நாட்டில் தற்போது நிலவும் நெருக்கடி நிலை காரணமாக புதிய அமைச்சரவையில் எந்தப் பதவியையும் ஏற்கப் போவதில்லை என தாம் தீர்மானித்துள்ளதாக முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் (ஓய்வு) சரத் வீரசேகர இன்று தெரிவித்துள்ளார்.
தனது தீர்மானம் தொடர்பில் சுருக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனைத் அவர் தெரிவித்துள்ளார்.
நாடு, புத்தசாசனம் மற்றும் மக்களுக்கான ஐக்கியத்துக்காக எப்போதும் நிற்பதாகவும், நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் தனது கடமையை தொடர்ந்தும் செய்வதாகவும் வீரசேகர மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெருமவும் அமைச்சரவை அமைச்சுப் பதவிகளை ஏற்கப்போவதில்லை என அறிவித்துள்ளார்.
உடனடியாக இளைஞர்கள் அடங்கிய அமைச்சரவை ஒன்று நியமிக்கப்படும் என எதிர்ப்பார்ப்பதாக ட்விட்டர் பதிவொன்றை மேற்கொண்டு அவர் தெரிவித்தார்.
இதேவேளை, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அரசாங்கத்தின் எந்தவொரு அமைச்சுப் பதவிகளையும் ஏற்காது என அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
நாட்டில் நிலவும் நெருக்கடி நிலைக்கு தீர்வு காணும் வரையில் எவ்வித அமைச்சுப் பதவிகளையும் ஏற்பதில்லை என கட்சி தீர்மானித்துள்ளதாக ட்விட்டர் பதிவொன்றை மேற்கொண்டு அவர் தெரிவித்துள்ளார்.
புதிய அமைச்சரவை இன்று (17) அல்லது நாளை (18) பதவியேற்கும் என ஊடகங்களி் செய்திகள் பரவி வருகின்றன.
புதிய அமைச்சரவையில் 15 அமைச்சர்களே நியமிக்கப்படவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எனினும் சமல் ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ மற்றும் ஷஷீந்திர ராஜபக்ஷ ஆகியோர் புதிய அமைச்சரவையில் நியமிக்கப்பட மாட்டார்கள் என தெரிவிக்கப்படுகிறது.
முன்னாள் அமைச்சர்களான காமினி லொகுகே, பந்துல குணவர்தன, மஹிந்தானந்த அளுத்கமகே, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் ரோஹித அபேகுணவர்தன ஆகியோரும் புதிய அமைச்சரவையை பிரதிநிதித்துவப்படுத்த மாட்டார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, புதிய அமைச்சரவையில் பல புதிய முகங்கள் அமைச்சர்களாக பதவியேற்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இராஜாங்க அமைச்சர்களின் தற்போதைய பதவிகள் அப்படியே இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.