யாழ் – இந்திய கலாசார மையத்தை மெய்நிகர் ஊடாக பிரதமர் மோடி திறந்து வைப்பார் ?

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தலைமையிலான உயர்மட்ட குழுவினர் நாளை திங்கட்கிழமை இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

அதேபோன்று இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலர் (கிழக்கு) சௌரப் குமார் தலைமையிலான மற்றுமொரு சிறப்பு குழு இன்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பிற்கு வருகை தரவுள்ளதாக டெல்லி தகவல் மூலங்கள் தெரிவிக்கின்றன.

பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயம் குறித்து பரவலாக தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில் இந்த உயர் மட்ட குழுவினரின் கொழும்பு விஜயம் அமைந்துள்ளன.

இந்த விஜயத்தின் போது முக்கிய விடயமாக யாழ் – இந்திய கலாச்சார மையத்தினை திறந்து வைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இது குறித்த உத்தியோகப்பூர்வமான இறுதி அறிவிப்பை டெல்லி இன்று வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

5 ஆவது பல்துறை தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார கூட்டுறவிற்கான வங்காள விரிகுடா முன்னெடுப்பு (பிம்ஸ்டெக்) மாநாடு இவ்வாரம் கொழும்பில் இடம்பெறவுள்ளது. இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலர்(கிழக்கு) சௌரப் குமார் தலைமையிலான குழுவினர் வருகை தரவுள்ளனர்.

அதேபோன்று மற்றுமொரு சிறப்பு விமானத்தில் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் தலைமையிலான உயர்மட்ட குழுவும் விஜயம் மேற்கொள்கின்றன.

குறிப்பாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெயசங்கர் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸை சந்தித்து கலந்துரையாட உள்ளார். அதே போன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உட்பட அரசாங்கத்தின் உயர் மட்டத்தினரை சந்தித்து கலந்துரையாட உள்ளதுடன் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்டவர்களையும் சந்தித்து கலந்துரையாட உள்ளார். அதே போன்று செவ்வாய்க்கிழமை பிம்ஸ்டெக் மாநாட்டில் உரையாற்றவுள்ளார்.

மறுப்புறம் யாழ் – இந்திய கலாச்சார மையத்தை திறந்து வைப்பதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஏனெனில் இந்த மையத்தை பொறுத்த வரையில் டெல்லியின் மிக முக்கிய திட்டங்களில் ஒன்றாகும். இரு தரப்பு கலாசார இராஜதந்திர உறவுகளை வலுப்பத்துவதில் யாழ்.

இந்திய கலாச்சார மையம் முக்கிய பங்கு வகுகிக்கும் என்பதாலேயே பிரதமர் நரேந்திர மோடியின் விசேட திட்டமாக இது முன்னெடுக்கப்பட்டது. அதே போன்று இலங்கையுடனான ஏனைய துறைசார் இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்துவதிலும் யாழ். இந்திய மையம் ஒரு மைல்கல்லாக அமையும் என கருதப்படுகிறது.

2015 ஆம் ஆண்டில் இடம்பெற்ற பிரதமர் நரேந்தி மோடியின் யாழ்ப்பாண விஜயத்தின் போது இந்த கலாசார மையம் குறித்து அறிவிக்கப்பட்டது.

1.6 பில்லியன் இந்திய நிதியுதவியின் கீழ் 2016 ஆம் ஆண்டு கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. அனைத்து பணிகளும் நிறைவடைந்துள்ள நிலையில் பல்வேறு காரணிகளின் அடிப்படையில் திறப்பு விழாவிற்கான திகதி ஒத்திவைக்கப்பட்டு கொண்டே வந்தது.

குறிப்பாக யாழ் – இந்திய கலாசார நிர்வாகம் தொடர்பில் காணப்பட்ட நெருக்கடிகளே தாமதத்திற்கு முக்கிய காரணமாகியது. இராணுவத்தின் பராமரிப்பின் கீழ் யாழ் – இந்திய கலாசார மையத்தை முன்னெடுக்க இலங்கை தரப்பு கோரிக்கை விடுத்திருந்தது. ஆனால் அதனை டெல்லி விரும்பவில்லை.

மாறாக மாகாண சபை அல்லது மக்கள் மயப்படுத்தப்பட்ட கட்டமைப்பின் கீழ் இந்த கலாசார மையத்தின் பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவே டெல்லி தொடர்ந்தும் வலியுறுத்தி வந்தது.

சுமார் 2 ஆண்டுகளுக்கு மேலாக காணப்பட்ட இந்த பிரச்சினைக்கு தற்போது சுமூகமான தீர்வு எட்டப்பட்டுள்ளது. எனவே இனியும் தாமதிக்காது யாழ் – இந்திய கலாசார மையத்தின் செயற்பாடுகளை ஆரம்பிக்க டெல்லி தீர்மானித்துள்ளது.

பெரும்பாலும் நாளை திங்கட்கிழமை எளிமையான முறையில் இந்த திறப்பு விழா அமையப்பெறும் இதன் போது பிரதமர் நரேந்திர மோடி மெய்நிகர் ஊடாக கலந்துக்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது.