கூட்டமைப்பிற்கும் ஜனாதிபதிக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சு வார்த்தையின் போது அரசாங்கத்தினை சார்ந்தவர்கள் கூட்டமைப்பின் தலைவருக்கும், சுமந்திரனுக்கும் மாத்திரம் கருத்து தெரிவிக்கும் சுதந்திரத்தினை வழங்கியிருந்ததுடன்,ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் புறக்கணிக்கப்பட்டதாகவும் தமிழரசுக்கட்சி வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான பல விரிவான தகவல்களுடன் வருகிறது ஊடறுப்பு நிகழ்ச்சி,
ஜனாதிபதியுடனான சந்திப்பின் போது கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் சில விடயங்களை கூட்டத்தில் தெரிவித்து பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஏனைய விடயங்கள் தொடர்பில் கருத்து தெரிவிப்பார் என்று கூறிய கருத்தினை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களும் கருத்து தெரிவிப்பார்கள் என்றே தெரிவித்திருக்க வேண்டும்.
கூட்டத்தில் தனிநபரொருவரின் பெயரை மாத்திரம் குறிப்பிட்டமையானது கூட்டத்தில் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கம் குறித்து தமிழ் மக்களுக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்து ஒரு குழப்பமான சூழலை ஏற்படுத்த கூடும் என்பதற்காகவே இவ்வாறு செயற்பட்டதாகவே நான் கருதுகின்றேன்.
இதன்போது தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா கருத்து தெரிவிக்க முற்பட்ட வேளையிலும் கூட ஒலிவாங்கி கொடுக்கப்படவில்லை,ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருத்து தெரிவிக்க முற்படும் போது அதற்கு சுமந்திரன் தடை விதித்திருந்தமை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.