ஜனாதிபதியை பதவியில் இருந்து விலகுமாறு வலியுறுத்தி, எந்தவித கட்சிகளின் பங்களிப்பும் இன்றி போராட்டங்கள் இடம்பெற்று வரும் நிலையில், ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக காலி முகத்திடலை அண்மித்து ‘ கோட்டா கோ கம ‘ என பெயரிடப்பட்டுள்ள போராட்ட களத்துக்கு சென்றதாக கூறி கைது செய்யப்பட்ட குட்டிகல பொலிஸ் நிலையத்துக்கு உட்பட்டு சேவையாற்றும் பொலிஸ் சார்ஜன் டப்ளியூ.எம். அமரதாசவை (30158) கொழும்பு நீதிவான் நீதிமன்றம் இன்று (15) பிணையில் விடுவித்தது.
கொழும்பு மேலதிக நீதிவான் கேமிந்த பெரேரா இதற்கான உத்தரவைப் பிறப்பித்தார்.
காலி முகத்திடல் போராட்ட களத்துக்கு பொலிஸ் சார்ஜன் ஒருவர், நேற்று (14) பொலிஸ் சீருடையில் வந்து போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த சம்பவம் பலரையும் ஈர்த்தது.
நாட்டில் தற்போது உள்ள நெருக்கடி நிலைமையால் ஏற்பட்டுள்ள அழுத்தங்களை தன்னால் சகிக்க முடியாது எனவும், நாளை தனது தொழில் இல்லாமல் போனாலும் தான் சுரங்கங்களில் பணியாற்றி ஏனும் வாழ்வதாக அந்த பொலிஸ் உத்தியோகத்தர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு மத்தியில் தெரிவித்தார்.
அத்துடன் தன்னை போலவே மனச் சாட்சியுடன் போராடும் பல பொலிஸ் உத்தியோகத்தர்கள் பொலிஸ் திணைக்களத்தில் இருப்பதாக தெரிவித்த அந்த உத்தியோகத்தர், அவர்களுக்கும் போராட்ட களத்துக்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.
‘ உங்கள் ஒவ்வொரு பெட்டன் பொல்லுத் தாக்குதலும், ஒவ்வொரு கண்ணீர்ப் புகைக் குண்டும் இந்த பிள்ளைகளைத் தாக்காது. அது உங்கள் பிள்ளைகளையும், பிள்ளைகளின் பிள்ளைகளையுமே சென்றடையும்.’ என இதன்போது அந்த பொலிஸ் உத்தியோகத்தர் அங்கிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்களை நோக்கி தெரிவித்தார்.
இவ்வாறான நிலையில், தன் மனசாட்சியை திறந்து போராட்டத்துக்கு ஆதரவளித்த குறித்த பொலிஸ் சார்ஜன் அமரதாச, நேற்று ( 14)பொலிஸ் விஷேட விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு, துறைமுக பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
அவருக்கு எதிராக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இது தொடர்பில் இரவோடிரவாக ஊடக அறிக்கை ஒன்றினை வெளியிட்டு பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவவும் அறிவித்தார்.
இவ்வாறான நிலையிலேயே கைதுசெய்யப்பட்ட பொலிஸ் சார்ஜன்ட் அமரதாச, இன்று ( 15) கொழும்பு நீதிவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டார்.
இதன்போது குறித்த சார்ஜன்ட்டுக்காக ஜனாதிபதி சட்டத்தரணி அரசகுலரத்ன தலைமையிலான 15 சட்டத்தரணிகள் மன்றில் ஆஜராகினர்.
பொலிசார், தண்டனை சட்டக் கோவையின் 162 ஆம் அத்தியாயத்தின் கீழும் பொலிஸ் கட்டளைச் சட்டத்தின் 82 ஆவது அத்தியாயத்தின் கீழும் சந்தேக நபர் குற்றங்களை புரிந்துள்ளதாக மன்றில் கூறினர்.
அதாவது, அரச ஊழியரான குறித்த சந்தேக நபர், அரசுக்கு பங்கம் ஏற்படும் வண்ணம் நடந்துகொண்டுள்ளதாகவும், பொலிஸ் அதிகாரியான அவர், சீருடையுடன் பொருத்தமற்ற இடமொன்றுக்கு சென்றுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
இந் நிலையில் மேலதிக விசாரணைகள் இடம்பெறும் நிலையில், சந்தேக நபரான சார்ஜன்டை விளக்கமறியலில் வைக்குமாறு விசாரணையாளர்கள் கோரினர்.
இதன்போது மன்றில் சந்தேக நபருக்காக ஆஜராகிய ஜனாதிபதி சட்டத்தரணி அரசகுலரத்ன, சந்தேக நபர் எந்த குற்றமும் இழைக்கவில்லை எனவும், அரசியலமைப்பு ஊடாக உறுதி செய்யப்பட்டுள்ள உரிமையையே அவர் பயன்படுத்தியதாகவும் குறிப்பிட்டார்.
அரசியலமைப்பின் ஊடாக வழங்கப்பட்டுள்ள கருத்து, கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்தை பயன்படுத்துவது குற்றமாகாது என அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
அத்துடன் அரசுக்கு பங்கம் ஏற்படுத்தும் விதமாக பொலிசார் குற்றம் சுமத்தியுள்ள போதும், அரசாங்கமே மக்களுக்கு பங்கம் ஏற்படுத்தியுள்ளதாக அவர் இதன்போது சுட்டிக்காட்டினார். எனவே சந்தேக நபரை பிணையில் விடுவிக்குமாறு அவர் வாதிட்டார்.
இந் நிலையிலேயே விடயங்களை ஆராய்ந்த கொழும்பு மேலதிக நீதிவான் கேமிந்த பெரேரா, 3 இலட்சம் ரூபா பெறுமதியான மூன்று சரீரப் பிணைகளில் சந்தேக நபரான சார்ஜன்டை விடுவித்தார்.
இது குறித்த மேலதிக வழக்கு விசாரணைகள் எதிர்வரும் 29 ஆம் திகதிவரை ஒத்தி வைக்கப்பட்டது.