’யாழ்ப்பாணத்துக்கு சென்ற முதலாவது இந்திய பிரதமர்’

வணக்கம் என்று சொல்லி தனது உரையை தொடங்கினார் மோதி.

மீண்டும் தமிழ் நாட்டிற்கு வருவது என்பது எப்போதுமே அருமையாக இருக்கும் ஒன்று. இது மிகவும் சிறப்பான ஒரு பூமி. இந்த மாநிலத்தின் மக்கள், கலாசாரம், மொழி என அனைத்தும் சிறப்பானவை.

பாரதியார் அவர்கள் செந்தமிழ் நாடு எனும் போதினிலே இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே என மிக அழகாக பாடியுள்ளார்.

நண்பர்களே ஒவ்வொரு துறையிலும் தமிழ்நாட்டை சேர்ந்த யாராவது ஒருவர் தலைசிறந்து விளங்குகிறார்.

அண்மையில் காது கேளாதோருக்கான ஒலிம்பிக்ஸ் குழுவினருக்கு என் இல்லத்தில் வரவேற்பு அளித்தேன். தமிழ் மொழி நிலையானது, தமிழ் கலாசாரம் உலகம் முழுவதும் பரந்துள்ளது. சென்னை முதல் கனடா வரை, மதுரை முதல் மலேசியா வரை, நாமக்கல் முதல் நியூயார்க் வரை, சேலம் முதல் தென் ஆப்ரிக்கா வரை பொங்கல் மற்றும் புத்தாண்டு காலங்கள் மிகுந்த ஆர்வத்துடன் கொண்டாடப்படுகிறது.

தமிழ்நாட்டின் வளர்ச்சி பயணத்தில் மேலும் ஒரு சிறப்பான அத்தியாயத்தை கொண்டாட நாம் அனைவரும் இங்கே கூடியிருக்கின்றோம். 31 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட திட்டங்கள் இங்கே ஒன்று தொடங்கி வைக்கப்பட இருக்கின்றன அல்லது அவற்றுக்கு அடிக்கல் நாட்டப்பட இருக்கின்றன.

ஐந்து ரயில் நிலையங்கள் சீரமைக்கப்படுவது குறித்து நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.

எதிர்கால தேவைகளை கருத்தில் கொண்டு நவீனமயமாக்கலும் மேம்பாடும் செய்யப்படுகின்றன. அதே நேரத்தில் இது உள்ளூர் கலை, கலாசாரத்துக்கு ஏற்படையதாகவும் இருக்கும்.

மதுரைக்கும் தேனிக்கும் இடையேயான பாதை மாற்றம் விவசாயிகளுக்கு உதவியாக இருக்கும்.

திருவள்ளூர் முதல் பெங்களூர் வரை, எண்ணூர் முதல் செங்கல்பட்டு வரையுமான இயற்கை எரிவாயு குழாய் தொடக்கம் காரணமாக தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம், கர்நாடகம், ஆகிய மாநில மக்களுக்கு இயற்கை எரிவாயு கிடைப்பது எளிதாக இருக்கும்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சியை ஊக்கப்படுத்தவும், சென்னை துறைமுகத்தை பொருளாதார வளர்ச்சியின் மையமாக்கும் தொலைநோக்கு பார்வையோடும், சென்னையில் ஒரு பல்நோக்கு ஏற்பாட்டியல் பூங்காவிற்கான அடிக்கல் இன்று நாட்டப்பட்டிருக்கிறது.

உள்கட்டமைப்பு வசதிகளுக்கு முக்கியத்துவம் அளித்த நாடுகள் எல்லாம் வளரும் நாடுகள் என்ற நிலையில் இருந்து வளர்ந்த நாடுகள் என்ற நிலைக்கு உயர்ந்தன என்பதை வரலாறு நமக்கு கற்பிக்கிறது.

தலைசிறந்த தரமும் நீடித்த தன்மையும் உடைய உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதில் இந்திய அரசு முழு கவனம் செலுத்தி வருகிறது. நான் உள்கட்டமைப்பு பற்றி பேசும்போது சமூக மற்றும் புற கட்டமைப்பு பற்றியே குறிப்பிடுகின்றேன்.

தமிழ் மொழியையும் கலாசாரத்தையும் மேலும் பிரபலப்படுத்துவதற்கு இந்திய அரசு முழு அர்ப்பணிப்போடு செயல்படுகிறது. செம்மொழி தமிழாய்வு மையத்திற்கு புதிய வளாகம் ஒன்று இந்த ஆண்டு ஜனவரி மாதம் சென்னையில் தொடங்கப்பட்டது. இந்த புதிய வளாகத்திற்கு முழுக்க முழுக்க மத்திய அரசே நிதி வழங்குகிறது.

பனாரஸ் பல்கலைக்கழத்தில் தமிழ் படிப்பிற்காக சுப்ரமணிய பாரதி பெயரில் ஒரு இருக்கை அண்மையில் அறிவிக்கப்பட்டது என மோதி உரையாற்றினார்.

மேலும் அவர் தனது உரையில் இலங்கை குறித்தும் குறிப்பிட்டார்.

“இலங்கை குறித்து நீங்கள் கவலை கொள்வீர்கள் என்று எனக்கு தெரியும். நட்பு ரீதியாகவும், அண்டை நாடு என்ற காரணத்தினாலும் இந்தியா, தன்னால் முடிந்த உதவிகளை செய்கிறது.” என்று தெரிவித்தார் மோதி.

இலங்கை சிரமான சூழ்நிலையை கடந்துகொண்டு இருக்கிறது எனவும் ஒரு நெருங்கிய நண்பன் என்ற வகையிலும் அண்டை நாடு என்ற ரீதியிலும் இந்தியா அனைத்துவிதமான உதவிகளையும் வழங்கிவருகிறது என்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

தமிழகத்துக்கு விஜயம் செய்த பிரதமர் நரேந்திர மோடி அங்கு நடைபெற்ற வைபவத்தில் மேலும் உரையாற்றுகையில்,

உணவு, எரிபொருள், மருந்து ஏனைய அத்தியாவசிய பொருட்கள் போன்ற உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. பல இந்திய அமைப்புகளும் தனி நபர்களும் இலங்கையின் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகம் உள்ளிட்ட பகுதிகளில் வாழும் மக்களுக்காக உதவிகளை வழங்கியுள்ளனர்.

இலங்கைக்கு ஆதரவு வழங்குவதில் சர்வதேச அமைப்புகள் மத்தியில் இந்தியா உரக்க பேசியுள்ளது. ஜனநாயம், ஸ்திரத்தன்மை, பொருளாதார மீட்பு ஆகியவற்றுக்காக இலங்கை மக்களுக்கு இந்தியா துணை நிற்கும். யாழ்ப்பாணத்துக்கு சில ஆண்டுகளுக்குமுன் சென்றதை என்னால் மறக்கமுடியாது. யாழ்ப்பாணத்துக்கு சென்ற முதலாவது இந்திய பிரதமரும் நானே என்று தெரிவித்துள்ளார்.