சர்வதேசத்தை ஏமாற்ற முயற்சிக்கின்றது இலங்கை அரசாங்கம் : மனித உரிமைகள் கண்காணிப்பகம் விசனம்

பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழ் நிகழ்த்தப்படும் மீறல்களை உடனடியாக முடிவிற்குக்கொண்டுவருமாறு சர்வதேச சமூகத்தினால் தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டுவந்த நிலையில், கடந்த வாரம் பாராளுமன்றத்தில் மேலோட்டமான திருத்தங்களை நிறைவேற்றியதன் ஊடாக அனைவரையும் ஏமாற்றுவதற்கு இலங்கை அரசாங்கம் முயற்சிக்கின்றது என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் விசனம் வெளியிட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பில் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் மிகமோசமான சரத்துக்கள் தொடர்பில் அண்மையில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள திருத்தங்களில் அவதானம் செலுத்தப்படவில்லை என்று ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்களும் ஐக்கிய ஒன்றியத்தின் பிரதிநிதிகளும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

முன்மொழியப்பட்ட அந்தத் திருத்தங்களை உடனடியாக நிறைவேற்றவேண்டும் என்பதற்காக, மனித உரிமைகள் அமைப்புக்களின் ஆலோசனைகளுக்கு இடமளிக்கக்கூடியவாறான உபகுழு ஆராய்வை அரசாங்கம் தவறவிட்டுள்ளது.

அதன்விளைவாக அச்சட்டத்தை சர்வதேச மனித உரிமைகள் நியமங்களுக்கு அமைவாக மாற்றியமைக்க்ககூடியவாறான முக்கிய சந்தர்ப்பம் நழுவவிடப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கம் கடந்த நான்கு வருடகாலமாக நபர்களைத் தன்னிச்சையாகத் தடுத்துவைப்பதஙற்கும் சித்திரவதைகளுக்கு உட்படுத்துவதற்கும் சிறுபான்மையினத்தவர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகளை இலக்குவைப்பதற்கும் பயங்கரவாதத்தடைச்சட்டத்தைப் பயன்படுத்திவந்திருக்கின்றது.

தற்போது திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பினும்கூட, எவ்வித ஆதாரங்களையும் சமர்ப்பிக்காமல் நபர்களைப் பலவருடங்களுக்குத் தன்னிச்சையாகத் தடுத்துவைப்பதற்கு அச்சட்டம் இடமளிப்பதுடன் பிணை வழங்கலுக்கான வாய்ப்பையும் இல்லாமல்செய்கின்றது.

அத்தோடு சித்திரவதைகளிலிருந்து பாதுகாப்புப்பெறுவதற்கு ஏதுவான அர்த்தமுள்ள திருத்தங்கள் இதில் உள்ளடக்கப்படவில்லை.

தற்போது அத்தியாவசியப்பொருட்களுக்கான தட்டுப்பாட்டிற்கும் பணவீக்கத்திற்கும் வழிவகுத்திருக்கக்கூடிய கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்தின் முறையற்ற பொருளாதார நிர்வாகத்திற்கு எதிராகப் பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

இப்போது இடம்பெற்றுவரும் மீறல்கள் தொடர்பில் பல்வேறு அழுத்தங்களுக்கு உள்ளாகியிருக்கக்கூடிய அரசாங்கம், சர்வதேசத்திடமிருந்து நிதியுதவிகளைப் பெற்றுக்கொள்வதற்காக மனித உரிமைகள் விவகாரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதுபோன்று காண்பிக்க முயற்சிக்கின்றது.

இலங்கைவாழ் மக்கள் உணவு, எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசியப்பொருட்களின் தட்டுப்பாட்டிற்கு முகங்கொடுத்திருக்கும் நிலையில், அவர்களுக்கு சர்வதேச சமூகத்தின் உதவி தேவைப்படுகின்றது.

இருப்பினும் அரசாங்கம் தமது வெளிநாட்டு பங்காளிகள் நியாயமான மனித உரிமைசார் மறுசீரமைப்புக்களையும், மீறல்களை முடிவிற்குக்கொண்டுவந்து நீதியை நிலைநாட்டுவதற்கான அர்த்தமுள்ள நடவடிக்கைகளையும் எதிர்பார்க்கின்றார்கள் என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும் என்று அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.