தீர்வினை வழங்குவேன் என்று கூறிக்கொண்டு 18சுற்றுப் பேச்சுவார்த்தைகளைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நடாத்தி அவர்களாகவே முறித்துக்கொண்டார்கள்.

அதனைப்போன்ற பல அனுபவங்கள் எங்களுக்கு உண்டு. அதன் காரணமாக ஜனாதிபதி இந்த இனப்பிரச்சினை தொடர்பாகத் தமிழர்களின் அபிலாசைகள் தொடர்பாக ஒரு நல்லெண்ண வெளிப்பாட்டைக் காட்டவேண்டும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் 15 அடிப்படை பிரச்சினைகளை அடையாளப்படுத்தியுள்ளது. காணி அபகரிப்பு, பயங்கரவாத தடைச்சட்டம், அரசியல் கைதி விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டோரின் நிலை ஆகிய 15 பிரச்சினைகளை அடையாளப்படுத்தியுள்ளது.

அரசியல் கைதிகளில் ஒரு தொகுதியினை விடுதலை செய்துவிட்டு, பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்குவேன் என்ற உறுதிமொழியை வழங்கிவிட்டு, தொல்பொருள் திணைக்களம், வன இலாகா போன்ற திணைக்களங்கள் ஊடாக முன்னெடுக்கப்படும் காணி அபகரிப்புகளை உடனடியாக நிறுத்திவிட்டு நல்லெண்ண வெளிப்பாட்டைக் காட்டிவிட்டு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினை பேச்சுவார்த்தைக்கு அழைப்பதுதான் நியாயமாகும்.

அவ்வாறான நல்லெண்ணத்தினை அவர் வெளிப்படுத்திய பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சுவார்த்தைக்குச் செல்வதுதான் தமிழ் மக்களின் நலன் சார்ந்ததாகவிருக்கும் என்பது தமிழீழ விடுதலை இயக்கத்தின் நிலைப்பாடாகும் என குறிப்பிட்டுள்ளார்.