தமிழ்நாட்டின் இலங்கைக்கான உதவி யாருக்கு பயன்படும்?-மே பதினேழு இயக்கம் கேள்வி

மே 17 இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டின் இலங்கைக்கான உதவி யாருக்கு பயன்படும்? எனக் கேள்வி எழுப்பியுள்ள மே பதினேழு இயக்கம், தமிழர்களின் வரலாற்றுத் தேவையை நிறைவேற்றிடும் வாய்ப்பை தமிழ்நாடு அரசு தவறவிடக் கூடாதெ வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பில் மே 17 இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இலங்கைப் பொருளாதாரப் பிரச்சனையின் அடிப்படை அதன் இராணுவதிற்கு மேற்கொள்ளும் ஆயுத செலவு. உலகின் மிகப்பெரிய இராணுவத்தை கொண்ட சீனா, ரசியா, அமெரிக்க போன்ற நாடுகளில் 1000 பேருக்கு 2 பேர் வீதமே இராணுவத்தினராக இருக்கும் பொழுது, இலங்கையில் 14 பேர் இராணுவத்தில் உள்ளார்கள்.

ஈழத்தின் தமிழர்-தமிழ்இசுலாமியர்-மலையகத்து தமிழ் மக்கள் தொகையை கழித்துவிட்டு பார்த்தால் இது இன்னும் அதிக விகிதமாக இருக்கும். ஏனெனில் இலங்கை இராணுவமென்பது சிங்களர்களுக்கு மட்டுமானது. இந்த கட்டமைப்பினை பாதுகாக்கவும், இதன் இராணுவத் தலைமைகளின் ஊழலாலும் இலங்கை பொருளாதாரம் பலியிடப்பட்டது.

2009 தமிழினப்படுகொலையின் போர் முடிந்து, கடந்த 13 ஆண்டுகளில் ரூ.1,85,000 கோடி இராணுவத்திற்கு செலவு செய்யப்பட்டது. இது இன்றும் தொடர்கிறது. இலங்கை மக்களுக்கு பெட்ரோல், டீசல், உணவு, மருந்து பற்றாக்குறை உள்ளதை கவலையுடன் பார்க்கும் உலகிற்கு, இலங்கை இராணுவத்தில் இதற்கான தட்டுப்பாடு இல்லாதது கண்களில் படுவதில்லை. இன்றும் அதிக செலவு பிடிக்கும் இராணுவ-கடற்படை பயிற்சிகளை செய்கிறார்கள்.

இத்தனைக்கும் இந்தியாவை தவிர வேறு நாடுகள் அருகில் இல்லாத பாதுகாப்பான நாட்டிற்கு அன்றாட இராணுவ பயிற்சி நிகழ்கிறது. மேலும், ஜெர்மனி-பிரான்ஸ்-இங்கிலாந்தை விட பெரிய இராணுவத்தை வைத்திருக்கிறது இலங்கை. இந்த பெரும்படை தமிழர்கள் வசிக்கும் வடக்கு, கிழக்கு பகுதியிலேயே நிலை கொண்டுள்ளது. தமிழர்கள் மீது அடக்குமுறை செலுத்துவதோடு தமிழர்களை படுகொலையும் செய்கிறது. மேலும், தமிழர் நிலங்களை ஆக்கிரமிக்கிறது.

இலங்கையின் இந்த இராணுவக் கட்டமைப்பை கலைக்காமல் இலங்கையின் பொருளாதாரம் மீளாது. இந்த இராணுவத்தை சர்வதேச விசாரணைக்கு ஒப்படைக்காமல் ஈழத்தமிழர்களின் வாழ்வு வளம்பெறாது. இந்த இராணுவத்தையும், அதன் தலைமைகளான இராஜபக்சே குடும்பம், சிங்கள பெளத்த பேரினவாதத்தை எதிர்கொள்ளாமல், இன்று நிலவும் பொருளாதார நெருக்கடியை தீர்க்க முயல்வது சனநாயக விரோதம் என்பது மட்டுமல்ல, இனவெறி கூட்டத்தை பாதுகாப்பதாகிவிடும்.

மேலும், தமிழ்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் வகையில் ஒப்பந்தங்களை கைச்சாத்திடாமல், கொல்லபட்ட மீனவர்களின் கொலை வழக்கை நடத்தி இலங்கை கடற்படை மீது நடவடிக்கையை துவக்க தமிழ்நாடு அரசும், முதலமைச்சரும் கோரிக்கை வைப்பதன் மூலம் நம் மீனவ மக்களின் நலனை முன்னிறுத்த முடியும். இதற்கான சரியான காலகட்டம் இதைத்தவிர வேறென்னவாக முடியும்? இராஜபக்சே சகோதரர்கள், இராணுவத் தளபதிகளை சர்வதேச இனப்படுகொலை விசாரணைக்கு ஒப்படைப்பதும் தமிழ்நாட்டு தமிழர்களின் பெரும்பொறுப்பு.

இந்த நடவடிக்கைகளே ஈழத்தமிழர்களுக்கும், ஈழ இசுலாமியருக்கும், மலையகத் தமிழர்களுக்கும், சிங்கள ஏழைகளுக்கும் நாம் செய்யும் பேருதவியாகும்.

ஏனெனில், இம்மக்களை நெருக்கடிக்குள்ளாக்கிய சிங்கள ஆட்சியாளர்களையும், இன-மதவெறியர்களையும் பாதுகாக்கும் பணியில் இந்திய பார்ப்பனிய-இந்து மதவெறியர்கள் இறங்கியுள்ள நிலையில், அதே நடவடிக்கைகளில் தமிழ்நாட்டுத் தமிழர்களையும் ஈடுபடுத்துவது இந்துத்துவ-சிங்கள வெறியர்களை இப்போதிருக்கும் நெருக்கடியிலிருந்து பாதுகாக்கவே செய்யும்.

உலகெங்கும் இனப்படுகொலை செய்த ஆட்சியாளர்களை பொருளாதார நெருக்கடி கொண்டே சனநாயக ஆற்றல்கள் வீழ்த்தினார்கள். இவ்வழியிலேயே இசுரேல் மீதான பொருளாதாரத் தடையை பாலஸ்தீனர்கள் கோருகிறார்கள். இவ்வழியிலேயே தென்னாப்பிரிக்காவின் வெள்ளை இனவெறி அரசை தனிமைப்படுத்தி பலமிழக்கச் செய்து வீழ்த்தினார்கள்.

இது போன்ற நிலைப்பாட்டையே வங்க இனப்படுகொலைக்காக பாகிஸ்தான் மீது இந்தியா கோரியது. கடந்த காலத்தில் தாலிபன்கள் மீது பொருளாதார ஒதுக்குதலை இந்தியாவும், உலகும் செய்தது. இந்நடவடிக்கைகளால் சாமானியர் பாதிக்கப்பட்டாலும், அம்மக்கள் மீதான நெருக்கடிக்கு காரணமான பயங்கரவாத அரச கட்டமைப்பு தகர்க்கப்பட்டது.

ஆகவே, எவ்வித மனித உரிமை-சட்டப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ளாத மனிதாபிமான உதவியென்பது நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வதாகும். குற்றவாளி சிங்கள ஆட்சியாளர்களை அப்புறப்படுத்தி தமிழர்களை இராணுவப் பிடியிலிருந்து மீட்டு, தமிழர் பகுதிகளுக்கான சுயநிர்ணய உரிமையை நிலைநாட்டாத கட்டுபாடற்ற பொருளாதார உதவி, இராஜபக்சேக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் பேருதவியாகும். அதை தவிர்த்து சிங்களப் பேரினவாதத்தின் கழுத்தில் தூக்குக்கயிரை மாட்டும் சந்தர்ப்பத்தையும், வாய்ப்பையும் தமிழ்நாட்டு முதலமைச்சர் இழக்க வேண்டாம்.

சிங்கள பேரினவாதத்தோடு மோதி வீழ்த்தும் வாய்ப்புள்ள இச்சமயத்தை வீணடித்திடாமல் செயல்திட்டத்தை வகுக்கவேண்டிய பொறுப்பு தமிழ்நாட்டின் திமுக அரசிற்கு உண்டு.

இந்த வரலாற்று வாய்ப்பை பயன்படுத்தி தமிழீழத் தமிழர்களுக்கான சுயநிர்ணய உரிமை, பொதுவாக்கெடுப்பு, அரசியல் சிறைவாசிகள் விடுதலை, தமிழர் பகுதியிலிருக்கும் இராணுவ வெளியேற்றம், காணாமல் ஆக்கப்பட்டோர் மீதான பொறுப்புகூறல், மேலதிகமாக இனப்படுகொலை, போர்க்குற்றம் மீதான சர்வதேச விசாரணைக்கு கோரிக்கைகளை இந்திய அளவில் மாநில கட்சிகளிடத்தில் முன்நகர்த்தும் ஆக்கப்பூர்வ அரசியலே இன்றையத் தேவை.

இவற்றையே தமிழ்நாடு அரசிடம் உலகத் தமிழினம் எதிர்பார்க்கிறது. அதனையே தமிழ்நாடு அரசிடம் மே பதினேழு இயக்கம் கோரிக்கையாக முன்வைக்கிறது” என்று கூறப்பட்டுள்ளது.