சவேந்திர சில்வாவை தடை செய்ய ஆதரவு கோரி பிரித்தானிய அமைச்சர் போல் ஸ்கலியுடன் சந்திப்பு

சவேந்திர சில்வாவை தடை செய்ய ஆதரவு கோரி பிரித்தானிய அமைச்சர் போல் ஸ்கலியுடன் சந்திப்போன்று இன்று இடம்பெற்றுள்ளது.

இலங்கை இராணுவத்தளபதி சவேந்திர சில்வா உள்ளிட்ட போர்க்குற்றவாளிகளை பிரித்தானியாவின் உலகளாவிய மனித உரிமைகள் தொடர்பான தடை விதிப்பு அதிகாரசபையின் கீழ் (Global Human Rights Sanction Regime 2020) தடை செய்வதற்கு பிரித்தானிய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி பிரித்தானியாவின் சிறு கைத்தொழில், நுகர்வோர் மற்றும் தொழிலாளர் சந்தைகளிற்கான அமைச்சரும், சட்டன் மற்றும் சீம் பிராந்தியத்தின் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய, மதிப்பிற்குரிய போல் ஸ்கலி உடனான உயர்மட்ட சந்திப்பு ஒன்று செவ்வாய் (12/04/2022) மதியம் 12 மணியளவில் மெய்நிகர்வழி (zoom) ஊடாக இடம்பெற்றுள்ளது.

சட்ட ஆலோசகரும் மனித உரிமை செயற்பாட்டாளுமான திரு கீத் குலசேகரம் தலைமையில் இடம்பெற்ற இந்த முக்கிய சந்திப்பில் பழமைவாதக்கட்சிக்கான தமிழர்கள் அமைப்பின் (British Tamil Conservatives – BTC) செயலாளர் கஜன் ராஜ், இனப்படுகொலையை தடுப்பதற்கும் தண்டிப்பதற்குமான சர்வதேச மையத்தின் (ICPPG) பணிப்பாளர் அம்பிகை கே செல்வகுமார், The Sri Lanka Campaign for Peace and Justice (SLC) அமைப்பின் பிரச்சார பணிப்பாளர் மெலிசா றிங் (Melissa Dring), மற்றும் அதன் பிரதிப்பணிப்பாளர் பென்ஜமின் குமார் மொறிஸ் (Benjamin Kumar Morris) ஆகியோர் பிரதான பேச்சாளர்களாக கலந்துகொண்டு கருத்துக்களை பரிமாறினர்.

கீத் குலசேகரம் தனது தலைமை உரையின் போது,

இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் 140,000 இற்கும் மேற்பட்ட அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்பட்டதற்கு காரணமான இராணுவத்தளபதி சவேந்திர சில்வாவினை தடைசெய்ய போதுமான ஆதாரங்களை பிரித்தானிய வெளிவிவகார அமைச்சிற்கு (FCDO) ஏற்கனவே ITJP சமர்ப்பித்திருப்பதையும், அதுபோல் தற்போதும் தொடரும் கடத்தல்கள் சித்திரவதைகளில் இராணுவம் ஈடுபட்டு வருவதற்கான ஆதாரங்களாக இலங்கையில் கடந்த இரு வருடங்களிற்குள் சித்திரவதைக்குள்ளாகிய 200 பேரின் வாக்குமூலங்களின் அடிப்படையிலான அறிக்கையை (ICPPG) சமர்ப்பித்திருப்பதையும் குறிப்பிட்டு, இருந்தும் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சு இன்னும் உரிய நடவடிக்கை எடுக்க தவறியிருப்பதனை சுட்டிக்காட்டினார்.

இதனால் பாதிக்கப்பட்டவர்கள் கடும் விசனமடைந்திருப்பதாகவும், இது தொடர்பில் அடுத்த கட்ட நடவடிக்கையாக பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து சவேந்திர சில்வாவினை தடை செய்யக்கோரி அழுத்தம் கோரி வருவதாகவும் திரு கீத் குலசேகரம் எடுத்துரைத்தார்.

தொடர்ந்து, SLC அமைப்பின் பிரதிப்பணிப்பாளர் பென்ஜமின் குமார் மொறிஸ் உரையாற்றும் போது,

இலங்கையில் இடம் பெற்ற இனப்படுகொலைக்கு சவேந்திர சில்வா மீதான தடை முழுமையான தீர்வாக அமையாது என்ற போதிலும், நீதி நடவடிக்கைக்கு ஆரம்ப கட்டமாக இருக்கும் என்றும் தொடரும் சித்திரவதைகளை தடுக்க வழிவகுக்கும் என்றும் வலியுறுத்தினார்.

பழமைவாதக்கட்சிக்கான தமிழர்கள் அமைப்பின் செயலாளர் கஜன் ராஜ் கருத்துத் தெரிவிக்கும் போது,

தாங்கள் பல தடவைகள் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சிற்கு யுத்தக்குற்றவாளியான சவேந்திர சில்வாவினை பிரித்தானியா தடை செய்ய வேண்டுமென கோரியும் இதுவரை அதற்கான உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லையெனவும் தடைசெய்யும் நடவடிக்கை தாமதிப்பது ஏன் என FCDO இனை வினவுமாறும் கேட்டுக் கொண்டார்.

அத்துடன் இதனை செய்ய தவறும் பட்சத்தில், பிரித்தானியாவுக்கு ஐநா மனித உரிமை சபையில் தலைமை தாங்கும் அருகதை உள்ளதா என சந்தேகிக்க நேரிடும் என்றும் குறிப்பிட்டார்.

மேலும் அம்பிகை கே செல்வகுமார்,

இலங்கையில் தொடரும் சித்திரவதை மற்றும் மனித உரிமை மீறல்களிற்கு இதுவரை பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தி நீதி நாட்டப்படவில்லையெனவும் தமது அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட சாட்சிகளின் நேர்காணலில் அவர்கள் தங்கள் குடும்பத்தினரின் பாதுகாப்பு தொடர்பில் அச்சமுற்ற நிலையில் இருப்பதனையும் இங்கு கூட சிலர் அச்சுறுத்தல்களை எதிர்நோக்குவதனையும் அறியக்கூடியதாகவுள்ளதாகவும் தெரிவித்தார்.

கடந்த 2019 இலிந்து இன்றுவரை, ஊடகங்களால் பதிவுசெய்யப்பட்ட கிட்டத்தட்ட 800 மனித உரிமை மீறல் சம்பவங்களை தாங்கள் ஆவணப்படுத்தி இருப்பதாகவும், கடந்த இரண்டு வருடங்களில் மட்டும் கிட்டத்தட்ட 200 கடத்தல் மற்றும் சித்திரவதை இடம்பெற்றதுக்கான ஆதாரங்கள் தம்மிடம் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

தாம் மீண்டும் மீண்டும் FCDO இனை தொடர்பு கொண்டு பாதிக்கப்பட்டவர்களை சந்திப்பிற்கு கோரிக்கை விடுத்தும் உரிய பதில் கிடைக்காததினையும் மேலும் சுட்டிக்காட்டினார்.

அத்துடன் பாதிக்கப்பட்டவர்களை வெளிவிவகார அமைச்சர் நேரில் சந்திக்க ஏற்பாடு செய்து தரும்படியும் கேட்டுக்கொண்டார்.

இலங்கையில் இடம்பெற்ற இறுதிப்போரின் போதும் அதற்குப்பின்னரும் தொடர்ந்து இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நீதி நிலைநாட்டப்படவேண்டியதன் அவசியத்தையும், அமெரிக்கா சவேந்திர சில்வாவை தடை செய்தமையை போன்று பிரித்தானியாவும் தடை செய்யவேண்டும் என்று மெலிசா றிங் தனது உரையில் வலியுறுத்தினார்.

மேலும் கீத் குலசேகரம் தனது தொகுப்புரையின் போது,

பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களால் கொண்டுவரப்பட்ட முன்பிரேரணைக்கு (EDM 64) ஆதரவை வழங்குமாறும் தங்கள் தொகுதியிலுள்ள பாதிக்கப்பட்ட தமிழ்மக்கள் சார்பில் இராணுவத்தளபதி சவேந்திர சில்வாவினை தடை செய்யக்கோரி FCDO விற்கு அழுத்தம் கொடுக்கும் படியும் கேட்டுக்கொண்டார்.

அத்துடன் சமர்ப்பிக்கப்பட ஆதாரங்கள் அடிப்படையில் வெளிவிவகார அமைச்சு நடவடிக்கை எடுக்க தவறும் பட்சத்தில் மேல்முறையீடு (Appeal) அல்லது சட்டமீளாய்வு (Judicial Review) கோரி விண்ணப்பதற்கு குறித்த சட்டத்தில் இடம் உண்டா என்பதையும் தெளிவுபடுத்தும்படி வெளிவிவகார அமைச்சிடம் கேட்கும்படியும் கேட்டுக்கொண்டார்.

மேற்படி சந்திப்பில் சித்திரவதையில் நேரடியாக பாதிக்கப்பட்டவர்களான நிலக்ஜன் சிவலிங்கம் மற்றும் லக்ஸ்மன் திருஞானசம்பந்தர் ஆகியோர் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டதுடன் விஜய் விவேகானந்தன், விதுரா விவேகானந்தன் பிரசன்னா பாலச்சந்திரன் மற்றும் கிறிஸ்ரி நிலானி காண்டீபன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

அனைவரின் கருத்துக்களையும் உள்வாங்கிய அமைச்சர் தனது முழுமையான ஆதரவை வெளிப்படுத்தியதுடன் FCDO விற்கு தங்கள் தொகுதியிலுள்ள பாதிக்கப்பட்ட தமிழ்மக்கள் சார்பில் இராணுவத்தளபதி சவேந்திர சில்வாவினை தடை செய்யக்கோரி அழுத்தம் கொடுப்பதாகவும், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படாமைக்கான காரணத்தை கேட்டு பதில் தருவதாகவும் தெரிவித்தார்.

அத்துடன் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து, வெளிவிவகார அமைச்சருடன் இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாட ஏற்பாடு செய்வதாகவும் உறுதியளித்துள்ளார்.