பிரதி சபாநாயகராக மீண்டும் தெரிவானார் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய

சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய 148 வாக்குகளை பெற்று மீண்டும் பிரதி சபாநாயகராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இம்மாத்தின் இரண்டாவது பாராளுமன்ற அமர்வு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று காலை ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில், பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு இடம்பெற்றது.

பிரதி பிரதி சபாநாயகர் பதவிக்கு ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய மற்றும் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் ஆகியோரின் பெயர்கள் முன்மொழியப்பட்டன.

இதையடுத்து இரகசிய வாக்கெடுப்பு இடம்பெற்ற நிலையில், சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய 83 மேலதிக வாக்குகளால் வெற்றி பெற்று மீண்டும் பிரதி சபாநாயகராக தெரிவு செய்யப்பட்டார்.

இவருடன் போட்டியிட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் 65 வாக்குளைப் பெற்றார்.

பிரதி சபாநாயகர் தெரிவிற்கான இரகசிய வாக்கெடுப்பில் மயந்த திசாநாயக்க, உத்திக பிரேமரத்ன, இம்ரான் மௌரூப், சி.வி.விக்னேஸ்வரன், விமல் வீரவன்ச, இரா.சம்பந்தன், ஜோன் செனவிரத்ன ஆகியோர் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது,தற்போது பிரித்தானியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள காரணமாக ரெலோ பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் கலந்துகொள்ளவில்லை.