வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஜனநாயன ரீதியில் நீதி கேட்டு போராட முயற்சித்த போது, அவர்களை வழி மறித்து பஸ்களில் இருந்து இறங்கவிடாது அச்சுறுத்தி தாக்கிய சம்பவங்கள் இலங்கையின் ஆட்சியாளர்களிடத்தில் தொடரும் ஜனநாயக மறுப்பை மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்துகின்றது என ரெலோ யாழ் மாவட்ட தலைவரும் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் தவிசாளருமான தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.
இன்று ஞாயிற்றுக்கிழமை வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பிரதமரின் வருகையின் போது நீதி கேட்டு ஜனநாயக வழியில் போராடுவதற்காக வேவ்வேறு மாவட்டங்களிலும் இருந்து யாழ்ப்பாணம் வருகை தந்தனர். மட்டுவில் திறந்த வர்த்தக சந்தைப்பகுதி பிரதமர் மகிந்த ராஜபக்சவினால் திறந்து வைக்கப்படும் போது, அமைதியாக கவனயீர்ப்பினை மேற்கொள்வதற்கு காணமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முயற்சித்தனர். இந் நிலையில் காணமலாக்கப்பட்ட தாய்மார் வருகை தந்த பேருந்து பொலிசாரினாலும் விசேட அதிரடிப்படையினராலும் வழிமறிக்கப்பட்டு கதவுகள் பூட்டப்பட்டு பேருந்தின் சாரதியின் ஆவணங்களும் பறிக்கப்பட்டு அச்சுறுத்தப்பட்டது. இதற்கு மேலாக நீதிக்காகப் போராடும் அந்த வயோதிபத் தாய்மார் மிகவும் கொடுரமாகத் தாக்கப்பட்டுள்ளனர். தடியடிப்பிரயோகம,; கட்டைகளாலும் அடிக்கப்பட்டு தூஷண வார்த்தைகளாலும் நிந்திக்கப்பட்டனர்.
இவ்வாறாக காட்டுமிராண்டித்தனம் நடைபெறுவதையடுத்து மக்கள் பிரதிநிதி என்ற வகையில் நான் உடனடியாக அங்கு சென்றபோது அப்போது பிரதமர் மகிந்த ராஜபக்ச நிகழ்வை முடித்துக்கொண்டு வெளியேறியிருந்தார். அவரின் வெளியேற்றத்தையடுத்து பொலிசாராலும் இராணுவத்தினராலும் அடித்து குத்தி அடக்கிவைத்திருந்த மக்கள் விடுவிக்கப்பட்டு அவர்கள் குறித்த வர்த்தக கட்டிடத்தினை நோக்கி வந்தார்கள். தாக்குதல்களின் காரணமாக சாறி சட்டைகள் கிழிந்த நிலையில் அந்த தாய்மார் வருவதைக் கண்டேன். இதனைத் தொடர்ந்து நாமும் அவர்களுடன் இனைந்து ஜனநாய வழியில் போராடினோம். தாய்மார்கள் தாக்கப்படும் போது அரசாங்கத்தின் பிரதிநிதிகள் பிரதமருடன் மகிழ்ச்சியைக் கொண்டிக்கொண்டிருந்தனர்.
அடிப்படையில் ஜனாதிபதி உலகத்தினை ஏமாற்றுவதற்காக இங்கே தான் ஜனநாயக உரிமைகளுக்கு மட்டுப்பாடு விதிக்கவில்லை என ஐ.நாவில் உத்தரவாதம் கொடுத்திருக்கின்றார். ஆனால் வலிந்து காணாமலாக்கப்பட்டுதலுக்கு முழுமையான காரணகர்த்தாவும் இன்றும் பொறுப்புச் சொல்லவேண்டிய பதவியில் உள்ளவருமான பிரதமர் மகிந்த ராஜபக்ச நீதிக்காக போராடும் அப்பாவித்தாய்மார்களை அவர்களது அமைதியான போராட்டத்தை கூட ஏற்க முடியாது ஆயுதம் ஏந்திய படைகளைக் கொண்டு உத்தரவிட்டு அடக்கியிருக்கின்றார். தனக்கு தொந்தரவு என்பதற்காக அந்தத் தாய்மார்களை கொன்றொழிக்கவும் இந்த அரசாங்கம் பின்னிற்காது என்பது வெளிப்படையானது.
அடிப்படையில் இலங்கையில் மனித உரிமைகள் ரீதியில் எதாவது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேசம் மடையர் ஆகிவிடக்கூடாது. இங்கே நியாயம் கேட்கும் சக்திகளை ஆயுத மற்றும் இதர அச்சுறுத்தல் வழிமுறைகள் ஊடாக அடக்கியாளவே அரசாங்கம் முயற்சிக்கின்றது என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.