சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு ஐக்கிய மக்கள் ஏற்பாடு செய்திருந்த மே தினக் கூட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் இடம்பெற்றது.
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் கொழும்பு – கெம்பல் பார்க் பகுதியில் ஐக்கிய மக்கள் சக்தியின் மே தினப் பேரணி ஆரம்பமானது.
பின்னர் அங்கிரருந்து பொரளை சென்று , பொரளையிலிருந்து கொழும்பு – தேசிய வைத்தியசாலை சந்தியூடாக தாமரை தடாக பிரதேசத்தைக் கடந்து சுதந்திர சதுக்கம் வரை பேரணி சென்றது. ‘சுதந்திரத்திற்கான போராட்டம்’ என்ற தொனிப்பொருளில் ஐக்கிய மக்கள் சக்தியின் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதில் ஐக்கிய மக்கள் சக்தியின் பங்காளி கட்சிகளான மனோ கணேஷன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணி, ரவுப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்ரஸ், ரிஷாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்ரஸ் என்பனவும் , அதனுடன் இணைந்த தொழிற்சங்கங்களும் இதில் கலந்து கொண்டன.
ஆயிரக்கணக்கான மக்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டமையால் சுதந்திர சதுக்கத்திற்குச் செல்லும் வீதிகள் மக்கள் கூட்டத்தால் நிரம்பின.
இதனால் இன்று மாலை 4 மணியின் பின்னர் அவ்வழியூடான சகல போக்குவரத்தும் ஸ்தம்பிதமடைந்தது. பாரிய மக்கள் கூட்டம் காணப்பட்டமையால் அப்பகுதியில் விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.