நாட்டின் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் அனைத்து வன்முறை சம்பவங்களுக்கும் மஹிந்த ராஜபக்ஷவே பொறுப்புக்கூறவேண்டும்.
அத்துடன் ஜனாதிபதி தனது பதவியில் இருந்து விலகும் செய்தியை விரைவாக அறிவிக்கும்வரை மக்களின் போராட்டம் தொடரும் நிலையே இருந்து வருகின்றது என புத்திஜீவிகள் தெரிவித்தனர்.
நாட்டின் தற்போதைய நிலைதொடர்பாக நேற்று புத்திஜீவிகள் மற்றும் கலைஞர்கள் சூம் தொழிநுட்ப வசதியுடன் மேற்கொண்ட கலந்துரையாடலின் போதே இவ்வாறு தெரிவித்தனர்.
இங்கு கருத்து தெரிவித்த ஓமல்பே சோபித்த தேரர் குறிப்பிடுகையில்,
நாட்டில் வன்முறை இடம்பெற்று பாரிய சேதங்கள் இடம்பெற்றமைக்கான பிரதானமாக பொறுப்புக்கூறவேண்டியவர் மஹிந்த ராஜபகஷவாகும். அதேபோன்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ்வும் தனது தம்பியின் பொறுப்பில் இருந்து விடுபட முடியாது. அவரும் இதற்கு பொறுப்புக்கூறவேண்டும்.
மஹிந்த ராஜபக்ஷ எந்தளவு முட்டாள் தனமான, மோசமானவர் என்பது நேற்றைய (நேற்று முன்தினம்) சம்பவத்துடனே விளங்கிக்கொள்ள முடியுமாகி இருக்கின்றது. அதிகார பேராசையே இதற்கு காரணமாகும்.
காலி முகத்திடலில் மக்கள் அமைதியான போராட்டத்தையே மேற்கொண்டுவந்தனர். அதனையே மஹிந்த ராஜபக்ஷ்வின் ஆதரவாளர்கள் வன்முறைக்கு எடுத்துச்சென்றுள்ளனர்.
எனவே நாட்டில் இடம்பெற்ற மிகமோசமான இந்த சம்பவங்களுக்கு பிரதானமாக மஹிந்த ராஜபக்ஷ் பொறுப்புக்கூறவேண்டும் என்றார்.
பேராசிரியர் அனுர உதுவன்கே தெரிவிக்கையில், நாட்டில் இந்தளவு பாரிய வன்முறை இடம்பெற்றுள்ள நிலையிலும், ஜனாதிபதி உண்மையான மக்கள் தலைவர் என்றால், அவர் மக்களிடம் மன்னி்ப்பு கோரி, ஜனாதிபதி பதவியில் இருந்து விலகுவதை அறிவிக்கவேண்டும்.
அதேபோன்று நாட்டின் தற்போதைய நிலைமையை கட்டுப்படுத்தி, பொறுத்தமான ஆட்சியொன்றை அமைப்பதற்கு அவர் எவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்போகிறார் என்பதை உடனடியாக அறிவிக்கவேண்டும். அதுவரை இந்த போராட்டத்தை மக்கள் முன்னுக்கு கொண்டுசெல்வார்கள் என்றே நான் நம்புகின்றேன் என்றார்.
சிறிஜயவர்த்தனபுர பல்கலைக்கழக அரசியல் பிரிவு பீடாதிபதி விசாக்கா சூரியபண்டார தெரிவிக்கையில், தற்போதைய நிலைமையில் இடைக்கால ஆட்சி முறைக்கு செல்லவேண்டும். அந்த அடைக்கால ஆட்சியின் பிரதமரால்தான் ஜனாதிபதி பதவி விலகவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கவேண்டும்.
அத்துடன் சட்டத்தரணிகள் சங்கத்தின் நிபந்தனைகளுக்கு ஜனாதிபதி ஓரளவு இணக்கம் தெரிவித்திருப்பதன் மூலம் அவர் பச்சை விளக்கை ஒளிக்கவிட்டிருக்கின்றார். அந்த பச்சை விளக்கு முழுமையாக ஒளிரவேண்டும் என்றால், போராட்டக்காரர்களின் அமைதியான போராட்டம் தொடரவேண்டும். ஆனால் அமைதிப்போராட்டம் வேறுவிதமாக மாறினால் நிலைமையும் வேறு விதமாக மாறும் வாய்ப்பு இருக்கின்றது என்றார்.