கத்தோலிக்க மதத்தலைவர்களின் தலைமையில் திருச்சபையின் மக்களால் ஜனாதிபதிக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட போராட்டம் தமது திருச்சபை சார்ந்த தமிழினத்தை வேதனைக்கு தள்ளியுள்ளது என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.
அவரால் இன்று (11.04) வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கோத்தா கோ ஹோம் என தற்போதைய ஜனாதிபதிக்கு எதிராகவும் ஆட்சியாளர்களுக்கு எதிராகவும் நாட்டின் பல பாகங்களிலும் போராட்டம் தொடரும் நிலையில் கிறிஸ்தவ கத்தோலிக்க மதத்தலைவர்களின் தலைமையில் கடந்த சனிக்கிழமையும் திருச்சபையின் மக்களால் அவர்கள் புனித நாளான குருத்தோலை ஞாயிறு பல்வேறு இடங்களில் கோட்டா கோ ஹோம் பாணியில் தேசியக் கொடியுடன் போராட்டம் நடத்தப்பட்டது.
இவர்களின் தேசியக்கொடியும் முன்வைத்த கோஷங்களும், பதாகைகளும் அவர்களின் நடுநிலையை மட்டுமல்ல கிறிஸ்தவ மத இறை சிந்தனையின் இருண்ட தன்மையை வெளிப்படுத்துவதோடு தமது திருச்சபை சார்ந்த தமிழினத்தையும் வேதனைக்கு தள்ளியுள்ளது என்றே கூற வேண்டியுள்ளது.
இந்த நாட்டை ஆட்சி புரிந்த அனைத்து கட்சிகளும் பௌத்த சிங்கள இன மத மக்களை தவிர்ந்த ஏனைய இனத்தவர்களையும் மதத்தவர்களையும் சமத்துவம் அற்றவர்களாக, அந்நியர்களாக பார்த்ததோடு அவர்களை அடக்கி ஒடுக்க வேண்டும் என்றே செயல்பட்டு அரசியல் யாப்பையும் தயாரித்து அதன் அடையாளமாகவே தேசியக் கொடியை வடிவமைத்து பாதுகாத்து வருகின்றனர். இத்தகைய கொடியை உயர்த்திப் போராட்டம் நடத்துவது இவர்கள் யதார்த்தத்தை புரிந்து கொள்ளவில்லை என்பதா? அல்லது தங்களையும் ஏமாற்றி தங்கள் பக்தியை நிர்வாணப்படுத்த முயற்சிக்கின்றார்கள் என்று சிந்திப்பதா?
வடகிழக்கு மக்களும் மலையக மக்களும் பல தசாப்தங்களாக இன அழிப்பிற்கு உட்பட்டு வருவதோடு குறிப்பாக 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் இந்த நூற்றாண்டின் பாரிய இனப்படுகொலைக்கும் இன அழிப்பிற்கும் முகங்கொடுத்து நீதி கேட்டு சர்வதேசத்தின் கதவுகளை தட்டி கொண்டிருக்கின்றார்கள். காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடுவோர், அரசியல் கைதிகள் விடுதலையை எதிர்பார்த்து காத்திருக்கும் உறவுகள், இராணுவம் கையகப்படுத்திய காணிகளை மீள பெற்றுக்கொள்ள காத்திருப்போர் வீதிகளில் நிற்க, வடகிழக்கில் பௌத்த மயமாக்கல், இராணுவ மயமாக்கல் தொடர்ந்திட அவற்றிற்கு எதிராக நீண்ட காலமாக போராட்டம் தொடர்கின்றது.
அத்தோடு நீண்டகால யுத்தத்திற்கான செலவீடுகளும் தொடர்ந்து இராணுவத்தை பாதுகாப்பதற்கான பெருமளவான நிதி ஆண்டுதோறும் விரயமாக்கி வருவதோடு யுத்த காலத்தில் பல மில்லியன் ரூபா கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இந்த விடயங்கள் பொருளாதார வீழ்ச்சிக்கு காரணமாயிருப்பது போன்ற விடயங்களும் இக்கால திருச்சபைத் தலைவர்கள் வெளிக் கொண்டுவர தயங்குவது ஏன்?
மேலும் 2019ஆம் ஆண்டு உயிர்ப்பு தின குண்டுத் தாக்குதல் காரணமாகவே கடவுள் நாட்டை இந்த நிலைக்கு இட்டுச் சென்றுள்ளார் என்பதோடு இந்த வருடம் உயிர்ப்பு தின தினத்தோடு நாட்டின் பிரச்சினைகள் முற்றுப் பெற்றுவிடும் என்பது இவர்களின் அரசியல் பொருளாதார குருட்டுத் தன்மையை மட்டுமல்ல கடவுள் பற்றிய இவர்கள் சிந்தனையின் மலட்டுத்தன்மை கொண்டதாகவே உள்ளது என்பதை வெளிப்படுத்தியுள்ளது.
இவர்களின் கூற்றுப்படி 2019ஆம் ஆண்டு குண்டுத்தாக்குதல் மட்டுமே நாட்டின் இன்றைய நிலைக்கு காரணம். கடவுள் அதற்காகவே தண்டிக்கின்றார் என்றால் வடகிழக்கில் நடந்த யுத்தத்தையும், இனப்படுகொலையையும், உறவுகள் காணாமலாக்கப்பட்டதையும், அரசியல் கைதிகள் நீண்ட காலமாக சிறையில் வாடுவதையும், நிலம் பறிக்கப்பட்டு சுதந்திரமிழந்த மக்களாக தமிழர்கள் வாழ்வதையும் கடவுளை ஏற்றுக் கொள்கிறாரா? அடிமட்ட மக்கள் நாளாந்த உணவுக்கு கையேந்துவதும் கடவுள் விருப்பமா? எனும் கேள்வியையும் கேட்க தோன்றுகின்றது.
தற்போதைய கிறிஸ்தவ கத்தோலிக்க தலைவர்கள் வடகிழக்கில் எத்தனையோ கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டும் காணாமலாக்கபட்டும் இருக்கையில் குறைந்தது அவர்களையாவது சிந்திக்க தவறுவது ஏன்? இவர்களின் சிந்தனையில் தெற்கின் கிறிஸ்தவ கடவுள் வேறு , வட கிழக்கு கிறித்தவர்களின் கடவுள் வேறு என்றா கூறுகின்றனர்?
கிறிஸ்தவ தலைவர்கள் ஒடுக்கப்படும் மக்களை பிரித்தும் ஒடுக்கப்பட்டவர்கள் தான் யாரால் கொடுக்கப்படுகிறோம் என்பதை தெளிவாக வெளிப்படுத்தாமல் இருப்பதும் அவர்கள் பற்று வைத்திருக்கும் கடவுளுக்கும் அவர்களின் திருமறை போதனைக்கும் எதிரானதே.
இவ்வருட உயிர்ப்பு தினத்திற்கு முன் நிறுவன திருச்சபையும் அதன் அமைப்புகளும் தலைமைத்துவங்களும் மீண்டும் திருமுழுக்குப் பெற வேண்டும். உண்மைக்கு திரும்ப வேண்டும். கிறிஸ்துவின் வாழ்வு மற்றும் உயிர்ப்பு வெளிச்சத்தில் எழுந்து நாட்டில் பிரச்சினைகளை அணுகி வரலாற்று ரீதியில் புரையோடிப் போயுள்ள அரசியல் பொருளாதார பிரச்சினைக்கு காரணமானவர்களை அடையாளப்படுத்தி வடகிழக்கு, மலையக மக்களினதும் உரிமைகளுக்காக குரல் எழுப்பி பொருளாதார ரீதியில் பாதிக்கப்படும் மக்களின் பாதுகாப்பை வலியுறுத்தி போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்பதே ஒடுக்கப்படும் அனைத்து மக்களினதும் கோரிக்கையும் வேண்டுகோளுமாகும் என அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.