தமிழ் முன்னணியை உருவாக்க வேண்டும்; சொல்ஹெய்ம் வலியுறுத்தல்!

‘தமிழ்த் தேசியவாத அரசியல் தரப்புகள் அர்த்தபூர்வமான மாற்றங்களுக்காக பொதுவான தமிழ் முன்னணியை உருவாக்க வேண்டும்’, – இவ்வாறு நோர்வேயின் இலங்கைக்கான முன்னாள் விசேட சமாதான தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

அத்துடன், பொருளாதார நெருக்கடி மற்றும் இனப்பிரச்னைக்கு கூட்டுத்தீர்வுகளை காண்பதற்கு சிங்கள, முஸ்லிம்கள் மத்தியில் உள்ள முற்போக்கான தரப்புக்களை நோக்கி நேசக்கரங்களை நீட்டுங்கள் என்பதும் இந்த தருணத்தில் தமிழ்த் தேசியவாத அரசியலுக்கான எனது ஆலோசனை என்றும் அவர் கூறியுள்ளார்.

திருகோணமலையில் இயங்கும் சிந்தனைக்கூடம் ஒன்றுக்கு அளித்த நேர்காணலிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அந்த நேர்காணலில், அவரிடம் ‘தற்போதைய தருணத்தில் தமிழ் தேசியவாத அரசியலுக்கான உங்கள் ஆலோசனை என்ன? இந்த நெருக்கடிகள் காரணமாகஇலங்கை அரசியலில் ஆழமான மாற்றங்கள் ஏற்படும் என கருதுகின்றீர்களா? என்ற கேள்விகள் எழுப்பப்பட்டன.

இவற்றுக்கு பதிலளித்த அவர்,

‘அமைதியான வழிமுறைகைளை தொடர்ந்தும் பின்பற்றுங்கள் -அர்த்த பூர்வமான மாற்றங்களுக்காக பொதுவான தமிழ் முன்னணியை உருவாக்குங்கள்,

பொருளாதார நெருக்கடி மற்றும் இனப்பிரச்னைக்கு கூட்டுத்தீர்வை காண்பதற்கு சிங்கள, முஸ்லிம்கள் மத்தியில் உள்ள முற்போக்கான தரப்புகளை நோக்கி நேசக்கரங்களை நீட்டுங்கள்’,என்றார்.

மேலும், இலங்கை விவகாரத்தை உன்னிப்பாக அவதானிப்பவர் என்ற அடிப்படையில் ராஜபக்ஷ பரம்பரையின் எதிர்பாராத வீழ்ச்சி குறித்த உங்கள் கருத்து என்ன? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர்,

‘ராஜபக்ஷக்களின் வீழ்ச்சியின் வேகம் பல அவதானிகளுக்கு ஆச்சரியத்தை அளித்துள்ளது. அவர்கள் மிகப்பெரும் பெரும்பான்மையை பெற்று மூன்று வருடங்களே ஆகின்றன. அதிகாரத்தை ஒரே குடும்பத்திடம் அதிகளவு குவித்தமையும், பொருளாதாரத்தை திறமையற்ற விதத்தில் கையாண்டமையும் இந்த வீழ்ச்சிக்கு காரணம். கோவிட் பரவலால் சுற்றுலாப்பயணிகள் வராததால் பெருமளவு வருமானத்தையும், வெளிநாட்டில் உள்ள இலங்கை தொழிலாளர்களின் வருமானத்தையும் அவர்கள் இழந்தனர். அந்த வகையில் அவர்கள் துரதிர்ஷ்டசாலிகள்.

இறுதியில் வாழ்க்கை செலவீனங்கள் நாளாந்தம் அதிகரித்ததும் எரிபொருள் பற்றாக்குறையையும் இலங்கையர்கள் தாங்கிக்கொள்ள முடியாத விடயங்களாகக் காணப்பட்டன’ – என்றார்.

யுத்தத்துக்கு பிந்திய இலங்கை முடிவற்ற விதத்தில் நிச்சயமற்றதாக – ஸ்திரமற்றதாக காணப்படுகின்றது. 2015இல் இடம்பெற்ற ஆட்சி மாற்றம் இலங்கை யில் ஜனநாயக கட்டமைப்புகள் மீண்டும் வலுப்படுத்தப்படும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியது, எனினும் 2019 இல் ராஜபக்ஷக்கள் மீண்டும் அதிகாரத்துக்கு வந்தவுடன் அது முழுமையாக தோல்வியடைந்தது, நாடு தற்போது மீண்டும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது, இதனை எவ்வாறு பார்க்கின்றீர்கள் ? இலங்கை ஏன் தொடர்ந்தும் அரசியல் ரீதியில் நோயுற்றதாக காணப்படுகின்றது? என்ற கேள்விகளுக்கு பதிலளித்த அவர்,

‘பல தசாப்த கால நெருக்கடிகளுக்கு பின்னரும் சிங்கள – பௌத்தர்கள் ஆதிக்கம் செலுத்தும் கொள்கையில் சிறுபான்மை தமிழர்கள் முஸ்லிம்களுக்கான சுயாட்சி என்ற விடயத்துக்கு இன்னமும் தீர்வு காணப்படவில்லை. அனைத்து மக்களுக்கும் ஏற்ற விதத்தில் இந்த விவகாரத்துக்கு தீர்வை காணவேண்டும் என இலங்கை பிடிவாதம் பிடிக்கின்றது.

இதற்கப்பால் சிங்கப்பூரின் லீ குவான் யூ அல்லது இந்தியாவின் நரேந்திரமோடி போன்றவர்கள் வழங்கிய தொலைநோக்குடன் கூடிய தலைமைத்துவத்தை வழங்கக் கூடிய தலைவர்கள் இலங்கைக்கு கிடைக்கவில்லை. ஸ்திரமான அபிவிருத்தியடையும் பொருளாதாரம் அனைவருக்கும் நன்மையளிக்கும். அரசாங்கங்கள் நிதியை செலவிடுவதை மாத்திரம் முன்னெடுக்கமுடியாது, வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கு உறுதியான தனியார துறையை கட்டியெழுப்பவேண்டும், வரவு – செலவுதிட்டத்தை சமப்படுத்தக்கூடிய வரிகளை அறிமுகப்படுத்தவேண்டும்’, என்றார்.

இதேபோல, ‘ரணில் விக்கிரமசிங்கமீண்டும் ஆளும் அரசியலில் நுழைந்துள்ளார். இதனை எப்படி பார்க்கிறீர்கள் – சமாதான அனுசரணையாளர் என்ற அடிப்படையில் நீங்கள் அவருடன் நெருங்கிபணியாற்றினீர்கள் – விமர்சனங்களிற்கு அப்பால் தற்போதைய நெருக்கடியை கையாளக்கூடியவர் அவர்தான் என சிலர்கருதுகின்றனர். பொருளாதார நிலையை ரணில் விக்கிரமசிங்கவால் திறமையான விதத்தில் கையாள முடியும் என நீங்கள் கருதுகின்றீர்களா? என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு,

‘மிகவும் நெருக்கடியான தருணத்தில் எனது நண்பர் ரணிலுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன். ரணிலை விட தற்போதைய பொருளாதாரத்தை சிறப்பாக புரிந்துகொள்ளக் கூடிய – பேச்சுக்களில் சிறப்பாக ஈடுபடக் கூடிய வேறு ஒரு தற்போதைய இலங்கை தலைவரை நினைத்துப் பார்ப்பது கடினம். இதற்கு அப்பால் ரணில் ஒரு சிறந்த பண்பார்ந்த மனிதர்.

ஆனால், ராஜபக்ஷக்களை வீழ்த்தியவர்களின் நம்பிக்கையை பெறுவதற்கு அவர் இன்னமும் நீண்டதூரம் செல்ல வேண்டும். இலங்கையின் இளைஞர்களின் கரிசனைகளை செவிமடுப்பதற்கும், நீண்ட கால தீர்வுகளுக்கு அவர்களின் பலத்தை உள்வாங்குவதற்கும் அவர்களை நோக்கி ரணில் விக்கிரமசிங்க தனது நேசக்கரத்தை நீட்டவேண்டும் – என்றும் கூறினார்.